Published:Updated:

`தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடலாம்!’ - தமிழ்த் தேசிய பேரியக்கம் யோசனை

`தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடலாம்!’ - தமிழ்த் தேசிய பேரியக்கம் யோசனை
`தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடலாம்!’ - தமிழ்த் தேசிய பேரியக்கம் யோசனை

தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியும் எனத் தமிழக அரசுக்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் யோசனை தெரிவித்திருக்கிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடையில்லை என இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். குறிப்பாக, தூத்துக்குடி மக்களை இத்தீர்ப்பு நிலைகுலைய வைத்துள்ளது. உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டதால், இனி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாகத் தொழிற்சாலைகள் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டால், சட்டரீதியான பாதுகாப்போடு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட முடியும் எனத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ``செம்பு தயாரிப்பதற்கு உயர் வெப்பத்தில் சால்க்கோசைட், சால்க்கோ பைரைட் போன்ற செம்புத் தாதுகளை உருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஆலைகளைத் தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து, சட்டம் இயற்றினால்தான் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைத் திறக்க நிரந்தரத் தடை விதிக்க முடியும்.

இதற்கேற்ப, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து, ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் தொழில்நுட்பத்தையும் அபாயகரமானவை எனப் பட்டியலிட வேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர - அவசியக் கடமையாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் நீக்கி ஆணையிட்டபோது, அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதன் விளைவாக, இந்திய அரசு தானே ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. அதுபோல், தற்போது தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென ஓரணியில் நின்று வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாகக் கொள்கை முடிவெடுத்து, நடைபெற்றுக்கொண்டுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களைப் பாதுகாக்க இதுதான் சரியான தீர்வு” என்றார்.