Published:Updated:

மனுவின் மெனு

மனுவின் மெனு
பிரீமியம் ஸ்டோரி
News
மனுவின் மெனு

படங்கள் : ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

மனுவின் மெனு

‘இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே’ என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. ‘இந்தியாவைப் பொறுத்தவரை, அப்போராட்டம் பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான போராட்டமாக நடக்கிறது’ என்பார் அண்ணல் அம்பேத்கர். இந்தப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும், இந்தியாவின் பூர்வகுடிகளாகிய நாகர்களுடன் கலந்துருவாகி நிலைகொண்ட திராவிட நாகரிகத்திற்கும் வேதவழிப்பட்ட ஆரிய நாகரிகத்திற்கும் இடையிலான போராட்டத்தில் இருக்கிறது. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி இந்தியப் பரப்பிற்குள் வந்த ஆரியர்கள், தம்மையும் வேதத்தின் முதன்மையை ஏற்றுக்கொண்டவர்களையும் உள்ளடக்கி, தம்மவர்களை நால்வர்ணங்களாகப் பிரித்துக்கொண்டார்கள். இவர்களை ‘வர்ண பாஹ்யர்கள்’ என்றும் கூறிக்கொண்டனர். (வர்ணபாஹ்யம் பெண்களுக்கு இல்லை.) வேதத்தை ஏற்காதவர்களும் பூர்வகுடிகளும் ஐந்தாம் வர்ணத்தவரல்ல, அவர்கள் அவர்ணர்கள்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு, ஒருவர் இன்னொரு வர்ணத்திற்கு மாறிச்செல்லும் விதமானதாக நெகிழ்வுத்தன்மையுடன் இந்த வர்ணப் பிரிவினை இருந்தபோதிலும், குறிப்பிட்ட வர்ணத்தில் இருக்கும்போது, அவ்வர்ணத்திற்குரிய கடமைகளுக்கும் உரிமைகளுக்கும் கட்டுப்பட வேண்டியவராயிருந்தார். வர்ண பாஹ்யர்களின் ஒவ்வொரு பிரிவுக்குமான கடமைகளும் உரிமைகளும் பாரபட்சமானவை என்பதோடு, வர்ணக்கலப்பு நடந்துவிடாமல் தடுப்பதை நோக்கமாகவும் கொண்டவை. வர்ணத்தவர்களுக்குள்ளும், வர்ணத்தவருக்கும் அவர்ணத்தவருக்கும் இடையேயும் கலப்பு நடந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆரியர்கள் உருவாக்கிய தடைகள்தாம் இன்றளவும் இந்தியச்
சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறன்றன. இத்தடைகள், வர்ணங்கள் சாதியாக மாறிய காலகட்டத்தில், சாதியின் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மேலும் இறுக்கமடைந்து, கலந்து உண்பதையும் புறமண முறையையும் தடுப்பதற்கானவை என்றாகின.

மனுவின் மெனு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆரியத் தூய்மையை/பிராமணத் தூய்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இந்த வர்ணத்தின் மேலாதிக்கத்தை மற்ற வர்ணத்தவர் மீதும் அவர்ணர்கள் மீதும் ஒட்டுமொத்தமான பெண்கள் மீதும் நிலைநிறுத்துவதற்காகவும், காலத்துக்குக் காலம் உருவாக்கப்பட்டுவந்த தடைகளே இங்கு சட்டதிட்டங்களாகின. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பனவற்றின் எதிர்மறைப் பண்புகளைக் கொண்ட இச்சட்டதிட்டங்கள், நடைமுறைகள், தண்டனைகள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் பிராமணியம் என்று பின்னாளில் அம்பேத்கர் வரையறுக்கிறார். பிராமணியம் சமூகத்தை இணக்கம் காணமுடியாத கூறுகளாக்கியதோடு, இந்திய குடிமக்கள் எந்தவொரு நிலையிலும் ஒருவருக்கொருவர் சமமல்ல என்கிற நிலையையும் உருவாக்கியது. பிராமணியத்தை எதிர்த்தப் போராட்டத்தின் ஒரு கட்டத்திற்கு பௌத்தம் தலைமையேற்றது, வெற்றியும் கண்டது.

