Published:Updated:

`சிலைக்கு ரூ.3,000 கோடி; விளம்பரத்துக்கு?’ - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்!

`சிலைக்கு ரூ.3,000 கோடி; விளம்பரத்துக்கு?’ - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்!
`சிலைக்கு ரூ.3,000 கோடி; விளம்பரத்துக்கு?’ - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்!

வல்லபபாய் படேல் சிலை திறப்புக்காக மத்திய அரசு செய்த விளம்பரத்துக்கான செலவுத் தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் சுதந்திரத்துக்குப் பிறகு பல சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த பகுதிகளை ஒருங்கிணைக்க முக்கியப் பங்காற்றியவருமான சர்தார் வல்லபபாய் படேலுக்கு மரியாதை செய்யும் வகையில், அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் உயரத்தில் அவருக்குச் சிலை வைத்துள்ளது மத்திய அரசு. இது உலகின் மிக உயரமான சிலையாக அமைந்துள்ளது. இதற்கு `ஒற்றுமைச் சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்பு கடும் சர்ச்சைகளை எதிர்கொண்டது. 

அதற்குக் காரணம் சிலைக்காகச் செலவிடப்பட்ட தொகை. 2,500 பணியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சிலைக்காக அரசு செலவழித்த தொகை 2,989 கோடி ரூபாய். இதுபோக சிலை திறக்க எடுத்த ஆடம்பர விழா ஏற்பாட்டுச் செலவுகள் வேறு உள்ளன. `நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும்போது, ரூ.3,000 கோடி செலவில் இந்தச் சிலை தேவையா?' என எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்ப்பை மீறி சிலையைத் திறந்து அதைச் சுற்றுலாத்தளமாக மாற்றி வருகிறது மத்திய அரசு. ஹெலிகாப்டரில் சிலையைப் பார்ப்பது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி மக்களைக் கவர அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. 

இந்நிலையில் சிலை திறப்புக்காக மத்திய அரசு செய்த விளம்பரத்துக்கான செலவுத் தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஜாதின் தேசாய் என்னும் ஆர்.டி.ஐ ஆர்வலர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள தகவல் தொடர்புத்துறை அமைச்சகம், ``சிலை திறப்புக்காக எலக்ட்ரானிக் மீடியா மூலம் மத்திய அரசு செய்த விளம்பரத்துக்கான மொத்தச் செலவுத் தொகை ரூ.2,62,48,463 ஆகும். இதேபோல் அச்சு ஊடகத்தின் மூலம் விளம்பரம் செய்ததற்கான செலவுத் தொகை ரூ.1.68 லட்சம் ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 2.64 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தகவலில் வெளிப்புற விளம்பரங்களுக்குச் செலவு செய்த தொகை குறித்த விவரங்கள் வழங்கவில்லை. அதுவும் சேரும் பட்சத்தில் செலவுத் தொகை இன்னும் அதிகமாகக் கூடும்.