ஒரிஜினல் யார்; டம்மி வேட்பாளர் யார்? - திருவாரூரில் ட்ரையல் பார்க்கும் தினகரன் | thiruvarur by election - Dinakaran set to announce candidate name

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (03/01/2019)

கடைசி தொடர்பு:15:48 (03/01/2019)

ஒரிஜினல் யார்; டம்மி வேட்பாளர் யார்? - திருவாரூரில் ட்ரையல் பார்க்கும் தினகரன்

திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளராகத் தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை வர இருக்கும் தேர்தல்களுக்கான முன்னோட்டமாகவே பார்க்கும் தினகரன், பெரிய திட்டத்தோடுதான் தங்க தமிழ்ச்செல்வனை வேட்பாளராக அறிவிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தினகரன்

தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி மறைவையொட்டி காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் எனக் கடந்த 31-ம் தேதி அறிவித்தது தேர்தல் ஆணையம். இதைத் தொடர்ந்து  திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள்  மும்முரமாகச் செய்து வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் பெரிய மாஸ்டர் பிளானோடு களம் காண இருக்கிறார் தினகரன்.

அமமுக தேர்தல் விளம்பரம்

இன்று மாலை தஞ்சாவூர் வரும் தினகரன் சங்கம் ஹோட்டலில் தங்குகிறார். பின்னர் நாளை காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த உடனேயே தஞ்சாவூரில் இருந்தே போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என அறிவிக்கிறார். அ.ம.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ்தான் வேட்பாளர் என பலமாக பேச்சு அடிபடுகிற நிலையில், ஸ்டார் வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. அதன்படி கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் அ.ம.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுகுறித்து தினகரனுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ``தினகரன் ஒரு இக்கட்டான தருணத்தில் ஆர்.கே நகர் தேர்தலை சந்தித்து அவரே வேட்பாளராக நின்று வெற்றியும் பெற்றார். அதோடு பெரிய கட்சியான தி.மு.க-வை டெபாசிட் இழக்கச் செய்தார். இப்போது 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் தினகரனுக்கு முக்கிய தளபதியாக செயல்பட்ட செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்குச் சென்றது என இன்னும் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் தினகரன் ஒரு இக்கட்டான நேரத்தில் திருவாரூர் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். இதையும் தினகரன் தனக்கான சவாலாக எடுத்துக்கொண்டதோடு அவருக்குச் சொந்த மாவட்டமான திருவாரூரில் வென்றே தீர்வது என்ற குறிக்கோளில் இருக்கிறார்.

அதிமுக தேர்தல் விளம்பரம்

இதற்காகக் கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ள அவர் இன்று திருவாரூரில் செயல்வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தச் சொல்ல அதன்படி பொருளாளர் ரெங்கசாமி தலைமையில் வர்த்தக சங்க கட்டடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய விவாதங்கள் செய்யப்பட்டன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை பெரும் அமைச்சர்கள் படைகளை இறக்கி பண பலத்தை நம்பி களம் காணத் தயாராகிவிட்டனர். தி.மு.க வேட்பாளரை முடிவு செய்துவிட்டது. நாளை மாலை அறிவிக்க இருக்கிறார் ஸ்டாலின். ஆனால், தினகரன் காலையிலேயே வேட்பாளர் யார் என அறிவித்து விடுவார். தினகரன் அறிவிக்கும் வேட்பாளர் பெயரைக் கேட்டு பெரிய எதிர்பார்ப்பும் ஆச்சர்யமும் ஏற்பட வாய்ப்புள்ளது'' என்றனர்.

திமுக விளம்பரம்

மேலும் பேசிய அவர்கள், ``தினகரன் முதல் வேட்பாளராகத் தங்க.தமிழ்செல்வனையும் டம்மி வேட்பாளராக எஸ்.காமராஜையும் அறிவிக்க இருக்கிறார். தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் மனு இதில் நிராகரிக்கப்படுகிறதா என்பதை பார்ப்பதற்கான பரிசோதனை முயற்சியாகவே இதைப் பார்க்கிறார். தங்க.தமிழ்ச்செல்வன் மனு நிராகரிக்கப்படவில்லை என்றால் அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் தேர்தல் வரும்போது தகுதி நீக்கம் செய்யபட்டவர்களேயே வேட்பாளராக நிறுத்துவார். 
இதை ஏன் செய்கிறார் என்றால் அ.தி.மு.க அரசு தனக்கு எதிராக எந்த அஸ்திரத்தையும் வீசும் என நினைக்கிறார் தினகரன். தங்க தமிழ்ச்செல்வன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர் மனுவை வாபஸ் வாங்கி விடுவார். டம்மி வேட்பாளர் எஸ்.காமராஜ் ஒரிஜினல் வேட்பாளராக மாறிவிடுவார். திருவாரூர் தேர்தலை வைத்தே அடுத்து வர இருக்கும் தேர்தல்களை எதிர்நோக்க பல திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறார் தினகரன். நாங்கள் திருவாரூரில் வெல்லப்போவது உறுதி'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க