பௌத்தம் வேதமயப்பட்ட சடங்குகள், அச்சடங்குகள் வழியேயான பார்ப்பனிய மேலாதிக்கம், அந்தச் சாதிக்கென வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சலுகைகள் ஆகியவற்றைத் தடைசெய்தது. வேதச் சடங்குகளுக்கு யாகங்களே அடிப்படை. மனிதர்கள், பசு, எருது, குதிரை உள்ளிட்ட கால்நடைகள், மயில் உள்ளிட்ட பறவைகள் ஆகியவற்றை அவிர்பொருளாகத் தீயிலிட்டு கடவுளுக்குப் படைத்தபின் உண்ணும் இந்த யாகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதால், புரோகிதர்களாகிய பார்ப்பனர்கள் செல்வாக்கிழந்தனர். இழந்த செல்வாக்கை மீட்பதற்கான பார்ப்பனர்களின் அங்கலாய்ப்பு புஷ்யமித்திர சுங்கனின் ஆட்சியைக் கொண்டுவந்து சேர்த்தது. புஷ்யமித்திரனின் ஆட்சியானது, பார்ப்பனர்களின் நலன்களை மீட்டுக்கொண்டது மட்டுமன்றி, பௌத்த பிக்குகளின் தலைக்கு விலைவைத்து அழித்தொழித்ததுடன், பௌத்தம் உருவாக்கிச் சென்ற மதிப்பீடுகள், அறங்கள், சமத்துவக் கண்ணோட்டம் ஆகியவற்றையும் ஒழித்துக்கட்டத் தொடங்கியது. இதன்பொருட்டு பௌத்தர்கள்மீது பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டன. பார்ப்பன நலன்களுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு விடாதபடியும், பௌத்தம் போன்ற எதிர்மரபுகள் மீண்டும் உருவாகிவிடாமல் தடுக்கும் விதமாகவும் இந்தக் கட்டத்தில் சுமதி பார்கவா என்பவரால் எழுதப்பட்ட சட்டத் தொகுப்புதான் மனுஸ்மிருதி.

பார்ப்பனர்களைச் சமூகத்தின் உயர்தனிச் சிறப்புடையவர்களாக முன்னிறுத்திய மனுஸ்மிருதி, அதற்கேற்ப பாலினங்களுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் உட்சாதிகளுக்குள்ளும் பல தடைகளை உருவாக்கியது. (பெண்கள் மாராப்பு போடக் கூடாது, ஆண்கள் தோளில் துண்டுப் போடக் கூடாது, கணுக்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது,  நாற்காலியில் அமரக் கூடாது, திருமணத்தில் நெய் பரிமாறக் கூடாது, கல்வீடு கட்டக்கூடாது, நமஸ்காரம் சொல்லக் கூடாது என்று பல கூடாதுகள்)

இந்தத் தடைகள் பார்ப்பனர்களுக்கு எது புனிதம், எது தீட்டு என்பதை அடிப்படையாகக் கொண்டவை. பார்ப்பனர்களின் நலன் காக்கும் இத்தடைகளை ஒவ்வொரு சாதியும் தனது தனித்தன்மையையும் புனிதத்தையும் காப்பதற்கானவை என்று உருவகித்துக்கொண்டு, பிற சாதியை அணுகும் நிலை உருவானது. தடைகள் பலவிதமானதாக இருந்தாலும், சாராம்சத்தில் கலந்து உண்ணுதலையும் சாதிக்கலப்புத் திருமணத்தையும் தடுப்பதே அவற்றின் நோக்கம். இஸ்லாமியர் ஆட்சி, இவ்விசயங்களில் தலையிடுவதைத் தனது நிகழ்ச்சி நிரலாக வைத்துக்கொள்ளவில்லை. அடுத்துவந்த பிரிட்டிஷ் ஆட்சியைப் பொறுத்தமட்டில், சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதாவது, இந்தியர்கள் அனைவரும் சமமான அடிமைகள். ஆனால், அடிமைகளை மேய்த்துக்கொடுக்கும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கெனவே அந்த வேலையைப் பல நூற்றாண்டுகளாகச் செய்துகொண்டிருக்கும் பார்ப்பனர் களிடமும் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலைச் சாதியினரிடமும் ஒப்படைத்தது. இவர்கள், சமூகரீதியிலும் அரசு இயந்திரத்திலும் அதிகார மையங்களிலும் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் ஒரு மனுவாத ஆட்சியையே நடத்திவந்தனர். எனினும், பிரிட்டிஷார் தம் சொந்தத் தேவையிலிருந்து மேற்கொண்ட சில நடவடிக்கைகள், தவிர்க்கவியலாதபடி பார்ப்பரனல்லாத பிறரைப் பொதுவெளிக்கு இட்டுவந்தது. பார்ப்பனர்களின், சரியாகச் சுட்ட வேண்டுமானால், பார்ப்பன ஆண்களின் ஏகபோகமாக இருந்த அனைத்திலும் பெண்களும் பார்ப்பனரல்லாதாரும் நுழையும் நிலை உருவாகியது. இம்மாற்றத்தைத் தடுப்பதற்கும், முடியாதபட்சத்தில் குறைந்தளவு சேதாரத்துடன் தப்பிப்பதற்கும் மனுவாதிகள் சாத்தியமான வழிகளிலெல்லாம் முயன்றுக்கொண்டுதானிருந்தனர்.

ஆனாலும், காலனியாதிக்கத்தை முறியடித்து சுதந்திரமடைந்த நாடு என்கிற வகையில், இந்தியா தனக்கான ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டி வந்தபோது, அவர்களால் மனுஸ்மிருதியை முன்னிறுத்த முடியாமல் போனது. ஒருவரைவிட ஒருவர் மேலானவர் அல்லது கீழானவர் - ஆனால், பார்ப்பனர் எல்லோரையும்விட எப்போதுமே மேலானவர் என்கிற மனுஸ்மிருதியின் நிலைப்பாட்டை நிராகரித்த புதிய அரசியல் சாசனம், ‘ஒருவருக்கு ஒருவர் சமம்’ என்று அறிவித்தது.

‘‘...சமநீதிக் கோட்பாட்டை அறிவித்துவிடலாம். ஆனால், அதைப் பலனுள்ளதாக்குவது வேறு விசயம். சமநீதிக் கோட்பாடு பலனுள்ளதாக இருக்கிறதா, இல்லையா என்பது இந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்தும் அரசு நிர்வாகச்சேவையின் தன்மையைப் பொறுத்தது. சிவில் நிர்வாகம் தன்னுடைய வகுப்புப் பாரபட்ச மனப்பான்மை காரணமாக, நிறுவப்பட்ட முறைமைக்கு நண்பனாகவும் புதிய முறைமைக்குப் பகைவனாகவும் இருந்தால், புதிய முறைமை உருவாகவே முடியாது. புதிய முறைமை வெற்றிபெறுவதற்கு அதற்கு இசைவான சிவில் நிர்வாகம் தேவை என்பதை 1981-ல் பாரீஸ் கம்யூன் உருவானபோது, கார்ல் மார்க்ஸ் உணர்ந்திருந்தார். லெனின், சோவியத் கம்யூனிசத்தை உருவாக்கியபோது, அதையே பின்பற்றினார். துரதிருஷ்டவாசமாக பிரிட்டிஷ் அரசாங்கம் அரசுப் பணி அதிகாரிகளைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. உண்மையில், சமத்துவக் கோட்பாட்டுக்கு இடமேயில்லாத பழைய முறைமையில் நம்பிக்கைகொண்ட வகுப்பினருக்கு நிர்வாகத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டன. இதன் விளைவாக, இந்தியாவின் ஆட்சி, பிரிட்டிஷாரிடம் இருந்தாலும் நிர்வாகம் இந்துக்களால் நடத்தப்பட்டது...’’ என்று பிரிட்டிஷ் ஆட்சி பற்றி அம்பேத்கர் குறிப்பிட்டது, சுதந்திர இந்தியாவிற்கும் பொருந்துவதாய் இருந்தது. அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல, நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சியாளர்களிலும் ஒரு பகுதியினராக மனுவாதிகள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். புதிய மாற்றங்களை - அரசியல் சாசனம் முன்வைக்கும் சமம் என்கிற நிலைப்பாட்டை-  உள்ளிருந்து அரிப்பதற்கும் தடுப்பதற்கும் ஆனமட்டிலுமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வந்தனர். எனினும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள உத்திரவாதங்களை நடைமுறை உண்மையாக்கிக் கொள்வதற்கான போராட்டத்தை, சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் நடத்தியவர்கள், அத்திசையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டிவந்தனர். பார்ப்பனரல்லாத பிறர் ஈட்டிவரும் இந்த வெற்றிகளை ஏற்கமுடியாத மனுவாதிகளின் எரிச்சலையும் பொருமலையும் ஒருமுகப்படுத்தி, சங் பரிவாரம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மனுவின் மெனு

சங் பரிவாரம் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனர்களின் பண்பாட்டையே இந்தியப் பண்பாடெனக் காட்டும் வேலையை நடத்திவருகிறது. அதன்பொருட்டு முதலாவதாக, பார்ப்பனர்களுக்கு ஒரு பூர்வீகத்தன்மையை வழங்க வேண்டியிருக்கிறது. ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் நிறுவியுள்ள நிலையில், ஆரியர்களின் வேதத்தையும் வேதவழிச் சடங்குகளையும் சம்ஸ்கிருதத்தையும் இன்றளவும் கைக்கொண்டுள்ள பார்ப்பனர்களை நாட்டின் பூர்வகுடிகளாகக் காட்டியாக வேண்டுமானால், அவர்களின் முன்னோர்களான ஆரியர்களை பூர்வகுடிகளாகக் காட்ட வேண்டியுள்ளது. இஸ்லாமியரையும் கிறிஸ்தவர்களையும் அன்னியர்களாகக் காட்டுவதற்காகவும்கூட ஆரியர்களை நாட்டின் பூர்வகுடிகளாகக் காட்டியாகும் நெருக்கடி இருக்கிறது. அதற்காக, சிந்து சமவெளி அகழாய்வுகளை ஆரியர்களுடன் தொடர்புபடுத்தும் மோசடி களைச் செய்கிறார்கள்.  அங்கு கண்டெடுக்கப்பட்ட ‘யுனிகார்ன்’ மிருகத்தின் ஒற்றைக்கொம்பை கிராபிக்ஸ் மூலம் நீக்கி, குதிரையெனக் காட்டி, குதிரை ஆரியர்களோடுத் தொடர்புடையது- ஆகவே சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே எனக் காட்டும் மோசடியில் ஈடுபட்டார்கள். அந்த மோசடி அம்பலமான பின்னும், முயற்சி வேறு வகைகளில் தொடர்கிறது.

வேதமயப்பட்ட சடங்குகளையும் யாகங்களையும் கடவுள்களையும் அரசின் ஆதரவோடு பரவலாக்குவது (பூமி பூஜை, புஷ்கரம், விஞ்ஞான பைரவம்...), வேதகாலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சியுற்றிருந்ததாகப் புனைவது (பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, புராண காலத்திலேயே புஷ்பக விமானம்...), சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக மாற்றுவது,  ‘பகவத் கீதை’யைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, புராண இதிகாசங்களை உண்மை எனப் பரப்புவது (ராமன் பிறந்த இடத்தில் கோயில், ஹனுமானின் ஜாதி), மனுஸ்மிருதி கறாராக பின்பற்றப்பட்ட காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, இந்தியா என்றென்றைக்கும் இந்துக்களின் நாடாக இருந்ததென வரலாற்றைத் திரிப்பது (உண்மையான வரலாற்றைக் கூறும் நூல்களையும் ஆய்வுகளையும் தடுப்பது, நகரங்களுக்கும் இடங்களுக்குமுள்ள இஸ்லாமியப் பெயர்களை மாற்றி சம்ஸ்கிருதப் பெயர்களைச் சூட்டுவது, தொல்லியல் தலங்களையும் சான்றுகளையும் அழிப்பது, இஸ்லாமியத் திருநாள்களின் போது இறைச்சிப் புழக்கத்தைத் தடுப்பது, மசூதிக்கு வெளியே தொழக் கூடாது எனத் தடைவிதிப்பது), பார்ப்பனிய பண்டிகைகளைத் தேசிய பண்டிகை என்றாக்கிக் கொண்டாடுவது, தாவர உணவுப் பழக்கமே சிறந்ததென திணிப்பது (உயர்கல்வி நிறுவனங்களில் தனித்தனி உணவகங்கள், கைகழுவ தனித்தனி இடம்) - போன்றவற்றின் மூலம் பார்ப்பனிய மேலாதிக்கம் திணிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாதாரின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, சடங்குகளை, மொழியை இழிவானதாகச் சித்திரிப்பது, அதன்பேரில் அவர்களைத் தண்டித்து ஒடுக்குவதும்கூட இதே நோக்கத்திற்காகத்தான். இதற்கிசைவாக, முடிந்தால், அரசின் மூலமாகப் புதிய சட்டங்களையும் தடைகளையும் உருவாக்குவது, முடியாதபட்சத்தில் சட்டவிரோதக் கும்பல்களைவைத்து வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலமாக நிறைவேற்றுவது என்பதற்கு, பசு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகளை விவாதித்து இக்கட்டுரையை நிறைவுசெய்யலாம்.

‘பசு புனிதமானது- ஆகவே அதைத்  ‘தேசியத் தாயாக’ அறிவிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையோடு சில மாநில அரசுகள், இப்போதைக்கு மாநிலத் தாயாக அறிவித்துள்ளன. பசுவைப் பாதுகாப்பதற்காக எத்தனை பேரையும் கொல்லலாம் என்கிற கொக்கரிப்பு அதிகரித்து வருகிறது. கேரளத்திலும் வடகிழக்கிலும் கோவாவிலும் தரமான மாட்டுக் கறிக்காகப் போராடும் பா.ஜ.க., மற்ற சில மாநிலங்களில் மாட்டுக் கறி உண்பதைத் தண்டனைக்குரிய குற்றமெனச் சட்டமியற்றியுள்ளது. இவ்விசயத்தில் காங்கிரஸும்கூட கறிச்சோற்றை ஒரு கவளம் விழுங்கிக்கொண்டே பசுக்களைப் பாதுகாக்கப் போவதாகவும் தெரிவிக்கிறது.

மனுவின் மெனு

பார்ப்பனர்களுக்கும் அவர்களது முன்னோர்களான ஆரியர்களுக்கும் பசு புனிதமானதுதான். அதனாலேயே, புனிதமான அந்தப் பசுவை பலி கொடுத்தால் புண்ணியம் கிட்டுமென அவர்கள் யாகத்தில் இட்டு, தின்று வந்திருக்கிறார்கள் என்பதை  ‘பசுவின் புனிதம்’ நூலில் டி.என்.ஜாவும், தனது தொகுதி நூல்களில் அம்பேத்கரும் குறிப்பிட்டுள்ளனர். தமிழர்களின் தொல்இலக்கியம் எனப் போற்றப்படும் சங்கப் பாடல்களிலிருந்து மேற்கோள் காட்டி, ‘தமிழர்கள் தொல்பழங்காலம்தொட்டே மாட்டுக்கறி தின்று வந்தனர்’ என்பதை மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி நிறுவியுள்ளார். ‘ஆநிரை கவர்தல் என்பதே, கன்றுகாலிகளைக் களவாடி அவற்றில் கொழுத்தப் பசுக்களை அறுத்து பங்கிட்டு உண்பதுதான்’ என்கிறார். வேளாண்மைக்கு அவசியமான கால்நடைச் செல்வங்களை யாகத்தின் பெயரால் சுட்டுத் தின்னும் வழக்கத்திற்கு எதிரான விவசாயிகளின் குமுறலுக்கு அஞ்சியும், கொல்லாமையைப் போதித்ததால் பௌத்தத்திற்கு ஏற்பட்ட செல்வாக்கிற்கு ஈடுகொடுத்தாக வேண்டிய நெருக்கடி யினாலும் ஆரியர்/பார்ப்பனர் மாட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சி வகைகளைத் தின்பதைப் படிப்படியாகக் கைவிட்டனர். மாட்டுக்கறி தின்பதைத்தான் அவர்கள் கைவிட்டனரே அன்றி, மாட்டுக்குக் கொடுத்துவந்த புனித அந்தஸ்தை இன்றளவும் காப்பாற்றவே விரும்புகிறார்கள்.

இறைச்சி உண்பவர்கள் - உண்ணாதவர்கள் என்று முதல் பிரிவினையையும், மாட்டுக்கறி உண்பவர்கள் - உண்ணாதவர்கள் என்று மற்றொரு பிரிவினையையும் உண்டாக்கி, உணவின் அடிப்படையில் ஒரு வெறுப்பரசியலை முன்னெடுப்பதைப் போலவே, மனுவாதிகள் பல்வேறு திட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.  இதற்குத் தோதானதாக அரசு இப்போது அவர்களிடம் சிக்கியிருக்கிறது. நாட்டின் உள் கட்டுமானங்கள், பாதுகாப்பு, நிதி பரிவர்த்தனை, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு, வெளியுறவு போன்றவற்றைக் கவனித்துக்கொள்வதற்கும் அப்பால், ஓர் அரசு தனது செயல் எல்லையை விரிவுபடுத்திக்கொள்வதற்கான தேவையேதுமில்லை. ஆனால், அரசானது வரம்பு மீறி அன்றாடம் தனிமனித வாழ்வில் தலையிட்டு வருகிறது. குடிமக்களின் நடவடிக்கைகளை இடையறாது கண்காணிக்கிறது. கணினிகளுக்குள் அத்துமீறி நுழைவதற்கான அவசரச்சட்டம் இதையே உணர்த்துகிறது. இன்னதைச் செய்தாகவேண்டும் அல்லது செய்யவே கூடாதென உத்தரவிடுகிறது. குடிமக்களின் புழங்குமிடத்தையும் புழங்குபொழுதையும் குறுக்கி, நடமாட்டத்தைக் கட்டுப் படுத்துகிறது. குற்றத்தன்மைகள் குறித்த வரையறைகளை மாற்றியமைக்கிறது. தண்டனைகளைக் கடுமையாக்கி அச்சுறுத்தலை உருவாக்கி இயல்பான சிந்தனையையும் செயல்பாட்டையும் முடக்குகிறது.

அரசதிகாரத்தில் இருப்பவர்கள், அதனாலேயே தங்களது மன விகாரங்களையெல்லாம் மக்கள் மீது இப்படியாகப் பிரயோகித்துப் பார்க்கிறார்கள் என்பதல்ல இதன் பொருள். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு தரப்பாகவும் குடிமக்கள் மற்றொரு தரப்பாகவும் செங்குத்தாகப் பிளவுண்டு எதிரெதிர் நிலைக்குப் போய்விட்டதாக மிகையாகவும் மதிப்பிடத் தேவையில்லை. நடப்பிலுள்ள அரசியல் சாசனத்தை வெறுங்கூடாக வைத்துக்கொண்டு, மனுஸ்மிருதி காலத்து மதிப்பீடுகளுக்குள் நாட்டைத் தள்ளிக்கொண்டுப்போக இதைவிட வாய்ப்பானதொரு தருணம் இனி வாய்க்கப்போவதில்லை என்பதை மனுவாதிகள் அறிந்துகொண்டிருக்கிறார்கள். அதனாலேயே தமது செயல்பாடுகளில் அவர்கள் மூர்க்கத்தைக் கூட்டிவருகின்றனர் என்பதன் அறிகுறியே இப்படியான தடைகளும் திணிப்புகளும் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஆதவன் தீட்சண்யா