`திருவாரூர் இடைத்தேர்தலால் யாருக்கு லாபம்?!'  - தேர்தலை நிறுத்த வைத்த `45 சதவிகித' கணக்கு | The reason behind the cancellation of Thiruvarur by-election

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (07/01/2019)

கடைசி தொடர்பு:14:39 (07/01/2019)

`திருவாரூர் இடைத்தேர்தலால் யாருக்கு லாபம்?!'  - தேர்தலை நிறுத்த வைத்த `45 சதவிகித' கணக்கு

தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாக எடுத்திருந்தால், தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்காது. அ.தி.மு.க-வுக்கும் அதிர்ச்சி கொடுப்பதற்காத்தான் தேர்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

`திருவாரூர் இடைத்தேர்தலால் யாருக்கு லாபம்?!'  - தேர்தலை நிறுத்த வைத்த `45 சதவிகித' கணக்கு

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட 3 வழக்குகளையும் முடித்து வைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். `தேர்தல் ரத்து அறிவிப்பின் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன. அ.தி.மு.க-வுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியாகவே இதைப் பார்க்கிறோம்' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

எடப்பாடி பழனிசாமி

கஜா நிவாரணப் பணிகளைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்துவிட்டது தேர்தல் ஆணையம். கடந்த 5-ம் தேதி திருவாரூரில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்பு நிகழ்வை நடத்தினார் மாவட்ட தேர்தல் அதிகாரி. `இப்போதைக்குத் தேர்தல் வேண்டாம்' என அரசியல் கட்சிகள் கருத்து கூறியதையும் ஆணையத்தின் பார்வைக்கு அனுப்பியது மாவட்ட நிர்வாகம். இதற்கு முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசினார். `நிவாரணப் பணிகள் நிறைவடையாததால் தேர்தலை நடத்துவது சரியல்ல' என அவர் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் ரத்து அறிவிப்பால் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளன அரசியல் கட்சிகள். 

ஸ்டாலின்

தேர்தல் ரத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், "தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனிமைப்படுத்தி இடைத்தேர்தல் நடத்துவதில், சூட்சுமமான உள்நோக்கம் இருக்கலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். மேலும் திருவாரூரில் கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகமாகி, வாக்களிப்பதற்கு முழுவதும் எதிரான மனநிலை உருவாகிவிடும். தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட, கஜா புயலால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கு உரிமையான நிவாரணப் பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பதுதான் தி.மு.கவின் கருத்து" எனக் குறிப்பிட்டிருந்தார். 

தமிழிசை

``திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை நடத்துவதில் ஸ்டாலினுக்கு உடன்பாடில்லை. காரணம், ஆளும்கட்சியும் தினகரனும் அதிக அளவில் செலவு செய்து நெருக்கடியைக் கொடுப்பார்கள் என்பதுதான். இருப்பினும், அத்தொகுதியில் தி.மு.க வேட்பாளராக மாவட்ட செயலாளர் கலைவாணன் பெயரை அறிவித்தார் ஸ்டாலின். அ.ம.மு.க வேட்பாளராக எஸ்.காமராஜ் பெயரை அறிவித்தார் தினகரன். இதோ...அதோ என வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இழுத்தடித்தது அ.தி.மு.க. இந்த நேரத்தில் பொன்னாரும் தமிழிசையும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாகவே தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியானது" என விவரித்த பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

தினகரன்

``தேர்தல் ரத்து அறிவிப்பின் பின்னணியில்ல சில கணக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க தலைமைக்குக் கொடுக்கப்பட்ட அறிக்கையின்படி, தமிழகம் முழுவதும் தினகரனுக்கு 12 சதவீத வாக்குகளும் எடப்பாடி பழனிசாமிக்கு 23 சதவிகித வாக்குகளும் இருக்கின்றன. அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில் ஸ்டாலினுக்கு 45 சதவிகித வாக்குகள் இருக்கின்றன. கருத்துக்கணிப்பிலும் இதே தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. `எடப்பாடி பழனிசாமியை மையமாக வைத்துச் செயல்பட்டால் ஸ்டாலினை முறியடிப்பது கடினம். காங்கிரஸ் கட்சியோடு கடைசி நேரத்தில் தினகரன் இணைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது' என டெல்லி நினைக்கிறது.

எடப்பாடியோடு சேர்ந்து தி.மு.க-வைத் தோற்கடிக்க முடியாது என்பதும் மோடிக்குத் தெரியும். சொல்லப் போனால், `எடப்பாடி தலைமையில் கூட்டணி சேர்ந்தால் 2004 நிலைமைதான் ஏற்படும். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றுவிடும்' என பா.ஜ.க நினைக்கிறது. அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானராக இருக்கும் ஸ்டாலினை எதிர்க்க, அதேபோன்று பார்க்கப்படும் ரஜினியால்தான் முடியும் என மோடி நினைக்கிறார். தேர்தல் களம் என்பது ரஜினிக்கும் ஸ்டாலினுக்குமானதாக இருந்தால் மட்டுமே, காங்கிரஸைத் தோற்கடிக்க முடியும் எனவும் அவர் உறுதியாக நம்புகிறார். அதனால்தான், `ரஜினி, கமல் வந்தால் வரவேற்போம்' என பிரதமர் மோடி பேசினார். 

தி.மு.க.

திருவாரூர் தொகுதியைப் பொறுத்தவரையில் ஸ்டாலினுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படியொரு வெற்றியை அவர் பெறுவதை பா.ஜ.க விரும்பவில்லை. அதேநேரம், `சங்கரன்கோவில், ஆர்.கே.நகர் போல தனக்குப் பின்னடைவு வந்துவிடக் கூடாது' என கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மூலமாகத் தேர்தலை நிறுத்திவிட்டார் ஸ்டாலின். தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக டிசம்பர் 3-ம் தேதியே தலைமைச் செயலாளர் கடிதம் எழுதிவிட்டார். அந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாக எடுத்திருந்தால், தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்காது. அ.தி.மு.க-வுக்கும் அதிர்ச்சி கொடுப்பதற்காத்தான் தேர்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளும் அரசியல் கட்சிகளின் அழுத்தமும் திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை தள்ளிவைக்கச் செய்துவிட்டது" என்றார் விரிவாக. 

ஆனால், இந்த விவகாரத்தை தி.மு.க தரப்பு வேறுவிதமாகப் பார்க்கிறது. ``அ.தி.மு.க-வோடு அணி சேர வேண்டும் என்பதில் பொன்னாரும் தமிழிசையும் உறுதியாக இருக்கின்றனர். அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து சந்தித்துப் பேசி வந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் சீட் தொடர்பான பேரமும் பா.ஜ.க, அ.தி.மு.க-வுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் அறிவிப்பு என்பது அ.தி.மு.க-வுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிதான். இந்தத் தேர்தலில் தி.மு.கவோ, தினகரனோ வெற்றி பெற்றுவிட்டால், அது எடப்பாடி தலைமை மீது கேள்வியை எழுப்பிவிடும். இதையெல்லாம் உணர்ந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக டெல்லியின் கோரிக்கைகளுக்கு அ.தி.மு.க செவிமடுத்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவே அறிகிறோம்" என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர்.