Published:Updated:

தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்தில் செந்தில் பாலாஜி - சோகத்தில் மாவட்டச் செயலாளர்

தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்தில் செந்தில் பாலாஜி - சோகத்தில் மாவட்டச் செயலாளர்
தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்தில் செந்தில் பாலாஜி - சோகத்தில் மாவட்டச் செயலாளர்

 தி.மு.க-விற்குத் தாவிய செந்தில்பாலாஜி,முதன்முறையாக கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.


 

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 30,425 பேர்களோடு தி.மு.க-வுக்குத் தாவினார். அவர் கட்சி மாறியபின், முதல் நிகழ்ச்சியாக கரூர் மாவட்ட தி.மு.க-வினர் நடத்திய ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். கரூர் மாவட்ட தி.மு.க சார்பில், ஊராட்சி சபைக்கூட்டம் நன்னியூர் செவ்வந்திபாளையத்தில் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மாநில விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி, கரூர் மாவட்டப் பொருளாளர் கருப்பண்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.எஸ்.கே. கருணாநிதி, ரமேஷ்பாபு, மகேஸ்வரி,கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திகேயன்,கரூர் மாவட்ட  மீனவர் அணி அர்ஜுனன், நன்னியூர்  ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மண்மங்கலம் நன்னியூர் ஊரட்சியைச்  சேர்ந்த கிராம பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பகுதியின் பிரச்னைகளைக் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், "தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின் பேரில், தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக மண்மங்கலம், நன்னியூர் ஊராட்சியில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதேபோல, ஊராட்சி சபைக்கூட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள 157 ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமான குறைகளைக் கூறியிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம், வரும் 11- ம் தேதி வெள்ளிக்கிழமை, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தி.மு.க சார்பில் கோரிக்கை மனுவாகக் கொடுக்க உள்ளோம். அப்படி கொடுக்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மிக விரைவில் அமைய உள்ள தி.மு.க ஆட்சியில் இந்தக் குறைகள் அனைத்தும் நிவர்த்திசெய்து கொடுக்கப்படும்" என்றார்.  இந்தக் கூட்டத்தில், எல்லா வகையிலும் செந்தில்பாலாஜியின் கையே ஓங்கி இருந்தது. இதனால், மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் சுரத்தில்லாமலேயே இருந்தார்.