Published:Updated:

`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்

`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்
`நடக்க முடியாத தந்தை; மனநலம் பாதித்த தாய்' - 8ம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஓ.பி.எஸ்

படுத்த படுக்கையாக இருக்கும் தந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என இருவரையும் தனி ஆளாக பராமரித்துவரும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு ஒன்றைக் கட்டிக்கொடுத்திருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் மட்டுமல்லாமல், தேனி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி முத்தம்மாள். கூலி வேலை செய்துவந்த சந்திரசேகர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, கிணறு ஒன்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கக் கிணற்றிற்குள் இறங்கியுள்ளார். அப்போது கால் இடறி விழுந்ததில் இடுப்பில் படுகாயம் அடைந்தவர், எழுந்து நடக்கமுடியாமல் போய்விட்டார். அவரைப் பராமரித்துவந்த அவரது மனைவி முத்தம்மாளுக்கும் சில மாதங்களில் மன நிலை சரியில்லாமல் போனது. அவர்களின் ஒரே மகள் அனிதா பள்ளிப்படிப்பு கேள்விக்குறியானது. இருந்த போதும், கிராமத்தில் சிறு சிறு கூலி வேலைகள் செய்து தனது தாய் மற்றும் தந்தையை கவனித்துக்கொண்டும், தனது பள்ளிப்படிப்பையும் தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், தனக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அனிதா, மனு ஒன்றைக்கொடுத்தார். இது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனைப் பார்த்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் அவர்களை நேரில் சந்தித்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார். மேலும், மாதம் 3 ஆயிரம் தான் வழங்குவதாகவும், அனிதாவின் படிப்புச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்தார். அதுமட்டுமல்லாமல், ஊரின் எல்லையில் வசித்துவந்த அனிதா குடும்பத்தாருக்கு புது வீடு ஒன்றைக் கட்டுக்கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்தார். அதன்படி, 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் வீடு ஒன்றைக் கட்டுக்கொடுத்து, வீட்டு சாவியை இன்று அனிதா மற்றும் அவரது தாயாரின் கைகளில் வழங்கினார் ஓ.பி.எஸ்.

இச்சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய அனிதா, “மாதம் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தது மட்டுமல்லாமல், எனது படிப்புச் செலவு அனைத்தையும் பார்த்துக்கொண்டார் துணைமுதல்வர் ஓ.பி.எஸ். இன்று புதிதாக எங்களுக்கு வீடு ஒன்றைக் கட்டுக்கொடுத்திருக்கிறார். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார் புன்னகையோடு.