Published:Updated:

`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்!

`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்!
`மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்; தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி’ - முதல்வர் விமர்சனம்!

நெல்லையில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்ற வருகை தந்த அவருக்கு மாவட்ட எல்லையில் அ.தி.மு.க நெல்லை மாநகர மாவட்டச் செயலாளரான தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், காங்கிரஸ், அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 5000 பேர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ’’எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் கட்டிக்காத்த இயக்கம் அ.தி.முக. அதனால் இந்த இயக்கத்தில் விசுவாசத்துடன் உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவி தானாகத் தேடி வரும். தற்போது தமிழகத்தில் ஜனநாயகக் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பது அ.தி.மு.க மட்டுமே. 

அ.தி.மு.க-வைத் தவிர பிற கட்சிகள் எல்லாம். வாரிசுகள் அடிப்படையிலான கட்சிகளாகவே இருக்கின்றன. தி.மு.க-வைப் பொறுத்தவரையிலும் கருணாநிதிக்கு அடுத்து அவரது மகன் ஸ்டாலின். அதற்கடுத்து உதயநிதி. அனைத்துக் கட்சிகளையும் பார்த்தால் வாரிசுகள் தான் இருப்பார்கள். வாரிசுகள் இல்லாத அரசியலே கிடையாது. ஆனால் அ.தி.மு.க மட்டுமே வாரிசு இல்லாத ஜனநாயகம் கொண்ட இயக்கமாக உள்ளது. மக்களுக்காக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர், தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் தான் கருணாநிதி. 

நாட்டில் எவ்வளவோ கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகள் எல்லாம் அவர்களின் குடும்பத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், நமது இயக்கம் மட்டுமே மக்களையும் மக்களின் நலனையும் பார்க்கும் இயக்கமாக இருக்கிறது. அதனால் தான் அ.தி.மு.க என்பது மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் நம்மை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார்களோ, அவற்றையெல்லாம் சரியான முறையில் மக்களுக்குக் கொண்டு சென்று சிறப்பான வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்திய அளவில் பார்த்தால் தமிழகம் சிறப்பாகவும், அமைதி பூங்காவாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதைப் பொறுக்கமுடியாமல் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கிறார்கள். திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை.

இந்த ஆட்சி பத்து நாளைக்கு இருக்குமா?. ஆறு மாதங்கள் நீடிக்குமா?.என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை என்றென்றும் செயல்படுத்தும் ஆட்சி நடக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என்னும் இருபெரும் சக்திகளால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க-வில் இணைந்திருக்கும் மாற்றுக் அக்கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்’’ எனப் பேசினார்.