Published:Updated:

மு.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி!

மு.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி!
மு.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி!

சேலம்: ஏற்காட்டில் நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச மேற்கொள்ளப்பட்ட முயற்சி, கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

தி.மு.க இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம், ஏற்காட்டில் உள்ள பிரைட் சன் பள்ளி வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்தக் கூட்டம் மாலை 4:30 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வரும்போது, ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச இரண்டு இளைஞர்கள் தயாராக இருந்தனர்.

கடைசி நேரத்தில் அதனை உணர்ந்த ஸ்டாலினின் மெய்க்காப்பாளர்கள், ஓடிச் சென்று அந்த இளைஞர்களை அமுக்கிப் பிடித்து பெட்ரோல் குண்டுகளைக் கைப்பற்றினர். தாவிச் சென்ற சேலம் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், அந்த இரு இளைஞர்களையும் பளார்... பளார்... என வெளுத்துவாங்கினார். இதை போட்டோ எடுத்த நமது புகைப்பட கலைஞரையும் எஸ்.ஆர்.சிவலிங்கம் வாய்க்கு வந்தபடி வசைபாடினார்.

அந்த இளைஞர்களை ஸ்டாலினின் மெய்க்காப்பாளர்கள் மீட்டு, காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் யார், எதற்காக ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றனர் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வீ.கே.ரமேஷ்