அரசியலும் அவலங்களும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்! *** | highlights of this week junior vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (05/01/2019)

கடைசி தொடர்பு:11:24 (05/01/2019)

அரசியலும் அவலங்களும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்! ***

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2SA05uk

 
ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் அறிவிப்பு அதிர்ச்சியைத்தான் தந்துள்ளது. முழுக்க முழுக்க தி.மு.க-வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்று திட்டமிட்டே மத்திய அரசு காய்நகர்த்த ஆரம்பித்துள்ளது...

ஆர்.கே.நகர் தந்த தெம்புடன்தான் படு உற்சாகமாகவும் பிஸியாகவும் திருவாரூரைக் குறிவைக்கும் தினகரன் தரப்பு, இரு மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலையைத் தெடங்கிவிட்டது. கள்ளர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளையும், பி.ஜே.பி-யை எதிர்க்கும் சிறுபான்மையினர் வாக்குகளையும் ஒன்று திரட்டினாலே வெற்றிக்கனியைப் பறித்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் தினகரன்...

கையில் அரசு இயந்திரம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசின் மறைமுக ஆசியும் உள்ளது. எனவே, குஷியுடன் இருக்கிறது எடப்பாடி தரப்பு... 

- இவ்வாறாக திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான உள்ளரசியலை உற்று நோக்கி பல தகவல்களை 'திருவாரூர் தேர்தல் டெஸ்ட்! - குஷி... பிஸி... அதிர்ச்சி' எனும் தலைப்பில் அலசி தந்திருக்கிறார் மிஸ்டர் கழுகு.

இளவரசி, கடந்த தீபாவளி சமயத்தில் பரோலில் வந்தபோது, திவாகரன் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இளவரசியிடம் பேசினார். அப்போது, `தினகரன் தொடர்ந்து கட்சியில் இருந்தால் அ.ம.மு.க சிதறும். சசிகலாவுக்குப் பின்னடைவு ஏற்படும். அ.தி.மு.க-வில் இணைவதற்கு தினகரன் விடமாட்டார். இணைப்பை நான் பார்த்துக்கொள்கிறேன். அக்காவை மட்டும் தினகரனை ஒதுக்கிவைக்கச் சொல்லுங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்போது, இதை சசிகலாவிடம் இளவரசி சொன்னபோது சசிகலா ஏற்றுக்கொள்ளவில்லை" என்றவர்கள், பின்னர்  சசிகலா மனம் மாறியது பற்றியும் சொன்னார்கள்.

- அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு வேலைகள் வேகமெடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் தினகரன் ஒத்துழைக்கவில்லையென்றால், அவரைத் தவிர்க்கவும் சசிகலா தரப்பு முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கும் சூழலில் 'சசிகலாவை நெருங்குகிறாரா திவாகரன்?' எனும் செய்திக் கட்டுரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் 'பாதுகாப்பு மூலதனம்' மீதான மத்திய அரசின் குறி இன்னும் விலகவில்லை. சக்தி காந்த தாஸ் மூலம் தாங்கள் நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு கணக்குப்போடுகிறது என்றும், ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசுக்குத் தாரைவார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள், வங்கித்துறை அதிகாரிகள். மேலும், ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு மூலதனத்தில் கைவைப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு பேராபத்து என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால், இதுதான் ஒரு காலத்தில் நம் தேசத்தையே காப்பாற்றியது. 

1990-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, மிகப்பெரிய நிதி நெருக்கடி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போது, ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு மூலதனத்தின் ஒரு பகுதியாக இருந்த தங்கத்தைக் கொண்டுபோய் லண்டனில் அடகுவைத்து அந்நியச் செலாவணி திரட்டினர். அதன் பிறகே, பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா மீண்டது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மூலதனத்தின் கணிசமான பகுதியைத் தான், மத்திய அரசு கேட்டுவருகிறது.

- ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்துவிட்ட பிறகு, ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதுபோலத் தெரிகிறது. ஆனால், அந்த மோதலுக்கான பிரச்னை தீர்ந்ததா என்றால், நிச்சயமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது `மோடி அரசு வட்டமிடும் மூன்றரை லட்சம் கோடி! - தொடரும் ரிசர்வ் வங்கி நெருக்கடி' எனும் சிறப்புக் கட்டுரை.

