Published:Updated:

“சாதிச் சமூகமே சிறைதான்!”

“சாதிச் சமூகமே சிறைதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“சாதிச் சமூகமே சிறைதான்!”

“சாதிச் சமூகமே சிறைதான்!”

“சாதிச் சமூகமே சிறைதான்!”

“சாதிச் சமூகமே சிறைதான்!”

Published:Updated:
“சாதிச் சமூகமே சிறைதான்!”
பிரீமியம் ஸ்டோரி
“சாதிச் சமூகமே சிறைதான்!”

‘`இதுவரை என்மீது எத்தனை வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை, எனக்குத் தெரிந்து 18 வழக்குகள் இருக்கலாம். அனைத்தும் மக்களுக்கான போராட்டங்களை நடத்தியதற்காகப் போடப்பட்ட வழக்குகள்தான்’’ என்று சொல்லும் மணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர். வயது 31 தான். கடந்த சில வருடங்களாக ஆணவப்படுகொலை, நீட், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர். 

“சாதிச் சமூகமே சிறைதான்!”

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி  கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. 78 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வந்திருந்தார்.

‘`சாதிப்பாகுபாடு கெட்டி தட்டிப்போன மதுரை மாவட்டத்தில் மேலூர்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயக் குடும்பம். குடும்பத்தினருக்கு விவசாய வேலைகளைத் தவிர எந்த அரசியலும் தெரியாது.  இப்போதுதான் அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். சிறுவயதில் எல்லா இளைஞரையும்போல எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் சராசரியாக  வளர்ந்த எனக்கு,  போகப்போக கண்ணுக்கு முன்னால் நடக்கும் அதிகாரச் சுரண்டல்கள், ஒடுக்குமுறை, ஜாதி ஆதிக்க மனநிலை ஆகியவை தெரிய ஆரம்பித்தன. புத்தக வாசிப்புதான் என்னைப் பெரியாரிஸ்டாக மாற்றியது. 

பொருளாதாரத் தேவைக்காக  23 வயதில் திருப்பூரில் வேலை பார்த்தபோது, முற்போக்கு இயக்கங்களின் கூட்டங்களைக் கேட்பது, தோழமைகளுடனான உறவு ஆகியவற்றால் பெரியார் இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன்.

இப்போது நான் சார்ந்திருக்கும் அமைப்பையோ, என்னையோ முன்னிறுத்தாமல் பிரச்னைகளை முன்னிறுத்தி இந்தச் சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும் மணி அமுதன், தொடர்ச்சியாகச் செய்துவரும் முக்கியமான சமூகப்பணி சாதிமறுப்புத் திருமணங்கள்.

இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்திருக்கிறார். அதனால் ஆதிக்கச்சாதியினரால் பல நெருக்கடிகளைச் சந்தித்தாலும், இந்தச் சாதி எதிர்ப்புப்பணியில் மணி அமுதன் சளைத்ததேயில்லை. இவரது ஃபேஸ்புக் பக்கத்தைத் திறந்தாலே தொடர்ச்சியான இவரது சாதி எதிர்ப்புப் போராட்ட உணர்வுக்கான சான்றுகளைப் பெறலாம்.  சிறை சென்ற சமயத்திலும்கூட நண்பர்கள் உதவியோடு ஒரு சாதிமறுப்புத் திருமணத்தை நடத்தியிருக்கிறார்.

‘`78 நாள் சிறையில் இருந்தபோது நம்மைத்  தேடி வரும் காதல் ஜோடிகளுக்கு உதவ முடியவில்லையே என்றுதான் கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன். சிறை சென்ற இருபது நாளில் குமார் என்ற வாலிபரை என்  பிளாக்கில் அடைத்தனர். அந்தப் பையனுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தேன். அந்த நட்பில்தான் சிறைக்கு ஏன் வந்தேன் என்ற கதையைக் கூறினார். அந்தப் பையன் காதலித்த பெண் வேறொரு சாதியைச் சேர்ந்தவர். இது பெண் வீட்டுக்குத் தெரிந்து கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒருநாள் இருவரும் அங்கிருந்து கிளம்பி கோயிலில் திருமணம் செய்து சென்னையில் தங்கியிருக்கின்றனர். அதைக் கண்டுபிடித்த பெண் வீட்டுக்காரர்கள் கூட்டமாக  வந்து தாலியைக் கழட்டி வீசி, பெண்ணை அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், பொய்ப்புகாரைக் கொடுத்து குமாரைச் சிறைக்குள்ளும் தள்ளிவிட்டார்கள். இதனால் சாப்பிடாமல், உறங்காமல் புலம்பிக் கொண்டிருந்தார் குமார். அதற்குப் பின் என் வழக்கறிஞர்கள் மற்றும்  நண்பர்கள் மூலம் 25 நாள்களில் வெளியே எடுத்தோம். அதன் பின்பு அந்தப் பெண் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, குமாருக்கு என் நண்பர்கள் மீண்டும் திருமணம் செய்து வைத்தார்கள். இது சாதாரண காரியம் அல்ல. இதற்காக என் நண்பர்கள் பல பிரச்னைகளை எதிர் கொண்டார்கள்’’ என்கிறார் மணி அமுதன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சாதிச் சமூகமே சிறைதான்!”

