Published:Updated:

தே.மு.தி.க இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது - தர்மபுரியில் விஜய பிரபாகரன் பேச்சு

தே.மு.தி.க இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது - தர்மபுரியில் விஜய பிரபாகரன் பேச்சு
தே.மு.தி.க இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது - தர்மபுரியில் விஜய பிரபாகரன் பேச்சு

தர்மபுரியில் இன்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில், தர்மபுரி வள்ளலார் திடலில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, விஜய பிரபாகரன் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டமன்றத் தேர்தலாகட்டும் தே.மு.தி.க இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, இதை நான் ஒரு தே.மு.தி.க தொண்டனாகச் சொல்வதாகத் தெரிவித்தார். இந்த விழாவில் விஜய பிரபாகரனுடன் தே.மு.தி.க-வின் துணை பொதுச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

தர்மபுரி மாவட்டத் தே.மு.தி.க சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் 1,400 பேருக்குப் பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய பிரபாகரன் 50 பயனாளிகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கித் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசாக எவர்சில்வர் குடம், புடவை, கரும்பு, அரிசி, சர்க்கரை அடங்கிய பொருள்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

விழாவில் பேசிய விஜய பிரபாகரன், ``விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தர்மபுரியில் பொங்கல் விழாவுக்குச் செல்வதாக அவரிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். `நீ போய் தொண்டர்களைப் பாரு. தைரியம் தானா வருமென்று’ சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இப்போ ரொம்ப தைரியமாக இருக்கு. அவர், உங்களை எல்லாம் கேட்டதாகச் சொல்லச் சொன்னார். தேர்தல் நேரத்தில் `சீக்கிரம் வர்றேன்னு சொல்லு, எம்மக்களை தங்கத் தட்டில் தாலாட்ட வருகிறேனென்று’ சொல்லென்று சொன்னார். அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளைக் கட்சியினரும் பொதுமக்களும் நம்ப வேண்டாம். அவர் பூரண நலம் பெற்று மீண்டும் அரசியலில் ஈடுபடுவார். 

கடந்த 2011 தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளின் பார்வையும் கோயம்பேடு தே.மு.தி.க அலுவலகம் நோக்கி இருந்ததோ, அதேபோல இனி தமிழகத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் என்று எந்தத் தேர்தல் வந்தாலும் மற்ற கட்சிகளின் பார்வை தே.மு.தி.க பக்கமே இருக்கும். எந்தெந்த கட்சிகள் தே.மு.தி.க-வுக்கு பலம் இல்லை என்று கூறி வருகிறார்களோ அவர்கள் எல்லாம் இன்னும் மூன்று மாதங்களில் ஊடகங்கள் வழியாக தே.மு.தி.க பற்றிப் பேசுவார்கள். இதை நான் ஆணவமாகவும் கர்வமாகவும் தே.மு.தி.க தொண்டனாக உங்களிடம் சொல்கிறேன். காரணம் தே.மு.தி.க பலம் பற்றி எங்க கட்சித் தொண்டனுக்குத் தெரியும். தமிழக மக்களுக்கும் தெரியும்’’ என்று பேசினார்.