Published:Updated:

பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

Published:Updated:
பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

ந்த இளைஞரின் வயது 19.  1951. இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட் அவரிடம் 1000 ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்படி கேட்கிறார். அப்போது 1000 ரூபாய் என்பது பெருந்தொகை. “ஏன் எடுக்க வேண்டும்?” என்று கேட்கிறார் இளைஞர். “உனக்கு 55 வயதாகும்போது ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அது பேருதவியாக இருக்கும்” என்கிறார் காப்பீட்டுக்கழக முகவர். “55 வயது ஆவதற்கு இன்னும் 36 ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள்தான் இந்தியா சோசலிச நாடாகிவிடுமே, பிறகு எதற்கு எனக்குப் பணம்?” என்று கேட்டார் அந்த இளைஞர்.

பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

வர்க்கப்புரட்சி, சோசலிசம், பாட்டாளி வர்க்க அரசு என்ற கனவுகளோடும் பண்ணையார்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டங்களுடனும் கழிந்தது கோ.வீரய்யனின் வாழ்க்கை. 1932, நவம்பர் 20ல் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள சித்தாடி என்னும் கிராமத்தில் பிறந்தவர் கோ.வீரய்யன். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தன் 86வது வயதில், இரண்டு வாரங்களுக்கு முன் மறைந்தார்.

அப்போதைய தஞ்சை மாவட்டம் என்பது பண்ணையார்களின் ஆதிக்க நிலம். சாணிப்பால், சவுக்கடி, குறைந்த கூலி, பாலியல் சீண்டல்கள், மனித மாண்புகளுக்கு அப்பாற்பட்ட நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை - இதுதான் தஞ்சை. விவசாயத் தொழிலாளர்களுக்குப் போராட்ட உணர்வையும் சுயமரியாதை வேட்கையையும் ஊட்டி, தங்களுக்கான உரிமைகளைப் பெற, உழைத்தது செங்கொடி இயக்கம்.

1949ல் சித்தாடிக்கு ஓர் ஆரம்பப்பள்ளிக்கூடம் வேண்டும் என்று மனு எழுதிப்போட்டார் கோ.வீரய்யன். அந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்கு நாச்சியார் கோயிலில் இருந்து ஆசிரியராக வந்தவர், திராவிடர் கழக ஆதரவாளரான ந.வீரய்யன். இந்த வீரய்யன் அறிந்த முதல் அரசியல் மனிதர் அந்த வீரய்யன்.

கோ.வீரய்யனின் சகோதரி முறையுள்ள முல்லையம்மாளைத் திருமணம் செய்த எல்.குப்புசாமி, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில் குப்புசாமியும் ஒருவர். அவரை ந.வீரய்யனோடு சிறையில் சந்தித்துப்பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்சி குறித்த அறிமுகமும் ஆர்வமும் கோ.வீரய்யனுக்கு ஏற்பட்டது.

கட்சி தடை செய்யப்பட்டதால் கிராம முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கிச் செயற்பட்டது கோ.வீரய்யனின் முதல் அரசியல் பணி. ‘உலக அரசியல்’ என்ற கட்சிப் பத்திரிகையை விற்கத்தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக செங்கொடி இயக்கம் விவசாயத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, பண்ணையார்களுக்கு எதிரான உரிமைப்போராட்டங்களை முன்னெடுத்தது. பண்ணையார்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள்; ஆதிக்கச்சாதியினர். விவசாயக் கூலிகள் பெரும்பாலும் தலித் மக்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!

முத்துப்பேட்டை அருகில் உள்ள செருகளத்தூர் என்ற ஊரில் செங்கொடி ஏற்றப்பட்டதால், பண்ணையார்களால் ஒரு தலித் தெருவே இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, வாழைக்கன்றுகள் நடப்பட்டன. பதிலுக்கு விவசாயத் தொழிலாளர்கள் பண்ணை வீட்டை இடிக்கத் திரண்டனர். காவல்துறை அடக்குமுறை,பொய்வழக்குகள், கைதுகள்....இவற்றுக்கிடையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது. ஒரு பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட களப்பால் குப்பு என்ற தோழர் சிறையிலேயே விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். முதல் களப்பலி களப்பால் குப்பு. ஒருபுறம் பண்ணையார்களுக்கு எதிரான போராட்டம், இன்னொருபுறம் போலீஸ் ஒடுக்குமுறை.

ஓர் ஊராட்சித் தேர்தலில் பண்ணையார் சாம்பசிவம் அய்யருக்கு எதிராக கோ.வீரய்யனும் தோழர்களும் நிறுத்திய ராமசாமிப் பிள்ளை என்பவர் வெற்றிபெற்றுவிட்டார். அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ‘நிலங்களில் உள்ளூர்த் தொழிலாளர்கள் இறங்கக்கூடாது’ என்று தடை விதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் சோர்ந்துபோகாமல் இருக்க, கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குள்ள பகுதிகளில் தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கிடைத்த நெல்லைக் கொண்டுவந்து உள்ளூரில் பகிர்ந்துகொடுத்தார் வீரய்யன்.

1961 ஒரு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் வீரய்யன். 2050 பேர் அடைக்கப்பட வேண்டிய சிறையில் எட்டாயிரத்துக்கும் மேல் அடைக்கப்பட்டனர். போதிய வசதிகள் இல்லாத சூழல். வழக்கறிஞர் மோகன் குமாரமங்கலத்தின் மூலம் சிறை அதிகாரிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார் வீரய்யன். ஒரு கடுங்காவல் தண்டனைக் கைதி, சிறை அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்த முதல் வழக்கு அதுதான்.

வெண்மணிப் படுகொலை என்னும் வரலாற்றுத் துயரத்துக்கு வீரய்யனும் ஒரு சாட்சி. அதுகுறித்து அவர் எழுதியுள்ள சிறுநூல் முக்கியமான வரலாற்று ஆவணம். ‘இந்தப் படுகொலையின் மூலம் பிறக்கும் அச்சத்தால் செங்கொடி இயக்கம் அழிந்துபோகும்’ என்பது பண்ணையார்களின் எண்ணம். ஆனால் மேலும் மேலும் வலுப்பெற்று வளர்ந்தது கம்யூனிஸ்ட் கட்சி. வெண்மணித் தியாகிகளுக்கான நினைவுச்சின்னம் அமைப்பதிலும் வெண்மணிப் படுகொலையை முன்னிட்டு, முதல்வர் அண்ணாவால் அமைக்கப்பட்ட கணபதியாபிள்ளை கமிஷனின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்திலும் முன்நின்றவர் வீரய்யன்.

வீரய்யன் மீது எத்தனையோ பொய்வழக்குகள், சிறைவாழ்க்கை. எமெர்ஜென்சி காலத்தில் தலைமறைவு வாழ்க்கை. நெருக்கடிநிலை அகற்றப்பட்டு, ஒருநாள் கட்சிக்கூட்டம் முடிந்து பகலில் வீட்டுக்குச் சென்றார் வீரய்யன். அவரது நான்கு வயது மகள் செம்மலர், கொல்லையில் இருந்த அம்மாவிடம் போய், “யாரோ வந்திருக்கிறார்கள்” என்றாள். இது வீரய்யனின் போராட்ட வாழ்க்கைக்கான சிறுசான்று.

பி.சீனிவாசராவ், மணலி கந்தசாமி, வி.பி.சிந்தன், ஏ.எஸ்.கே, பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், பி.எஸ்.தனுஷ்கோடி, சங்கரய்யா என்று ஏராளமான தோழர்களுடன் இணைந்து இயங்கியவர். பல்வேறு அரசியல் நிகழ்வுகளைக் கண்ட ஒரு நீண்ட பயணம் கோ.வீரய்யனுக்கு அமைந்தது.

தன் வாழ்க்கை வரலாற்றுக்கும் அவர் ‘செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்’ என்றுதான் தலைப்பிட்டார். வீரய்யன் என்னும் செங்கொடிப் போராளியின் பயணம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் பயணித்த பாதை இன்னும் நீள்கிறது.

சுகுணா திவாகர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism