Published:Updated:

`எனது புத்தகங்களைத் தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்குப் பதிலளித்த கனிமொழி!

`எனது புத்தகங்களைத் தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்குப் பதிலளித்த கனிமொழி!
`எனது புத்தகங்களைத் தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்குப் பதிலளித்த கனிமொழி!

``எங்க ஊர்ல நூலகம் இருக்கு ஆனா, புத்தகம் இல்ல” எனத் தூத்துக்குடியில் நடந்த தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கோரிக்கை வைத்த பெண்ணிடம் தன்னிடம் உள்ள நூல்களைத் தருவதாக உறுதி அளித்தார் எம்.பி கனிமொழி.

தமிழகத்தில் தி.மு.க சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் முதல் ஊராட்சி சபைக் கூட்டத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். துாத்துக்குடி மாவட்டத்தில் இந்தக் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மாலை 3.30 மணிக்கு வந்த மாநிலங்களவை எம்.பி கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``தி.மு.க நடத்தும் கிராம சபைக் கூட்டங்கள் பற்றிய விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியே காரணம். அ.தி.மு.க ஆட்சி கலைய வேண்டும் எனத் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்ல தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.  

தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  குறுக்குச்சாலையில் நடைபெற்ற தி.மு.க  ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாலை 5.55 மணிக்கு வந்தார். முன்னதாக, குறுக்குச்சாலை  சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி சபைக்  கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், தங்கள் பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க பாலம் கட்டித் தர வேண்டும், குடிநீர் வசதி, ரேஷன் கடை, சாலை வசதி  போன்ற  அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கக்கரம்பட்டியைச் சேர்ந்த அகிலா என்ற பெண், “எங்க கிராமத்துல நூலகம் இருக்கு. ஆனா, படிக்க புத்தகங்கள் இல்லை” என்றார். ``டாஸ்மாக் கடையை மூடுவாங்களா, மூட மாட்டாங்களா? டாஸ்மாக் கடையால குடும்பத்துல ஒரே பிரச்னை. டாஸ்மாக் கடைகளை மூடினாலே எங்களுக்கு முக்கால்வாசிப் பிரச்னைகள் சரியாயிடும். ஒட்டுமொத்தப் பெண்களோட இந்த ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” என்றார் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி.

இறுதியாகப் பேசிய கனிமொழி, “உங்க பகுதிகளில் உள்ள பல்வேறு அடிப்படைத் தேவைகளைப் பற்றிச் சொன்னீங்க. தி.மு.க ஆட்சிக்கு வரும்போது இவை அனைத்தும் கண்டிப்பாக செய்து தரப்படும். நமது இந்தத் தேவைகளை யாரிடமும் முறையிட முடியவில்லை. இதற்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததுதான். தேர்தல் நடத்தினால் வெற்றி  பெற முடியாது என்பதால்தான் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் ஓட்டுப் போட்ட ஆட்சி நடைபெறவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம்  நடக்கும். டாஸ்மாக் கடைகளை மூடுவாங்களான்னு ஒரு பெண் கேட்டாங்க. டாஸ்மாக் கடைகளை மூடுவோம்னு சொன்ன கட்சிக்கு ஓட்டுப்போடாததால்தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கீங்க.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு டாஸ்மாக் இல்லாத தமிழகமாக மாறும். தேர்தல் நேரத்தில் தரப்படும் சில நூறுகளுக்கு ஆசைப்பட்டு வாக்களிக்கும் மக்களாகிய உங்களை 5 ஆண்டுகள் அடிமைகளாக்கிவிடுகிறார்கள்” என்ற அவர், இறுதியாக, “இந்தக் கூட்டத்தில் வைத்த கோரிக்கைகளில், எங்க ஊர்ல நூலகம் இருக்கு. ஆனால், புத்தகம் இல்லை என ஒரு பெண் கூறினார். அந்தக் கிராமத்தில் உள்ள நூலகத்துக்கு உடனடியாக என்னிடம் உள்ள புத்தகங்களை தந்து நிறைவேற்றுகிறேன்” என, அவர் கூறியவுடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர் ஊர் மக்கள்.