இந்தப் பெண்கள் கோயிலுக்கு வரும் தகவல், சபரிமலையில் உள்ள போலீஸாருக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை. இவர்கள் தரிசனம் முடிந்து திரும்பியதும், கேரளா முழுவதும் பி.ஜே.பி மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இந்த நிலையில், அந்தப் பெண்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருமணமானவரான பிந்து, பத்தணம்திட்டா கல்லூரியில் படித்தபோது, சி.பி.ஐ (எம்.எல். ரெட்) கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். இப்போது, சட்டக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். சமூக அக்கறை கொண்ட பிந்து, ஏழை இளைஞர் ஒருவருக்கு, தன் கிட்னி ஒன்றைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.

- சபரிமலையில் 45 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்களை தரிசனம் செய்ய வைத்து, பரபரப்பைப் பற்றவைத்துள்ளது இடது ஜனநாயக முன்னணி அரசு. கோழிக்கோட்டைச் சேர்ந்த கனகதுர்கா, கண்ணணூரைச் சேர்ந்த பிந்து ஆகிய இருவரும் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பியிருக்கிறார்கள். இதன் பின்னணியைச் சொல்கிறது 'சபரிமலையில் பெண்கள் தரிசனம் - கேரள அரசின் ஆபரேஷன் கனக பிந்து!' எனும் செய்திக் கட்டுரை.

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2SA05uk

``ஆலை தொடங்கப்பட்டு, ஐந்தாண்டுகள் வரை பாதிப்புகள் இல்லை. அதன் பின்னர்தான் பாதிப்புகள் தெரிய ஆரம்பித்தன. கடந்த 30 வருடங்களாக இந்தப் பகுதியில் நாங்கள் மேற்கொண்ட எந்த விவசாயமும் பலன் அளிக்கவில்லை. இதுவரை 800 ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் அழிந்துள்ளது. விவசாயிகளுக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக இந்த ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறுவதைத் தவிர, வேறுவழியில்லை..."

``கோவிலூர் கிராம மக்கள், நச்சுப்புகையை பல வருடங்களாகச் சுவாசித்து வருகிறார்கள். இதனால் சிறுநீரகப் பாதிப்பு, சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு, தோல் அரிப்பு, ஆண்களின் உயிரணுக்கள் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படவும் சாத்தியங்கள் உள்ளன..."

- 'தமிழ்நாடு கெமிக்கல் புராடக்ட்ஸ் லிமிடெட் (டி.சி.பி.எல்)' சல்பேட் கந்தகம் தயாரிக்கும் ஆலை, காரைக்குடி அருகே கோவிலூர் கிராமத்தில், 1972-ல் அப்போதைய தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்டது. இப்போது ராஜசேகரன் என்பவர் குத்தகைக்கு எடுத்து ஆலையை நடத்துகிறார். இதன் பாதிப்புகள் குறித்து அலசும் செய்திக் கட்டுரை: ``கேன்சர், சிறுநீரகப் பாதிப்பால் சாக வேண்டுமா?" - ஆலைக்கு எதிராக கொதிக்கும் கிராம மக்கள்!

தார்பாலின் வழங்கியதற்காக ஒரு கோடியே 90 லட்ச ரூபாய்க்கு பில் கொடுத்தோம். கடந்த 24-ம் தேதி பணம் வாங்கச் சென்றோம். அப்போது அதிகாரி ஒருவர், 'தார்பாலின் விற்பனையில் உங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் ஐந்து சதவிகிதத் தொகையை கஜா பேரிடருக்கு நிவாரணமாகக் கொடுங்கள். அந்தப் பணத்தில் லுங்கிகளையோ, பெட்ஷீட்களையோ நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். பணத்தை ஈரோட்டில் நாங்கள் சொல்லும் நபரின் வங்கிக் கணக்கில் போடுங்கள்' என்றார்கள்... 

- பொதுமக்களின் துயரத்திலும் காசு பார்ப்பது சில அரசு அதிகாரிகளுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. கஜா நிவாரணப் பொருள்கள் பேக்கிங்கில் நடந்த முறைகேட்டைத் தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய தார்பாலின் ஷீட்கள் கொள்முதலிலும் அரசு அதிகாரிகளின் கமிஷன் பேரம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அதை 'கஜா நிவாரணத்தில் கமிஷன் கேட்கும் அதிகாரிகள்!' எனும் தலைப்பில் அம்பலப்படுத்தி இருக்கிறது ஜூனியர் விகடன். 

சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து மலைக்குகையில் சிக்கிய 13 பேரை மீட்பு படையினர் உயிரைப் பணயம் வைத்து மீட்ட காட்சிகளைக் கண்டு உலகமே சிலிர்த்தது. ஆனால், மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் ஒன்றில் 15 தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கி, 23 நாள்கள் ஆகிவிட்டன. ஒருவர்கூட மீட்கப்படவில்லை. கனத்த மெளனம் காக்கிறோம். சுரங்கத்தில் முழுமையாக வெள்ளம் சூழ்ந்த நிலையில், இனி அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவித்திருக்கிறது அரசு. ஆனால், இதுவரை நமது மீட்புப் படைகளால் அவர்கள் சிக்கிய இடத்தைக்கூட நெருங்க முடியவில்லை. இந்த சம்பவம் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம் மற்றும் இயலாமையையும் இந்தியத் தொழில்நுட்பங்களின் போதாமைகளையும் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது! 

- இது குறித்து 'உயிருடன் இருக்கிறார்களா சுரங்கத் தொழிலாளர்கள்? - தாய்லாந்துக்கு துடித்தோம்... மேகாலயாவை மறந்தோம்!' எனும் தலைப்பில் விரிவான பார்வையை முன்வைக்கிறது ஜூனியர் விகடன்.

``சபரிமலைத் தீர்ப்புக்கு எதிரான சர்ச்சைகளும் போராட்டங்களும் பெண்களுக்கு எதிரானவை. பெண்களின் உரிமைக்காக கேரளத்தில் நடைபெற்ற போராட்டங்களை எல்லாம் மறந்துவிட்டு, 'பெண்கள் அசுத்தமானவர்கள்' என்றும், 'பெண்கள் என்பவர்கள் பின்னால் நிற்கவேண்டியவர்கள்' என்றும் கருத்துகளைப் பரப்புகின்றனர். அதற்கு எதிராகவே `வனிதா மதில்' இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. இடதுசாரி பெண்கள் அமைப்புகளும், பிற பெண்கள் அமைப்புகளும் பங்கேற்ற இப்போராட்டத்தை, `கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நடத்தும் போராட்டம்' என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இதில் பங்கேற்ற பெண்களில் 99 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே. இது கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குமான போராட்டம் அல்ல. பெண்களைப் பின்னோக்கி நகர்த்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டம்."

- வரலாற்றைப் புரட்டிப்போட்டிருக்கிறது `வனிதா மதில்' போராட்டம். கேரள வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவுப் பெண்கள் ஒன்றுதிரண்டது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும். பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகளின் சரண கோஷப் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கு நடந்தேறியிருக்கிறது, லட்சக்கணக்கான பெண்கள் 620 கி.மீ நீளத்துக்கு அணிவகுத்த `வனிதா மதில்' போராட்டம். இதன் பின்னணியைச் சொல்கிறது `வரலாற்றைப் புரட்டிய வனிதா மதில்!' எனும் செய்திக் கட்டுரை.

 

தஞ்சை மாவட்டம் ஆதனூரைச் சேர்ந்த கரும்பு விவசாயி மோகன்தாஸுக்கு, பாபநாசம் ஸ்டேட் வங்கியிலிருந்து ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதில், 'எங்கள் வங்கியில் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள். அதில், 2,58,918 ரூபாயை உடனே கட்ட வேண்டும்' என்று அந்த நோட்டீஸில் இருந்தது. அதைக் கண்டவருக்கு பேரதிர்ச்சி. காரணம், அந்த வங்கிக்கிளைக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையாம்.  

இப்படி மோகன்தாஸுக்கு மட்டுமல்ல... அந்தப் பகுதியின் கரும்பு விவசாயிகள் பலரையும் அலறவைத்திருக்கின்றன இதுபோன்ற வக்கீல் நோட்டீஸ்கள். இது குறித்து விசாரித்தபோதுதான், 'தனியார் சர்க்கரை ஆலை ஒன்று விவசாயிகளின் பெயர்களில் ரூ.300 கோடி ரூபாயை முறைகேடாக வங்கியில் கடன் வாங்கியிருக்கிறது. அதற்காகதான் வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது' என்கிற விவரம் விவசாயிகளுக்குத் தெரியவந்தது...

- வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ள இந்த முறைகேட்டை விரிவாக அலசுகிறது `விவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி! - அதிபர்கள் கடனுக்கு அப்பாவிகள் கையெழுத்து' எனும் செய்திக் கட்டுரை. 

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2FaMYfd