வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (04/01/2019)

கடைசி தொடர்பு:16:01 (04/01/2019)

நோ சொன்ன டி.ஆர்.பாலு... அழகிரியை சமாளிக்க செல்வியை ஸ்டாலின் அறிவிப்பாரா?

தி.மு.க

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட இன்று நேர்காணல் நடக்கிறது. இன்று இரவே வேட்பாளர் யார் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். கட்சியின் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி... இப்படி சிலரது பெயர்கள் அடிபட்டன. கட்சிக்காரர்கள் என்கிற பேனரில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபட்டன. இவர்களைத் தவிர, பத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் களத்தில் நிற்கிறார்கள்.

ஸ்டாலின்

இந்த நிலையில், டி.ஆர்.பாலுவிடம் ஸ்டாலின் விருப்பத்தை கட்சியின் சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவரின் சொந்த மாவட்டமும் திருவாரூர் மாவட்டம். மகன், தற்போது மன்னார்குடி எம்.எல்.ஏ. ரயில்வே திட்டங்களை மன்னார்குடிக்குக் கொண்டுவந்தது டி.ஆர்.பாலுவின் முயற்சியால்தான் என்பது மாவட்ட மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவர் ஒரு பிஸினஸ் மேன் என்பதால், தொழிற்திட்டங்களை நிறைய கொண்டுவருவார் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. இதையெல்லாம் கணக்குப்போட்டு, டி.ஆர்.பாலுவையே வேட்பாளராக நிறுத்த மு.க.ஸ்டான் நினைத்தார். ஆனால், டி.ஆர்.பாலுவோ, நோ சொல்லிவிட்டாராம். ``மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர்  தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து டெல்லி செல்ல விரும்புகிறேன். எம்.எல்.ஏ சீட் வேண்டாம்'' என்று அடித்துச் சொல்லிவிட்டாராம்.

செல்விக்கு திருவாரூரில் போட்டியிட விருப்பம்தான். ஆனால், ஸ்டாலின் யோசித்தார். கனிமொழிபோல இவரும் ஓர் அரசியல் சேனல் ஆரம்பித்துவிடுவாரே என்று ஸ்டாலின் தரப்பினர் நினைத்தனர். அதனால், அவரை தவிர்க்க நினைத்தார். ஆனால், சூழ்நிலை வேறு மாதிரி மாறிவருகிறது. பூண்டி கலைவாணன், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தச் சமூகத்தினர், திருவாரூர் தொகுதியில் கணிசமாக வசிக்கிறார்கள். இருந்தாலும், அந்தத் தொகுதியில் அட்டவணை சமூகத்தினர், வெள்ளாளர் சமூகம், முஸ்லிம், வன்னியர் ஆகிய நான்கு தரப்பினர் பரவலாக இருக்கிறார்கள். அ.ம.மு.க-வின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ்தான் அந்தக் கட்சியின் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. அவரும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருவேளை, பூண்டி கலைவாணன், காமராஜும் போட்டியிட்டால், அந்த சமூகத்தின் ஓட்டுகள் பிரியும்.

அழகிரி

அதுமட்டுமல்லாது, பூண்டி கலைவாணனுக்கு கட்சியினர் மத்தியில் செல்வாக்கு உண்டு. ஆனால், திருவாரூரில் உள்ள பொது ஜனங்கள் மத்தியில் செல்வாக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தப் பாயின்டை மு.க.ஸ்டாலின் யோசிக்கிறார். அதேபோல், திருவாரூருக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் மு.க.அழகிரிக்குகென்று ஆதரவாளர்கள் ஓரளவு இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டு தி.மு.க-வுக்கு எதிராக விழ வாய்ப்புகள் உண்டு. இதைத் தவிர்க்கவே, செல்வியை ஏன் நிறுத்தக் கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். மு.க.அழகிரி மற்றும் செல்வி இருவரும் பாசமிக்கவர்கள். இவர் போட்டியிட்டால், நிச்சயமாக மு.க.அழகிரி போட்டியிட மாட்டார் என்றே ஸ்டாலின் தரப்பினர் கருதுகிறார்கள். அதனால், செல்வியைக் களம் இறக்க மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை நடத்திவருவதாகத் தகவல் அறிவாலயம் வட்டாரத்தில் அடிபடுகிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க