Published:Updated:

`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்!

`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்!
`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்!

எனது ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில்  காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக இருந்து வருகிறார். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  குமாரசாமியின் ஜனதாதள கட்சிக்கு 37 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி குமாரசாமிக்கு ஆதரவளித்ததால் கர்நாடக முதல்வர் பதவி குமாரசாமிக்கு கை கூடியது.  எனினும், பாரதிய ஜனதா கட்சி குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் சிவக்குமார், கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆபரேஷன் லோட்டஸை தொடங்கியுள்ளதாகவும் மும்பையில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏக்களான ஹெச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனைக் கடிதம் மூலம் இருவரும் ஆளுநருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும், அதற்காக மும்பையில் உள்ள இருவரும் முகாமிட்டுள்ளனர் கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் ஆதரவு வாபஸால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் எனக் கூறப்படுகிறது. கர்நாடக அரசின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 119ல் இருந்து 117 ஆகக் குறைந்துள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

இந்நிலையில், ``இரண்டு எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றதால் எனது ஆட்சிக்கு  எந்த பிரச்னையும் இல்லை. பா.ஜ.கவுடன் சேர்வதாகக் கூறப்பட்ட 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் என்னிடம் தெரிவித்து விட்டுத் தான் மும்பை சென்றுள்ளனர். 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?. என் வலிமை எனக்குத் தெரியும். நான் முழு நிம்மதியுடனேயே இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக ஊடங்களில் வரும் செய்திகளை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்" என்று கூலாக கூறி வருகிறார்.