வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (10/01/2019)

கடைசி தொடர்பு:12:20 (10/01/2019)

இந்துத்வாவிற்கு எதிராகப் பதவியை ராஜினாமாசெய்து அரசியலில் களமிறங்கும் ஐஏஎஸ் அதிகாரி! 

காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபசேல், புதன்கிழமையன்று ராஜினாமாசெய்தார். 2010ல் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வில் முதன் முறையாக காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் முதலிடம் பெற்ற பெருமையைக் கொண்டவர் ஷா ஃபசேல் . அங்குள்ள இளைஞர்களின்  ரோல் மாடலாகத் திகழும் இவர், புதன் அன்று தன் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவரின் முகநூல் பக்கத்தில், "காஷ்மீரில் நடைபெறும் கொலைகள் குறையாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மத்திய அரசும் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றும்  இந்துத்துவாவின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டு              " இந்தியாவில், தேசபக்தி என்னும் பெயரில் சகிப்புத்தன்மையும் வெறுப்பரசியலும் ஓங்கிவருகிறது. இந்துத்வா சக்திகள் இந்தியாவின் 200 மில்லியன் முஸ்லிம் மக்களை ஓரங்கட்டவும், அவர்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றன. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவியை ராஜினாமாசெய்கிறேன்" 
என்று கூறியுள்ளார்.

இந்திய முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் , ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து கோருபவர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் தான் போராட இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபசேலுக்கு, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஷா ஃபசேல் தேசிய மாநாட்டு கட்சியில் இணைந்து 2019 ல் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.