Published:Updated:

``தி.மு.க ஆபீஸில் தூக்குமாட்டி செத்திருவேன்!" - அடிக்கப் பாய்ந்த எம்.எல்.ஏ-வை அலறவைத்த நகரச் செயலாளர்

‘‘மேல கை வெச்சிப்பார்... நீ செஞ்ச தில்லுமுல்லு வேலைகளைக் கைப்பட எழுதி வெச்சிட்டு இங்கேயே தூக்குமாட்டி தற்கொலை செஞ்சிப்பேன். தில் இருந்தா அடிச்சிப்பார்...’’ என்று சவால்விட்டு, எம்.எல்.ஏ-வை நடுநடுங்க வைத்தார், பிஞ்சி பிரகாஷ்.

``தி.மு.க ஆபீஸில் தூக்குமாட்டி செத்திருவேன்!" - அடிக்கப் பாய்ந்த எம்.எல்.ஏ-வை அலறவைத்த நகரச் செயலாளர்
``தி.மு.க ஆபீஸில் தூக்குமாட்டி செத்திருவேன்!" - அடிக்கப் பாய்ந்த எம்.எல்.ஏ-வை அலறவைத்த நகரச் செயலாளர்

டிக்கப் பாய்ந்த தி.மு.க எம்.எல்.ஏ-வின் முகத்தில் வேட்டியை அவிழ்த்து வீசிய நகரச் செயலாளர் ஒருவர், ‘உன் பெயரை எழுதி வைத்துவிட்டு தி.மு.க அலுவலகத்திலேயே தூக்குமாட்டி செத்துடுவேன்’ என்று மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூர் மாவட்ட தி.மு.க-வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

ராணிப்பேட்டையில் உள்ள வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கடந்த 30-ம் தேதி, ‘மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்... மக்கள் மனதை வெல்வோம்’ என்ற பெயரில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான காந்தி, கூட்டம் தொடங்குவதற்கு முன் ராணிப்பேட்டை நகரச் செயலாளர் பிஞ்சி பிரகாஷை தனியாக அழைத்துப் பேசினார். அப்போது, அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இருவரும் மிகவும் மோசமான கெட்டவார்த்தைகளால் மாறிமாறி திட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த பிஞ்சி பிரகாஷ், தாம் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, எம்.எல்.ஏ காந்தியின் முகத்தில் விட்டெறிந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எல்.ஏ, ‘சடார்’ என்றெழுந்து அடிக்கப் பாய்ந்தார்.

‘‘மேல கை வெச்சிப்பார்... நீ செஞ்ச தில்லுமுல்லு வேலைகளைக் கைப்பட எழுதி வெச்சிட்டு, இங்கேயே தூக்குமாட்டி தற்கொலை செஞ்சிப்பேன். தில் இருந்தா அடிச்சிப்பார்...’’ என்று சவால்விட்டு, எம்.எல்.ஏ-வை நடுநடுங்க வைத்தார், பிஞ்சி பிரகாஷ். இருதரப்பு ஆதரவாளர்களும் திபுதிபுவென ஓடிவந்து, எம்.எல்.ஏ-வையும், நகரச் செயலாளரையும் இரு பக்கமும் நிறுத்த, பின் ‘கேங்வார்’ போல் மோதிக்கொள்ளத் தயாராகினர். எம்.எல்.ஏ குறுக்கிட்டு, ‘‘தி.மு.க.-விலிருந்து உன்னை நீக்கிவிட்டேன். கட்சி அலுவலகத்தைவிட்டு வெளியே போ...’ என்று பிஞ்சி பிரகாஷை எச்சரித்தார். ‘இதென்ன உன் கட்சியா... நான் நகரச் செயலாளர். என்னை நீக்கும் அதிகாரம் உனக்கில்லை. கட்சித் தலைமையிடம் உன்மீது புகார் அளிப்பேன்’ என்று பதிலடி கொடுத்த பிஞ்சி பிரகாஷ், அவிழ்தெறிந்த வேட்டியை மீண்டும் எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றார்.

இவ்வளவு பெரிய கலாட்டா ஏன் என்பது பற்றி தி.மு.க நிர்வாகிகள் சிலர் நம்மிடம் கூறுகையில், ‘‘வேலூர் மாவட்ட தி.மு.க-வில் சாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. எம்.எல்.ஏ காந்தி, நாயுடு தன் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் அரசியலுக்கு வந்தவர். மாற்றுச் சமூக நிர்வாகிகளுடன் நெருக்கமாகப் பழக மாட்டார். இதனால், இரண்டு கோஷ்டிகளாகத்  தி.மு.க பிளவுபட்டு நிற்கிறது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நகரச் செயலாளர் பிஞ்சி பிரகாஷ், எதிர்கோஷ்டியில் இருக்கிறார். ராணிப்பேட்டை நகருக்குள் நடைபெறும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்த கான்ட்ராக்ட் பணிகளாக இருந்தாலும் இரண்டு சதவிகித கமிஷன் தொகையை வசூலித்து மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.எல்.ஏ-விடம் கொடுத்துவிட வேண்டும். ஆனால், பிஞ்சி பிரகாஷ், கமிஷன் தொகையை வசூலிக்க மறுத்துவிட்டார். இதுதொடர்பான பிரச்னை முத்திப்போய், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது’’ என்றனர்.

இதுபற்றி பிஞ்சி பிரகாஷிடம் கேட்டதற்கு, ‘‘நகரச் செயலாளராக இருக்கும் என்னை, எம்.எல்.ஏ காந்தி இதுநாள் வரை மரியாதையாகப் பேசியதில்லை. கலைஞர் காப்பீடு மற்றும் ஜெயலலிதா மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் எனக்குச் சமீபத்தில் இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது. கட்சி சார்பில் எனக்கு உதவுவதற்கு எம்.எல்.ஏ முன்வரவில்லை. உதவி செய்ய வந்தவர்களையும் எம்.எல்.ஏ தடுத்துவிட்டார். கான்ட்ராக்ட் பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மொத்தமாகச் சேர்த்து 10 சதவிகித கமிஷன் தொகை கொடுத்திட வேண்டும். அப்போதுதான், அந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவிடுவார்கள். இல்லையெனில், ஏதாவது பிரச்னையைக் கிளப்பி கான்ட்ராக்ட் பணிகளைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள். என்னையும் கமிஷன் தொகை வசூலிக்குமாறு எம்.எல்.ஏ கூறினார். இந்தப் பிரச்னை சம்பந்தமாக ஆதரவாளர்களுடன் சென்று தளபதியைச் சந்தித்து எம்.எல்.ஏ காந்தி மீது புகார் அளிக்க உள்ளேன்’’ என்றார்.

எம்.எல்.ஏ காந்தியிடம் பேசினோம். ‘‘பிஞ்சி பிரகாஷ் தினமும் குடித்துவிட்டு கட்சி அலுவலகத்துக்கு வந்து கலாட்டா செய்கிறார். நகரச் செயலாளர் பொறுப்பு அவரிடம் இருந்து விரைவில் பறிக்கப்படும். பொறுந்திருந்து பாருங்கள்’’ என்றார் சிம்பிளாக.

ஒரே கட்சியில் கோஷ்டி மோதல் இருந்தால் கட்சிக்குத்தானே ஆபத்து.