பிரீமியம் ஸ்டோரி

`இன்னும் ஆறுமாதத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்’ என்று வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க, மத்தியில் ஆள்வதற்காகத் துடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே சரியான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளன!

இறுதி எச்சரிக்கை!‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்பதுதான் பா.ஜ.க-வின் பிரதான முழக்கம். தற்போது அந்தக் கட்சியே மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்துள்ளது. அதேசமயம், இதைக் கொண்டாட முடியாத அளவுக்கு, மிசோரம் மாநில ஆட்சியைப் பறிகொடுத்துள்ள காங்கிரஸ், தெலங்கானாவில் பரிதாபத் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆக, ஆளும்கட்சியும் சரி... ஆண்ட கட்சியும் சரி... மக்கள் தேவையைப் புரிந்து கொள்ளாமல், ஆட்சிக்கு வந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘இஷ்ட தர்பார்’ நடத்திக்கொண்டிருப்பதன் எதிர்விளைவே இந்தத் தோல்விகள் என்பது நிரூபணமாகியுள்ளது!

மத்தியில் ஆட்சியைப் பிடித்து நான்கரை ஆண்டுக்காலமாகிவிட்ட நிலையிலும், தன்னுடைய ஆட்சியின் செயற்பாடுகளை மக்கள் முன் வைக்காமல், ‘இந்தியாவை காங்கிரஸ் நாசமாக்கிவிட்டது’ என்றே மீண்டும் மீண்டும் மோடி பேசிவருவதை மக்கள் ரசிக்கவில்லை. மாட்டிறைச்சிக்குத் தடை, ராமர் கோயில் போன்ற கோஷங்களையே தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பதும், காங்கிரஸ் போலவே பெரும் தொழிலதிபர்களுக்குக் குடை பிடிப்பதும்தான் பிரதான வேலையாக வைத்திருக்கிறது பா.ஜ.க.

கடந்தகாலத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு விழுந்த வாக்குகள் தற்போது குறைந்திருக்கின்றன. ஆனால், அவை அப்படியே காங்கிரஸுக்குச் சென்றுவிடவில்லை. உதிரிக்கட்சிகள் அவற்றைப் பங்குபோட்டுக்கொண்டுள்ளன. ஆக, காங்கிரஸ்மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மாநிலங்களின் உரிமைகளுக்கு மரியாதை, மக்கள்தாம் மாண்புமிகுக்கள் என்கிற தெளிவு, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானதை மட்டுமே யோசிக்கும் தலைமை... இவையெல்லாம்தான் இனி நிரந்தரத் தேவை என்பதை உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆம், ‘தேர்தல் ஜனநாயகத்தில் மக்கள்தாம் எஜமானர்கள்’ என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு