Published:Updated:

பதவி இழந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதான புகார் என்ன? வழக்கின் முழு விவரம்...

பதவி இழந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதான புகார் என்ன? வழக்கின் முழு விவரம்...
பதவி இழந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதான புகார் என்ன? வழக்கின் முழு விவரம்...

ஓசூரில் வேகமாக ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்த சமயத்தில், அதில் ஈடுபட்டு தன்னை வளர்த்துக்கொண்ட பாலகிருஷ்ணரெட்டி மீது ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான சிவில் மற்றும் குற்ற வழக்குகள் பலவும் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன.

ருபது ஆண்டுகளுக்கு முன் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையைச் சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரின் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அவருடைய பதவியைப் பறித்த வழக்கு மற்றும் அதன் பின்னணி பற்றிப் பார்ப்போம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜீமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ரெட்டி. பி.ஜே.பி-யைச் சேர்ந்த இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜீமங்கலம் கிராமத்தில் கள்ளச் சாராயம் தடையின்றி விற்கப்படுவதையும், அதற்கு போலீஸார் துணை போவதையும் கண்டித்து, 1998-ம் ஆண்டு சாலைமறியல் போராட்டம் நடத்தினார். அப்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில்தான், இப்போது அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜீமங்கலம் கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முனியப்பன், கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததால் அந்தப் பகுதியில் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டதையடுத்து, முனியப்பன் மீது கோவிந்த ரெட்டி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, முனியப்பனைக் கைது செய்து சிறையில் அடைத்தது பாகலூர் போலீஸ். 

இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே முனியப்பனின் மகள் சரஸ்வதி, அதே கிராமத்தில் மீண்டும் கள்ளச் சாராய விற்பனையில் இறங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவிந்த ரெட்டியின் தம்பி ராமமூர்த்தி, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாதேஷ், சந்தோஷ் ஆகிய மூவருக்கும் எதிராக, காவல்நிலையத்தில் புகார் அளித்தார் சரஸ்வதி. அந்தப் புகாரில், கோவிந்த ரெட்டியும், மற்ற இருவரும் தன்னை ஊரின் மையப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டிவைத்துத் துன்புறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பாகலூர் போலீஸார், மூவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள், ஜாமீனில் வெளிவந்தனர். எனினும், கள்ளச் சாராய விற்பனையைத் தொடர நினைத்த முனியப்பன், தர்மபுரி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் கோவிந்தரெட்டி மீது மட்டும் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பின்னணியில் பாகலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் சிலர் இருப்பதும், அவர்கள் முனியப்பனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் கோவிந்த ரெட்டிக்குத் தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த கோவிந்த ரெட்டி, ஜீமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தன் ஆதரவாளர்கள் பலரையும் ஒன்று திரட்டி, 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி பேருந்து நிலையத்துக்கு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

`கள்ளச் சாராய விற்பனைக்கு போலீஸாரே துணை போவதா?' என்ற கோஷத்துடன் நடைபெற்ற சாலைமறியலில் பங்கேற்றவர்களை, பாகலூர் பேருந்து நிலையத்துக்கு முன் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்தில் பி.ஜே.பி பிரமுகராக அப்போது இருந்த பாலகிருஷ்ண ரெட்டியும் கலந்துகொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு, போலீஸார் கேட்டுக்கொண்ட போதிலும் கோவிந்தரெட்டியுடன் வந்தவர்கள், அதை ஏற்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் கற்களை வீசியும், இரும்புக் கம்பிகளையும் கொண்டு தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 20 காவலர்களுக்குக் காயம் ஏற்பட்டது. மேலும் போலீஸ் ஜீப், காவல் ஆய்வாளரின் இருசக்கர வாகனம், டிரக் வண்டிகள் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தவிர, சாலையில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் மீதும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, கோவிந்த ரெட்டி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது பாகலூர் காவல்நிலையத்தில் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் பாலகிருஷ்ணரெட்டி 49-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.  

இதற்கிடையே, பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் ஆனதும், அவருக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பாலகிருஷ்ண ரெட்டி, கடந்த 2001-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆதரவில் ஓசூர் நகராட்சித் தலைவரானார். பிறகு 2016-ம் ஆண்டில், மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை ஆதரவில் ஓசூர் சட்டமன்றத் தொகுதி சீட் பெற்று, வெற்றி பெற்று அமைச்சரானார். ஓசூரில் வேகமாக ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்த சமயத்தில், அதில் ஈடுபட்டு தன்னை வளர்த்துக்கொண்ட பாலகிருஷ்ணரெட்டி மீது ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான சிவில் மற்றும் குற்ற வழக்குகள் பலவும் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன.

இது தவிர, 2 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் விபசாரத் தொழிலில் ஈடுபட்டதாக, அவருடைய உதவியாளர் சத்யா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மசாஜ் நிலையம், பாலகிருஷ்ண ரெட்டிக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்காக போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்ததாக பாலகிருஷ்ண ரெட்டி மீது டி.ஐ.ஜி. ரூபா புகார் தெரிவிக்கவே, கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான், தற்போது 20 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகி பதவியை இழந்துள்ளார் பாலகிருஷ்ண ரெட்டி.

அடுத்த கட்டுரைக்கு