Published:Updated:

பா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா? - தம்பிதுரை அதிரடி!

பா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா? - தம்பிதுரை அதிரடி!
பா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா? - தம்பிதுரை அதிரடி!

பா.ஜ.க தமிழகத்தில் காலுன்ற அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டுமெனக் குருமூர்த்தி கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது எனத் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் பேசியதை வைத்து, கூட்டணி முடிச்சு போடத் தொடங்கினர் அரசியல் கட்சிகள். ஆனால், ``நாங்கள் கூட்டணி குறித்துப் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை முதல்வரும் துணை முதல்வரும் உறுதி செய்வார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்காக நிர்மலா சீதாராமனைச் சந்தித்தோம்'' எனப் பேட்டி அளித்தார் அமைச்சர் தங்கமணி. அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி கண்டிப்பாக உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. 

இதை வலுப்படுத்தும் விதமாகச் சமீபத்தில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ``தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற அ.தி.மு.கவுடன் கூட்டணி அவசியம்" எனக் கூறியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்குப் பதிலளித்துள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ``பா.ஜ.க தமிழகத்தில் காலுன்ற அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டுமெனக் குருமூர்த்தி கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. பா.ஜ.கவை காலூன்ற வைக்க நாங்கள் தோளில் சுமந்து செல்ல மாட்டோம்

நாங்கள் உழைக்கிறோம் நிலைத்திருக்கிறோம். பா.ஜ.க.வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.கவை சுமந்து செல்ல அ.தி.மு.கவினர் பாவம் செய்திருக்கிறார்களா?. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து சூழலுக்கு ஏற்ப கட்சியின் செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள்" என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.