ஒரு லட்சம் சீர்வரிசை; தேனிலவுக்கு ரூ.5,000..! - மணமக்களை நெகிழவைத்த ரஜினி ரசிகர்கள் | petta rajini movie relese - fans arranged for free marriage

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (10/01/2019)

கடைசி தொடர்பு:13:20 (10/01/2019)

ஒரு லட்சம் சீர்வரிசை; தேனிலவுக்கு ரூ.5,000..! - மணமக்களை நெகிழவைத்த ரஜினி ரசிகர்கள்

தஞ்சாவூரில் ரஜினி நடித்த `பேட்ட' படம் வெளியான தியேட்டரில், ஒன்றரை லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருள்களோடு, தேனிலவுக்கு செல்ல 5,000 ரூபாய் உட்பட அனைத்தையும் கொடுத்து, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டது. இதில், மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள்  நெகிழ்ந்து போய் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நன்றி கூறியதோடு, 'நாங்கள் கோயிலுக்குச் செல்லவில்லை, `பேட்ட' படம் பார்க்கிறோம்' எனக் கூறி, திருமணம் முடிந்த கையோடு படத்தைப் பார்த்தனர்.

ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்திய வைத்த ரஜினி ரசிகர்கள்

ரஜினி நடித்த `பேட்ட' திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியானது. தஞ்சாவூரில், சாந்தி மற்றும் ஜீபிடர் திரையரங்கிலும் வெளியானது. காலை 7.30 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர். `பேட்ட' படம் வெளியாவதை சிறப்பாகவும், யாருக்கேனும் உதவும் வகையிலும்  கொண்டாட நினைத்த ரஜினி மக்கள் மன்றத்தினர், ஏழை ஜோடிக்கு இலவச திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். அதன்படி, 30 ஜோடிகளை கணக்கில் எடுத்து, முதல் கட்டமாக மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஜோதிராமன் - உஷாராணி ஜோடிக்கு திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர். அதன்படி, இன்று காலை மணமக்கள் உறவினர்களுடன் `பேட்ட' படம் வெளியான தியேட்டருக்கு வந்தனர். அவர்களுக்கு தஞ்சை மாவட்டத் தலைவர் ரஜினி கணேசன் தலைமையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

சந்தோஷத்தில் மணமக்கள் குடும்பம்

4 கிராம் மதிப்பிலான தாலியை ரசிகர்கள் எடுத்துக் கொடுக்க, மணமகன் ஜோதிராமன் மணமகள் உஷாராணி கழுத்தில் தாலி கட்டினார் அப்போது, தியேட்டரில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் மணமக்கள் வாழ்க என கோஷமிட்டனர். அதோடு, குடும்பம் நடத்துவதற்குத் தேவையான கட்டில், மெத்தை, பீரோ, சமையலுக்குத் தேவையான பொருள்கள் என அனைத்தும், சீர்வரிசையாக மணமக்களுக்குக் கொடுக்கப்பட்டன.

பின்னர், `பேட்ட' திரைப்படம் ஓடும் மற்றொரு தியேட்டருக்கு மணமக்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சென்றதும் ரஜினி கணேசன், மணமக்கள் மற்றும் அவரது உறவினர்களை 'நீங்க கோயிலுக்கு  போயிட்டு வாங்க' எனக் கூறினார்கள். அதற்கு மணமக்கள், ரஜினி பெயரில் எந்தச் செலவும் இல்லாமல், எங்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காமல், அண்ணன் மாதிரி கூட நின்று எங்க திருமணத்தை நடத்திவைத்துள்ளீர்கள். எங்களைப் பொறுத்தவரை ரஜினிதான் கடவுள். எனவே, கோயிலுக்குச் செல்லவில்லை `பேட்ட' படம் பார்க்கிறோம் என நெகிழ்ச்சியாகக் கூற, அதன்படி மக்கள் மன்ற நிர்வாகிகள் அவர்களை படம் பார்க்கவைத்தனர்.

சீர்வரிசையுடன் மணமக்கள்

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் ரஜினி கணேசனிடம் பேசினோம். ``தலைவர் நடித்த `பேட்ட' படம் வெளிவரும்போது, ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவிசெய்து கொண்டாட நினைத்தோம். அதன்படி, ஒரு ஜோடிக்கு சீர்வரிசைப் பொருள்களோடு தேனிலவு கொண்டாட்டத்துக்குச் செல்ல 5,000 பணமும் கொடுத்து, இலவச திருமணத்தை நடத்திவைத்தோம். இதில், மணமக்கள் உட்பட அனைவரும் நெகிழ்ந்துபோனார்கள். இதற்கு முன், நாங்கள் பல நலத் திட்டங்களைச் செய்திருந்தாலும், இந்தத் திருமணத்தை  நடத்தியதை மகிழ்ச்சியாகக் கருதுகிறோம். இனி, தொடர்ந்து இதுபோன்ற உதவிகளைச் செய்ய உள்ளோம். இந்த நேரத்தில், இதற்குக் காரணமான எங்க தலைவருக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க