Published:Updated:

`குட்டி ஜப்பான் குப்பை ஜப்பானாக மாறிவிட்டது!' - முத்தரசன் வேதனை

முத்தரசன்

`குட்டி ஜப்பான் குப்பை ஜப்பானாக மாறிவிட்டது!' - முத்தரசன் வேதனை
`குட்டி ஜப்பான் குப்பை ஜப்பானாக மாறிவிட்டது!' - முத்தரசன் வேதனை

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 'குட்டி ஜப்பான்' என அழைக்கப்பட்ட சிவகாசி, இன்று குப்பை ஜப்பானாக மாறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வேதனை தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் விருதுநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ``சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிருவதற்காகவே இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என அரசியலமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு, எந்த வித விவாதமும் இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தம்செய்து, உயர் சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பு மிகவும் கேலிக்குறியது. இந்த அடிப்படையில் பார்த்தால், நாட்டில் உள்ள 90 சதவிகிதம் பேர் இந்தப் பட்டியலில் வந்துவிடுவார்கள்.

`குட்டி ஜப்பான் குப்பை ஜப்பானாக மாறிவிட்டது!' - முத்தரசன் வேதனை

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத்தேர்வுக்கு விதிவிலக்கு கேட்டு இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது, அது என்ன நிலையில் உள்ளது என்பதற்கான விளக்கம் இல்லை. ஆனால், 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் அவசர அவசரமாக குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் சமூக நீதிக்கு எதிரானது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.க வெற்றிபெற்றால் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணம் மீட்கப்பட்டு, 15 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும். விலைவாசி குறைக்கப்படும் என மோடி கூறிய வாக்குறுதிகள் என்ன ஆனது  என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். இதற்கு மோடியோ, பா.ஜ.க-வோ எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால், 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மூலம் தாங்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம் என்ற பா.ஜ.க கனவு நப்பாசையாக முடியும். நாடு முழுவதும் பா.ஜ.க மீது மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அதிருப்தி எதிரொலிக்கும்.

`குட்டி ஜப்பான் குப்பை ஜப்பானாக மாறிவிட்டது!' - முத்தரசன் வேதனை

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகம் உள்ளது. மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அறிக்கை தரவில்லை. தற்போது, ஆணையத்தின் மீதே கட்சியினருக்கு நம்பிக்கை இல்லை. புதிய சந்தேகங்கள் எழுந்துவருகின்றன. கொடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமாக முதலமைச்சர் தார்மீக ரீதியாகப் பொறுப்பேற்று, உண்மைகளை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள்- ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக போராட்டம் நடத்திவருகின்றனர். வரும் 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும். அடக்குமுறைகளைக் கையாண்டால் அரசு தோற்றுப்போகும்.

தமிழ்நாடு ஒருபுறம் இயற்கை சீற்றத்தாலும், மறுபுறம் வறட்சியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடிசெய்ய வேண்டும். மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அப்போதுதான், இழப்பை ஈடுசெய்ய முடியும். ஜவஹர்லால் நேருவால் குட்டி ஜப்பான் என போற்றப்பட்ட சிவகாசி, தற்போது குப்பை ஜப்பானாக மாறிவிட்டது. கடந்த 3 மாதங்களாக பட்டாசுத் தொழில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், 8 லட்சம் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இந்த பிரச்னையைத் தீர்க்க வேண்டும் அல்லது ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

`குட்டி ஜப்பான் குப்பை ஜப்பானாக மாறிவிட்டது!' - முத்தரசன் வேதனை

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடியால் இங்கே எந்தப் பிரதிபலிப்பும் ஏற்படாது. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, தினமும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளைப் பார்ப்பார் என நினைக்கிறேன். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலில் பார்வையிட்ட அரசியல் தலைவர், ஸ்டாலின் தான். ஸ்டாலின் பங்கேற்கும் கிராமசபைக் கூட்டம் தொடர்பாக கருத்து கூறும் தமிழிசை, முதலில் பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்வையிட்டாரா. ஏதேனும் நிவாரணம் கொடுத்தாரா. கஜா புயல் பாதிப்பில் இருந்து மீட்க தமிழ்நாடு அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டது. தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் தமிழிசைக்கு அக்கறை இருந்தால், பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா போன்ற பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமரை சந்தித்து நிதி பெற்றுத் தந்திருந்தால், அவருக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கலாம். ஆனால், அவர் செய்யவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம். வகுப்புவாத சக்தியான, பாசிச சக்தியான பா.ஜ.க ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படுவோம். 4 ஆண்டுகளாக, இதற்கான பணியில் ஈடுபட்டுவருகிறோம். நிச்சயம் வெற்றிபெறுவோம்'' என்றார்.