Published:Updated:

`நடுங்குவதை நிறுத்துங்கள்; என் கேள்விக்கு பதில் கூறுங்கள்!'- மோடியை சீண்டிய ராகுல்

`நடுங்குவதை நிறுத்துங்கள்; என் கேள்விக்கு பதில் கூறுங்கள்!'- மோடியை சீண்டிய ராகுல்
`நடுங்குவதை நிறுத்துங்கள்; என் கேள்விக்கு பதில் கூறுங்கள்!'- மோடியை சீண்டிய ராகுல்

ரஃபேல் போர் விமானம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் மோடிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே நீண்ட நாள்களாக வார்த்தைப் போர் நிலவிவருகிறது. ஐந்து மாநிலத் தேர்தலால் சற்று அமைதிபெற்றிருந்த இந்த விவகாரம், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் எனக் கூறிவந்தார். ஆனா,ல் அவரின் கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமே தொடர்ந்து பதிலளித்து வருகிறார். இதனால்,  ‘மோடியைப் பாதுகாக்க ஒரு பெண் பாடுபடுகிறார்’ என ராகுல் முன்னதாகக் கூறியிருந்தார். 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ராகுலை விமர்சித்துள்ளார் மோடி. அவர் பேசும்போது, “ இந்தியாவில் முதல் முறையாக ஒரு பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார். இது மிகவும் பெருமையான விஷயம். எங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் பொய்களை சுட்டிக்காட்டி, அவர்களை வாயடைக்க வைத்துவிட்டார். அதனால் தடுமாறிய எதிர்க்கட்சிகள், தற்போது பெண் பாதுகாப்பு அமைச்சரைக் குறை கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாது, அவர்கள் இந்தியாவின் மொத்த பெண் சக்திகளையும் அவமானப்படுத்தியுள்ளனர்” எனப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, மோடியின் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ராகுல் கந்தி, “ மதிப்பிற்குரிய மோடி அவர்களே, பெண்களை வீட்டிலிருந்தே மதிப்பதில்தான் நம் கலாசாரம் தொடங்குகிறது. நடுங்குவதை நிறுத்துங்கள். ஒரு தைரியமான ஆளா என் கேள்விக்கு பதில் கூறுங்கள். ரஃபேல் விமான கொள்முதலின்போது, அதை விமானப்படையும் பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்த்ததா இல்லையா?” எனப் பதிவிட்டுள்ளார்.