Published:Updated:

``உங்கள் கட்சி விளம்பரத்துக்கு 40% நாங்கள் தரவேண்டுமா?” -மோடியை விமர்சித்த மம்தா

``உங்கள் கட்சி விளம்பரத்துக்கு 40% நாங்கள் தரவேண்டுமா?” -மோடியை விமர்சித்த மம்தா
``உங்கள் கட்சி விளம்பரத்துக்கு 40% நாங்கள் தரவேண்டுமா?” -மோடியை விமர்சித்த மம்தா

இந்தியாவில் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் வரையிலான மருத்துவச் செலவை மத்திய அரசே ஏற்கும் என்ற `ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ திட்டத்தைச் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன்படி மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும். இதில் 60 சதவிகித தொகையை மத்திய அரசும் மீதமுள்ள 40 சதவிகித தொகையை மாநில அரசும் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஆயூஷ்மான் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கிடையில் ‘ஆயுஷ்மான் திட்டத்துக்கு மாநில அரசு சார்பாக ஒதுக்கப்படவேண்டிய நிதியை எங்களால் ஒதுக்கமுடியாது. மேற்கு வங்கத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என நினைத்தால் மொத்த தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். முன்பிலிருந்தே பா.ஜ.க.வும் மம்தா பானர்ஜியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய பிரச்னை தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் நேற்று தன் கருத்துக்கு விளக்கமளித்த மம்தா பானர்ஜி, ``பிரதமர் மோடிக்கு ஒருவரிகூட சரளமாக ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. அவர் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என நினைத்தால் எழுதிவைத்துக்கொண்டு பார்த்துத்தான் படிப்பார். ஆனால், அதைத் தானாக சரளமாகப் பேசுவதுபோல் பாவனை செய்துகொள்வார். இது அனைத்து ஊடகங்களுக்குமே தெரியும். அவர் திட்டம் என்ற பெயரில் அசுத்தமான அரசியல் நாடகங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். 

ஆயுஷ்மான் திட்டத்தில் உங்கள் (மோடி) முழு படம் மற்றும் தாமரை சின்னம் அச்சடிக்கப்பட்ட கடிதத்தை எதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் அனுப்ப வேண்டும். உங்கள் கட்சி விளம்பரத்துக்கு 40 சதவிகிதம் வழங்கி நாங்களும் துணை நிற்கவேண்டுமா. அரசின் திட்டத்தில் உங்கள் புகைப்படம், சின்னம் எதற்கு?” எனச் சரமாரியாக விமர்சித்துள்ளார்.