Published:Updated:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்தின் மறு ஆய்வு மனு நிராகரிப்பு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்தின் மறு ஆய்வு மனு நிராகரிப்பு
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்தின் மறு ஆய்வு மனு நிராகரிப்பு
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்தின் மறு ஆய்வு மனு நிராகரிப்பு

புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது.

சஞ்சய் தத் மனு மட்டுமல்லாது, அவரைப்போன்றே இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 6 குற்றவாளிகள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை 5 ஆண்டுகளாக குறைத்தது.

இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் தத் சிறையில் இருந்த நாட்களை கழித்தால், அவர் இன்னும் 42 மாதங்கள் சிறையில் இருந்தால்தான் தண்டனைக் காலம் நிறைவு பெறும்.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைய, சஞ்சய் தத்திற்கு உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று 4 வார கால அவகாசம் வழங்கியது.

மே 15 ல் சரண்

அந்த கால அவகாசம் வருகிற 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அன்றைய தினம் சஞ்சய் தத் சரணடைவார். அதனைத் தொடர்ந்து அவர் புனே எரவாடா சிறையிலடைக்கப்படுவார் எனத்தெரிகிறது.

சஞ்சய் தத்தின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட், " தனது மறு ஆய்வு மனு நிராகரிக்கப்படும் என்பது சஞ்சய் தத்திற்கு ஏற்கனவே தெரியும் என்றும், அடுத்த சட்ட வாய்ப்பை அவர் தேடுவார்" என்றார்.

 கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர்;700 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக மும்பைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ஆயுதங்களில் 9 மி.மீ. பிஸ்டல் மற்றும் ஒரு ஏ.கே. 56 ரக துப்பாக்கி ஆகியவற்றை சஞ்சய் தத் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கிலேயே மேற்கூறிய தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.