Published:Updated:

`அம்மாவின் ஆன்மாவால் துரோகி எண்ணம் தோற்றது!' - போஸ்டர் யுத்தத்தால் பரபரக்கும் கரூர்

`அம்மாவின் ஆன்மாவால் துரோகி எண்ணம் தோற்றது!' - போஸ்டர் யுத்தத்தால் பரபரக்கும் கரூர்
`அம்மாவின் ஆன்மாவால் துரோகி எண்ணம் தோற்றது!' - போஸ்டர் யுத்தத்தால் பரபரக்கும் கரூர்

 தி.மு.க-வுக்கு தாவிய செந்தில்பாலாஜிக்கு எதிராக,'அம்மாவின் ஆன்மாவால் துரோகி எண்ணம் தோற்றது' என்று கரூர் நகரமெங்கும் போஸ்டர்கள் அடித்து ஒட்டி, பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதாவின் கணவரான மணிவண்ணன்.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும்,கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வாக இருந்த இவரின் பதவி, சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் உயர் நீதிமன்ற தீர்ப்பில் சிக்கி, பறிக்கப்பட்டது. `மேல்முறையீடு செய்வது' உள்ளிட்ட பல விஷயங்களில் டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 14-ம் தேதி சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார் செந்தில்பாலாஜி.

அதோடு, கடந்த 21-ம் தேதி, கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, ஸ்டாலின் முன்னிலையில் 30,425 பேரை தி.மு.க-வில் இணைத்தார். இதற்கிடையில்,செந்தில்பாலாஜியின் அரசியல் எதிரியான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "பதவிக்காக அடிக்கடி கட்சி மாறுவது அவருக்கு வாடிக்கை. இதோடு, ஐந்தாவது முறையாக கட்சி மாறும் அவர், தி.மு.க-விலும் நிலைக்க மாட்டார்" என்று போட்டுத்தாக்கினார். அதோடு, "இன்னும் ஒரு வாரத்தில் கரூரில் உள்ள ஒட்டுமொத்த அ.ம.மு.க கூடாரத்தையும் அ.தி.மு.க-வில் இணைப்பேன்" என்று சபதம் போட்டு செயல்பட்டார். அதேபோல், பலரையும் அ.தி.மு.க-வுக்குள் இழுத்துப் போட்டார். ஆனால், அதையும் மீறி செந்தில்பாலாஜி 30425 பேர்களை தி.மு.க-வில் இணைத்தார். 

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி, கரூரில் செந்தில்பாலாஜி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்திய அதே நாளில், சென்னையில் முதல்வர் எடப்பாடிபழனிசாமி முன்னிலையில் கரூர் மாவட்ட மாற்றுக்கட்சியினரை அ.தி.மு.க-வில் இணைக்கும் விழாவை நடத்தினார். கரூர் மாவட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் 12 பேர் உள்ளிட்ட 1200 ம.தி.மு.க-வினர் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 3000 பேர்களை அ.தி.மு.க-வில் இணைத்தார். இது ஒருபுறமிருக்க, அடுத்து இரு தரப்பும் போஸ்டர் யுத்தத்தைத் தொடங்கியது.

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள், 'இனி V.S.B விளையாட்டு ஆரம்பம்' என்று போஸ்டர் அடித்து பரபரப்பைப் பற்றவைத்தனர். அதற்குப் பதிலடிகொடுக்க அமைச்சர் தரப்பு, 'மாண்புமிகு MRV அவர்கள் ஆரம்பித்த ஆட்டம்...ஒருவர் எடுத்தார் ஓட்டம்' என்று சூடான வாசகங்களைப் போட்டு நோட்டீஸ்களாக அச்சடித்து ஒட்டி, கரூரை கலங்கடித்தது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அமைச்சர் தரப்பே அடுத்த போஸ்டர் யுத்தத்திற்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான மணிவண்ணன் என்பவர் பெரிய பெரிய சைஸ்களில் அச்சடித்து ஒட்டியிருக்கும் போஸ்டர்களில், 'கூடாரம் காலியாகும் என்ற MRV (எம்.ஆர்.விஜயபாஸ்கர்) வாக்கு வென்றது!அம்மாவின் ஆன்மாவால் துரோகி எண்ணம் தோற்றது! உன் உயிரும் உதிரமும் எங்கே?' என்று ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் போட்டோக்களைப் போட்டு செந்தில்பாலாஜிக்கு எதிராக கச்சைகட்டியிருக்கிறார், கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதாவின் கணவரான மணிவண்ணன். அ.தி.மு.க-வின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இதைக் கண்டு கொதித்துப் போயுள்ள செந்தில்பாலாஜி தரப்பு, "யாருன்னே தெரியாமல் இருந்த கீதாவை மாவட்ட சேர்மனாக்கி, பிறகு எம்.எல்.ஏ சீட் வாங்கிக்கொடுத்து கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ஜெயிக்கவைத்தவர் அண்ணன் செந்தில்பாலாஜிதான். அதன்மூலம், கட்சியில் முக்கியமானவர் மணிவண்ணன். ஆனால், எம்.எல்.ஏ கீதாவும் மணிவண்ணனும்தான் எங்கண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டு, அண்ணனின் அரசியல் எதிரியான அமைச்சரோட ஒட்டிக்கிட்டாங்க. துரோகத்தைப் பத்தி அவர் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கார். அண்ணன் அதற்கு எந்த நேரத்தில் எப்படி கொடுக்கனுமோ, அப்படி தக்க பதிலடி கொடுப்பார். வெயிட் அண்ட் சி" என்றார்கள்.