Published:Updated:

‘கிராமங்களில் பெண் நிர்வாகிகள் நியமனம்!’ -கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் ரஜினி மக்கள் மன்றம்

‘கிராமங்களில் பெண் நிர்வாகிகள் நியமனம்!’ -கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் ரஜினி மக்கள் மன்றம்
‘கிராமங்களில் பெண் நிர்வாகிகள் நியமனம்!’ -கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் ரஜினி மக்கள் மன்றம்

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில், மகளிர் அணிக்கு முக்கியத்துவம்கொடுத்து, பெண் நிர்வாகிகளை நியமிக்கும் பணி தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக, வேலூர் மாவட்டத்திற்குத்தான் மன்ற நிர்வாகிகளை நியமித்தார் ரஜினி. அதற்கேற்ப, பூத் கமிட்டிகளை அமைத்து, மக்கள் மன்றத்தினரும் பம்பரமாகச் சுழன்று உறுப்பினர்களைச் சேர்த்துவருகின்றனர். வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில், இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மகளிர் அணிக்கு முக்கியத்துவம்கொடுத்து, பெண் நிர்வாகிகளை நியமிக்கும் பணி தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மகளிரணிச் செயலாளர் சங்கீதா தலைமையில், சோளிங்கரில் நேற்று (6-ம் தேதி) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சி மற்றும் வார்டுகளில் மகளிரணி நிர்வாகிகளை நியமிப்பதற்கான கிளை படிவங்கள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக மன்ற மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி மற்றும் இணைச் செயலாளர் நீதி என்கிற அருணாசலம், துணைச் செயலாளர் முகமது கலீஃபா ஆகியோர் கலந்துகொண்டு, மகளிரணிக்கான முக்கியத்துவம்குறித்து விளக்கிப் பேசினர். இதில், மகளிரணி நிர்வாகிகள் பிரியா அருள், ஷகிலா ஜெயகுமார், ரவூஃப்கான் உட்பட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கிளைப் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி, இரண்டாவது நாளாக இன்றும் (7-ம் தேதி) வேலூரில் நடைபெற உள்ளது. பெரிய மாவட்டம் என்பதால், பெண் நிர்வாகிகள் வந்துசெல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும்பொருட்டு, இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சோளிங்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரக்கோணம், ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், சோளிங்கர், ஆற்காடு, விஷாரம் ஆகிய பகுதி ஒன்றியங்கள் மற்றும் நகர மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு , கிளைப் படிவங்களைப் பெற்றுக்கொண்டனர்.