Published:Updated:

`20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள்' - டி.டி.வியை சாடிய ஸ்டாலின்!

`20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள்' - டி.டி.வியை சாடிய ஸ்டாலின்!
`20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள்' - டி.டி.வியை சாடிய ஸ்டாலின்!

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள் என டி.டி.வி தினகரனைக் கடுமையாக விமர்சித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

திருவாரூர் இடைத்தேர்தலுக்காக தி.மு.க தரப்பில் பூண்டி கலைவாணனும், அ.ம.மு.க தரப்பில் எஸ்.காமராஜும், நாம் தமிழர் கட்சி தரப்பில் சாகுல் ஹமீதும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து மூன்று கட்சிகளும் பிரசாரத்திற்காகத் திருவாரூரை முற்றுகையிட்டுள்ளன. இந்நிலையில் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், ``திருவாரூரில் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியைப்போல் எதிர்க்கட்சியான தி.மு.க அச்சப்படுகிறது" என்று விமர்சித்திருந்தார். 

இவரின் விமர்சனத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தேர்தலைக் கண்டு தி.மு.க பயப்படுவதாக டி.டி.வி.தினகரன் கூறுவது நகைப்புக்குரியது. திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் தி.மு.க எதற்குப் பயப்படவேண்டும்?" என்று கேள்வி எழுப்பியவர், ``டி.டி.வி தினகரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் வேண்டுமானால் பயந்திருக்கலாம். நேர்த்திக் கடன் போன்று வாரந்தோறும் பெங்களூரு சிறைக்கு டி.டி.வி தினகரன் செல்கிறார். ஆர்.கே.நகரில் அவரை 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.