Published:Updated:

`நேராக அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்களே இதைச் செய்துள்ளனர்’ - கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கருத்து

`நேராக அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்களே இதைச் செய்துள்ளனர்’ - கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கருத்து
`நேராக அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்களே இதைச் செய்துள்ளனர்’ - கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கருத்து

ஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம், பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா காரின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளானதில், அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார். பல காலமாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 24-2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஒரு சம்பவத்தில் என்னைத் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இதில் துளியும் உண்மை இல்லை. இந்தச் செய்தி வெளியிட்டவர்கள் மீதும், மற்றும் இதற்குப் பின்னால் உள்ளவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நேற்றே சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும். 

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவத்தில் 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் குற்றவாளிகள் இதுவரை 24 முறை நீதிமன்றத்துக்குச் சென்று வந்துள்ளனர். அப்போதெல்லாம் நீதிமன்றத்தில் ஏதும் சொல்லாதவர்கள் தற்போது புதிதாக ஒரு தகவலை சொல்லி வழக்கைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். வரும் பிப்ரவரி 3-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்குப் பின்பு யார் உள்ளனர் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும். இந்தக் குற்றவாளிகள் மீது போக்ஸோ, திருட்டு, போன்ற பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஜெயலலிதா, கட்சி நிர்வாகிகளிடத்தில் ஆவணங்களைப் பெற்று கொடநாட்டில் வைத்திருந்ததாகவும் அதை எடுக்கவே திருட்டு நடந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எந்த நிர்வாகிகளிடமும் எந்த ஆவணத்தையும் பெற்றது கிடையாது. ஜெயலலிதா மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. கட்சி நிர்வாகிகளைத் தனது குடும்ப உறுப்பினராகப் பார்க்க கூடியவர் அவர். கட்சிக்காரர்களிடத்தில் அன்பாக பழகக் கூடியவர். அவர்களுக்குத் தேவையான பதவி வழங்கி அழகு பார்க்கக் கூடியவர் ஜெயலலிதா. இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டறிந்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டப்படும். அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்கள்தான் இப்படி கோழைத்தனமாகக் குறுக்குவழியில் அரசியல் செய்கின்றனர். அரசியலின் பின்புலத்தில்தான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும். 

தி.மு.கவைப் பொறுத்தவரை எதாவது ஒரு வழக்கு தொடர்ந்துகொண்டே உள்ளனர். அதிலும் என் மீது ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்ந்தனர். தற்போது அது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தைப் பொங்கலைச் சிறப்பாக கொண்டாடத் தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதிலும் தி.மு.க வழக்கு பதிவுசெய்துள்ளது. ஸ்டாலின் என் மீதே குறியாக உள்ளார். அவர் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு பெற்று முதல்வரானால் நாங்கள் தடுக்கப்போவது இல்லை. ஆனால், குறுக்கு வழியில் இந்த அரசை எந்தக் காலத்திலும் கவிழ்க்க முடியாது'' என்றார்.