Published:Updated:

`நாங்க ஒண்ணு சேர்ந்துட்டோம்; 6-ம் தேதி சொல்கிறேன்’ - தீபா கணவர் மாதவன் ட்விஸ்ட்

`நாங்க ஒண்ணு சேர்ந்துட்டோம்; 6-ம் தேதி சொல்கிறேன்’ - தீபா கணவர் மாதவன் ட்விஸ்ட்
`நாங்க ஒண்ணு சேர்ந்துட்டோம்; 6-ம் தேதி சொல்கிறேன்’ - தீபா கணவர் மாதவன் ட்விஸ்ட்

``தீபாவும் நானும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துவருகிறோம். இருவரும் சேர்ந்து ஒரே அரசியல் பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். அதுதொடர்பான அறிவிப்பை சேலத்தில் வரும் 6-ம் தேதி சொல்கிறேன்'' என்று தீபாவின் கணவர் மாதவன் நம்மிடம் தெரிவித்தார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் குதித்தார் அவரின் அண்ணன் மகள் தீபா. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். தீபாவுக்கும் அவரின் கணவர் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு மாதவனும் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். அதற்கு எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்தார். தற்போது தீபா, மாதவன் தொடர்பான செய்திகள் வருவது குறைந்துவிட்டன. 

இந்தச் சூழ்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. இந்தக் கமிஷனிடம் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக மாதவன் கூறியிருந்தார். விசாரணைக்காக மாதவன் கமிஷனில் நேற்று ஆஜராகினார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 உங்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன?

 ``ஜெயலலிதாவை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு, திருமணத்துக்கு முன்தான் அவரைப் பார்த்ததாகக் கூறினேன். அப்போலோவில் எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்ற கேள்விக்கு பதில் கூறினேன்.
 என்னிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளையும் வெளியில் சொல்ல முடியாது." 

ஆறுமுகசாமி கமிஷனின் செயல்பாடு எப்படி உள்ளது?  

``விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது எதையும் சொல்ல முடியாது. நீதிபதி ஆறுமுகசாமி எழுதும் தீர்ப்புக்குப் பிறகுதான் கருத்து கூற முடியும்."

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிடுமா?

 ``அதுதொடர்பாக சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதி முடிவு சேலத்தில் 6-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும்." 

 தீபா  எப்படி இருக்கிறார்கள்?

 ``அவர் நலமாக இருக்கிறார்."

சமீபகாலமாக தீபா, மாதவன் அமைதிக்கு என்ன காரணம்?

``நாங்கள் சேர்ந்து வாழ்வது ஒரு தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. இதனால் தேவையில்லாத பிரச்னைகளை எங்களுக்குள் ஏற்படுத்தி அதைச் செய்தியாக வெளியிட்டு வந்தார்கள். என்னைப் பற்றி தீபாவுக்கும் அவரைப்பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 7 ஆண்டுகளாகின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்தும் விட்டுக்கொடுத்தும் வாழ்ந்துவந்தோம். ஜெயலலிதா மறைந்து இரண்டாண்டுகளுக்குள் எங்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் எங்களுக்கு ஓர் அனுபவப் பாடம்.’’

அரசியல் பயணத்தில் தீபாவும் நீங்களும் தனித்தனியாகப் பயணித்தீர்களே. இனிமேல் உங்களின் பயணம் எப்படியிருக்கும்?

``அன்றைய சூழ்நிலையில் இருவரும் தனித்தனியாக அரசியலில் ஈடுபட்டோம். இப்போது நாங்கள்  இருவரும் ஒன்றாகப் பயணிக்கிறோம். இனி எங்களின் அரசியல் பயணமும் ஒன்றாகும். கட்சியும் பேரவையும் இணைவது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம். அதுதொடர்பாக சேலத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்."

 ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறீர்கள். என்னென்ன மர்மங்கள் உள்ளதாக சந்தேகிக்கிறீர்கள்? 

``ஜெயலலிதாவின்  மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து நான் கேள்வி எழுப்பியதும் எனக்கு பல வகையில் மிரட்டல்கள் வந்தன. ஆனால், அதையெல்லாம் நான் பார்த்து அஞ்சவில்லை. ஏனெனில் ஒருமுறைதான் வாழப்போகிறோம். அந்த வாழ்க்கையில் துணிவோடு நம்மால் முடிந்தவற்றை செய்வோம். ஜெயலலிதாவின் மறைவை இதுவரை எங்கள் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தைரியமாக நான் சொல்லிவருதால்தான் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. போயஸ் கார்டனில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அப்போலோவில் உள்ள கேமரா பதிவுகளையும் வெளியிட்டாலே உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்துவிடும்.

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அது ஏன்?  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவுக்கு முன் சசிகலாவின் ஆதரவாளரான வெற்றிவேல், ஜெயலலிதா குளிர்பானம் குடிப்பதைப் போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு ஜெயலலிதா தொடர்பான எந்த வீடியோக்களும் வெளியிடப்படவில்லை. நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனிடம் ஆஜராகுபவர்கள் சொல்லும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளன. உதாரணத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பு சான்றிதழில் இருக்கும் இறந்த நேரம் பதினொன்றேமுக்கால், ஆனால் ஜெயலலிதாவை எம்பாம்மிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் தனக்கு பத்தரை மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டதாக டிக்ளரேஷன் கொடுத்து எம்பாமிங் செய்வதற்கு அழைத்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகளை சந்திக்க அனுமதித்திருந்தால் இந்த மரணமே நடந்திருக்காது. என்னையும் தீபாவையும் ஜெயலலிதாவை சந்திக்க விடாமல் தடுத்த சக்திகள் செய்த சதியால் அவரின் மரணத்தில் மர்மங்கள்  சூழ்ந்துள்ளன . அதை வெளியில் கொண்டு வரவே போராடிவருகிறேன்."