Published:Updated:

'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி

'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி
'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி

'மோடி ஆட்சி காலாவதியாகும் நேரம் வந்துவிட்டது' - மம்தா பானர்ஜி

நாட்டில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, இன்று மேற்கு வங்கத்தில் நடந்த ‘ ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டுக்கு, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக மம்தா பானர்ஜி ஏற்பாடுசெய்திருந்தார். 

இன்று நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கௌடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் பா.ஜ.க-வின் அதிருப்தி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “ மோடி அரசின் ஆட்சி காலாவதியாகும் நேரம் மிக விரைவில் வந்துவிட்டது. தற்போது, ஒரு புதிய விடியல் பிறக்க உள்ளது. அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிவோம் என எதிர்க்கட்சிகளாக நாம் ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளிக்க வேண்டும். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்.  அரசியலுக்கு என ஒரு தனி மரியாதை உள்ளது. ஆனால், பா.ஜ.க அதை சற்றும் மதிக்கவில்லை. அவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கிறது பா.ஜ.க. மோடியைப் பொறுத்தவரை அவர் பிரதமர் மற்றும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர். ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் அனைவருமே அடிமட்டத் தொண்டர்கள்தான். நாமே தலைவர், நாமே தொண்டர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மோடி, இந்திய மக்களை ஏமாற்றிவிட்டார். அமித்ஷாவும் மோடியும் இணைந்து நாட்டையே அழித்துவிட்டனர். விவசாயிகளுக்கு இன்னும் பயிர்க் காப்பீடு வழங்கப்படவில்லை. யாரெல்லாம் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வார்களோ, அவர்களைத்தான் தன் ட்விட்டரில் பின் தொடர்கிறார் மோடி. கடந்த ஐந்து வருடத்தில், மோடி இந்தியாவின் மத நல்லிணக்கத்தையே உடைத்துவிட்டார். மீண்டும் ஒரு முறை இந்த நாட்டை ஆள அவர்களை அனுமதித்தால், மீதமுள்ள இந்தியாவையும் அழித்துவிடுவார்கள். மோடியை அகற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அவரை அகற்றுவோம்'' என்று பேசியுள்ளார். 

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “அடுத்த பிரதமரை எங்களால்தான் தேர்ந்தெடுக்க முடியும் என பா.ஜ.க கூறிவருகிறது. ஆனால், அந்த அதிகாரம் மக்களுக்கு மட்டுமே உள்ளது என நாங்கள் கூறுகிறோம். நீங்கள், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால் நாங்கள், மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, “ உலகிலேயே அதிக பலம் நிறைந்த ஜனநாயகம் கொண்ட நாடு இந்தியா. ஆனால், தற்போது நடந்துவரும் மத்திய அரசின்மூலம் அது தலைகீழாக மாறியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழ்மையான மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசு, மக்களின் பிரச்னைகளை நிறைவேற்றாமல் காது கேட்காதவர் போல், பேச முடியாதவர் போல் தான் இருந்தது” என்று குற்றம் சாட்டினார். 

சமூக ஆர்வலர் ஹர்திக் படேல், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்றார். ஆனால் நாம், தற்போது நம் நாட்டிலேயே உள்ள தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிவருகிறோம்'' என்றார்.
 

அடுத்த கட்டுரைக்கு