‘`சமூக ஏற்றத்தாழ்வையும், பெண் ஒடுக்குதலையும், மூட நம்பிக்கைகளையும் சாதி மறுப்புத் திருமணங்கள், சாதி கடந்த காதல் திருமணங்களால்தான் சரிப்படுத்த முடியும் என்று திடமாக நம்புகிறேன். அண்ணல் அம்பேத்கர், பெரியார் கருத்துகள் அதைத்தான் வலியுறுத்துகின்றன. சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்ள சட்டப் பாதுகாப்பு இருந்தாலும், யதார்த்தத்தில் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினரே சாதிய  ஆணவத்தோடு காதலர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். இதுபோன்ற பாதிக்கப்பட்ட ஜோடிகளுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பையும் தனிப்பட்ட பாதுகாப்பையும் நாங்கள் வழங்குகிறோம்.

பெரும்பாலும் எங்களைத்தேடி வரும் காதல் ஜோடிக்கு முதலில் பாதுகாப்பை வழங்கிப் பதிவுத்திருமணம் செய்துவைப்போம். அந்த ஜோடிகளுக்கு நெருக்கடி அதிகமாக இருந்தால் எங்கள் இயக்கத்தின் மற்ற மாவட்டத் தோழர்களுக்குத் தகவல் சொல்லி அங்கு அனுப்பி வைத்துவிடுவோம்.
 
மூன்று வருடங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் அருந்ததிய சமூகத்துப் பையனும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்துள்ளார்கள். இது அவர்கள் வீட்டுக்குத் தெரிந்து பையனைக் கடுமையாக மிரட்டியுள்ளனர். அப்போது இந்தத் தகவல் எங்கள் கவனத்துக்கு வந்து, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், எம்.எல். கட்சித் தோழர்கள் துணையோடு அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தோம். இதற்காக நாங்கள்  கடுமையாக மிரட்டப்பட்டோம். கொலை செய்துவிடுவோம் என்றார்கள். அதையெல்லாம் கடந்துதான் பணி ஆற்றிக்கொண்டிருக்கிறோம்’’ என்றவர், தன் சிறைச்சாலை அனுபவங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

‘`மனித உரிமைகள் சிறிதும் மதிக்கப்படாத பிரிட்டிஷ் காலத்துக் கொட்டடிகள் போலவே சிறைச்சாலைகளை இன்னும் வைத்திருக்கிறார்கள். பொதுவாக சிறைச்சாலை என்பது மனம் திருந்துகிற இடமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அப்படி இல்லை.  குற்றம் சாட்டப்பட்டோ, தண்டனை உறுதிசெய்யப்பட்டோ சிறைக்குள் செல்கிற ஒவ்வொரு கைதியும் மன நோயாளிகளாக மாறிவிடும் நிலைதான் உள்ளது. பொதுவாக விசாரணைக்கைதிகளைச் சிறைக்குள் அடிக்கக் கூடாது. ஆனால், சிறைக்காவலர்களுக்குப் பொழுதுபோகாவிட்டாலோ, அல்லது எதாவது கேள்வி கேட்டாலோ, சிறை அதிகாரியிடமோ, நீதிமன்றத்திலோ சிறையிலுள்ள குறைபாடுகளைப்  புகாராகச் சொல்லிவிட்டாலோ  மிருகத்தனமாகத் தாக்குவார்கள். அதற்கு முன் சம்பந்தப்பட்ட கைதி என்ன ஜாதி என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதன்மூலம் ஆட்களைத் தனியாகப் பிரித்துத் தாக்குவார்கள்.

மதுரைச் சிறையில் நான்கு பிளாக்குகளில் இருக்கும் விசாரணைக்கைதிகள் 250 பேருக்கு மொத்தமே 10 கழிப்பறைகள்தான்.  அதுவும் மோசமாக இருக்கும். சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு அடக்குமுறைகள் இருக்கின்றன. வெளியே இருக்கும் அதே ஏற்றத்தாழ்வு சிறையிலும் உண்டு. மதுரை மத்திய சிறைச்சாலையில் ஜாதிரீதியான பாகுபாடு பார்க்கப்படுகிறது, தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர்மீது வெறுப்பு உமிழப்படுகிறது’’ என்று மனக்குமுறல்களைப் பகிர்ந்துகொண்டார்.

``அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக எங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம். முன்பு சாதி மறுத்துக் காதல் திருமணம் புரிந்துவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினோம். அதுபோல் வரும் காதலர் தின விழாவில் சாதி மறுப்புத் தம்பதிகளுக்கு விழா எடுத்து வாழ்த்த உள்ளோம். தற்போதைய காதல் ஜோடியினரின் கூடுகையையும், நீண்ட காலமாகக் காதல் தம்பதிகளாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களையும்  அழைத்து அவர்களின் அனுபவங்களை வெளிப்படுத்தும் விழாவை நடத்தவுள்ளோம்.

சிறையாக இருந்தாலும் சரி, சிறைக்கு வெளியிலும் சரி, சாதி இருக்கிறது. நம் கண்ணுக்குத் தெரியாமல் கட்டிப்போட்டிருக்கும் விலங்கு. அது உடையும் நாள்தான் சமூகத்துக்கான விடுதலை” என்கிறார்.

வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்!

செ.சல்மான் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism