Published:Updated:

`சொந்த பாக்கெட்டில் இருந்து கொடுப்பதுதான் இலவசம்!'- கமல்ஹாசன்

`சொந்த பாக்கெட்டில் இருந்து கொடுப்பதுதான் இலவசம்!'- கமல்ஹாசன்
`சொந்த பாக்கெட்டில் இருந்து கொடுப்பதுதான் இலவசம்!'- கமல்ஹாசன்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின், மேற்கு மண்டல புதிய அலுவலகத்தை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இதையடுத்து, தொண்டர்கள் மத்தியில் கமல் பேசினார்.

அதன் பிறகு, கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நான் 3 வயதுக் குழந்தையாக இருந்ததில் தொடங்கி 60 வருடமாக மக்கள் என்னைக் கலைஞராகத் தோளில் தூக்கி வைத்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு என் தோளை கொடுப்பதே எனது கடமை. அதை நான் செய்து வருகிறேன். மக்களுக்குச் சேவை செய்ய வந்தேன் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அதெல்லாம் இல்லை, என் கடமையைச் செய்ய வந்துள்ளேன். இந்தக் கடமை எல்லா தோழர்களுக்கும் உண்டு. அதை நினைவுறுத்தவும் வந்துள்ளேன்.

கொடநாடு விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆராய வேண்டும். கொடநாடு துரோகத்தின் சின்னமாக உள்ளது. கட்சியை அணுக வேண்டுமானால் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும், சென்னை செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி அதற்கு ஏற்றவாறு மக்களை நோக்கிச் செல்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமா என்பதைக் கட்சிதான் முடிவு செய்யும். டெல்லியைத் தவிர்த்துவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. நான் இந்தியன். ஆனால், முதலில் தமிழன். மக்கள் நீதி மய்யம் முதலில் தமிழக அரசியலில் கவனம் செலுத்துகிறது.

பிரச்னைகளை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வதில்லை. மக்களே அவர்களது பிரச்னைகளை எங்களிடம் எடுத்து வருகிறார்கள், கொள்கைக்கும் திட்டத்துக்கும் உள்ள வேறுபாடு புரிவதில்லை. கொள்கை எப்போதும் மாறாதது. திட்டங்கள் அப்படியல்ல. வேலையில்லா திண்டாட்டம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் தொடர்பாக எளிய மக்களிடமும் வல்லுநர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம். தங்களது சொந்த பாக்கெட்டில் இருந்து கொடுப்பதுதான் இலவசம். மக்களின் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுப்பது இலவசம் இல்லை. உயர் கல்வியையும் இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

ஊழல் ஒழிய வேண்டும் என்பவர்கள் எல்லாருமே எங்களின் ஒருமித்த கட்சிகள்தான். அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைப்போம். இட ஒதுக்கீடு என்பதே ஒரு முக்கிய காரணத்துக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம். அந்தக் காரணம் நீக்கிய பிறகுதான் இதைப் பற்றிப் பேச வேண்டும். ஆனால், இந்தக் காரணம் இன்னும் நீக்கவில்லை என்பதே உண்மை. அதிகாரப் பகிர்வு இன்னும் அனைத்து மக்களுக்கும் சென்றடையவில்லை'' என்றார்.