Published:Updated:

சர்ச்சை இருந்தாலும் பரவாயில்லை - கொலிஜியத்தின் பரிந்துரைகளை ஏற்ற ஜனாதிபதி!

சர்ச்சை இருந்தாலும் பரவாயில்லை - கொலிஜியத்தின் பரிந்துரைகளை ஏற்ற ஜனாதிபதி!
சர்ச்சை இருந்தாலும் பரவாயில்லை - கொலிஜியத்தின் பரிந்துரைகளை ஏற்ற ஜனாதிபதி!

உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரைகளை ஏற்று சர்ச்சைக்குரிய வகையில் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனவரி 10-ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோரின் பெயர்களை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணி மூப்பில் முதியவர்களைப் புறந்தள்ளி மிகவும் இளைய நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. பல முன்னாள் நீதிபதிகளும் வெளிப்படையாகவே கொலிஜியத்தின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

கொலிஜியத்தின் பரிந்துரைகளை திரும்பப் பெற வேண்டும் என பார் கவுன்சில் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்திருந்தன. டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கைலாஷ் கம்பீர் குடியரசுத் தலைவர் இந்தப் பரிந்துரைகளை ஏற்காமல் வரலாற்றுப் பிழை ஒன்று ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனக் கடிதம் எழுதியிருந்தார். இந்தச் சர்ச்சைகள் முடிவதற்குள்ளாகவே மத்திய அரசு இரண்டு நீதிபதிகள் பெயர்களையும் ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு நேற்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது. ரஃபேல் வழக்கு, சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பணி நீக்கத்தைக் கையாண்ட விதம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த உச்சநீதிமன்றம் தற்போது நீதிபதிகள் நியமனத்திலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

நீதிபதிகள் நியமினத்தில் அரசுக்கும் கொலிஜியத்திற்கும் கடந்த ஆண்டு மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கதே. அப்போது உத்திரகண்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.எம் ஜோசப்பின் பெயரைப் பல மாதங்கள் கிடப்பில் வைத்து பின்னர் கொலிஜியத்திற்குத் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. கே.எம் ஜோசப்பின் பெயரை அப்போதைய கொலிஜியம் உறுதியாக மீண்டும் பரிந்துரைக்கவே நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் கே.எம் ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உத்திரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியது செல்லாது எனத் தீர்ப்பளித்தவர்தான் கே.எம்.ஜோசப். மத்திய அரசுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் கொலிஜியம் பரிந்துரைத்த பெயர்களை ஒரு வாரத்திற்குள்ளாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் பணி மூப்பை நிராகரித்து தகுதியான நீதிபதிகளைப் புறந்தள்ளாமல் கொலிஜியத்தின் பரிந்துரைகளை திரும்பப் பெற கொலிஜியம் உறுப்பினர்களிடம் முறையிடப் போவதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.