Published:Updated:

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் முற்றியது மோதல்

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் முற்றியது மோதல்
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் முற்றியது மோதல்

புதுக்கோட்டை: இதுவரை இலைமறைக்காயாக இருந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியண்ணன். அரசுவுக்கும், முன்னாள் அமைச்சர் ரகுபதிக்குமான மோதல் இன்று நேரடியாகவே அரங்கேறியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் முற்றியது மோதல்

உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் தேர்தல் ஆணையாளரான திருவிடைமருதூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் தலைமையில் நடந்தது. அப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மாவட்ட செயலாளரால் அறிவிக்கப்படாதவர்களும் போட்டியிட்டு இருந்தனர். அவர்களும் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதைக் காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டவர்களை உட்கட்சி தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் பெரியண்ணன். அரசு கூறியிருக்கிறார். உடனே, அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி உண்மையாக கட்சியில் உழைத்தவர்களுக்கு நீங்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. அதனால், அவர்கள் போட்டியிடும் சூழ்நிலை வந்தது. அதற்காக அவர்களை புறக்கணிக்கக்கூடாது என வாதிட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த அரசு, கட்சி நிர்வாகத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நான்தான் நிர்வாகம் செய்கிறேன். எனக்குதான் அதன் கஷ்டநஷ்டங்கள் தெரியும் என பதிலளித்திருக்கிறார். நானும் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவன்தான். நீங்க உள்ளாட்சி தேர்தல் மட்டுமில்லாமல், சட்டமன்ற தேர்தலிலும் காசு வாங்கிக் கொண்டு சீட் கொடுத்திருக்கிறீர்கள். பின்பு எப்படி கட்சிக்காரன் உங்களிடம் விசுவாசமாக இருப்பான் என ரகுபதி மீண்டும் கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து அரசு, நீங்க கட்சிக்காக என்ன செய்திருக்கிறீர்கள் எனக் கேட்க, நான் ஒரு நாளைக்கு நூறு கிலோ மீட்டர் காரிலேயே சுத்திக்கொண்டு இருக்கிறேன் என ரகுபதி பதிலளித்திருக்கிறார். நீங்க அ.தி.மு.க.வில் இருக்கும்போது, கொள்ளையடித்த பணத்தில் பல கல்லூரிகள் கட்டி வைத்திருக்கிறீர்கள். அதை பார்ப்பதற்காக போய் இருப்பீர்கள் என அரசு கிண்டலடித்திருக்கிறார்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ரகுபதி நீயும் சும்மா இருந்த ஆளுதான், இன்றைக்கு கட்டிடங்களாக கட்டி வைத்திருக்கிறாய் என சண்டை முற்றியிருக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த, தேர்தல் ஆணையர் திருவிடைமருதூர் ராமலிங்கம் இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார். அருகில் இருந்த கட்சிக்காரர்களோ இதுவரை இவர்கள் இருவரும் அடித்த கொள்ளை நமக்கு தெரியாம போச்சே என தலையில் அடித்துக் கொண்டார்களாம்.

-வீ.மாணிக்கவாசகம்