Published:Updated:

`இப்படியே போனால் அ.தி.மு.க அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும்!'- கே.சி.பழனிசாமி

`இப்படியே போனால் அ.தி.மு.க அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும்!'- கே.சி.பழனிசாமி
`இப்படியே போனால் அ.தி.மு.க அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும்!'- கே.சி.பழனிசாமி

கோடிகளைக் கொட்டி, 'கின்னஸ் ஜல்லிக்கட்டு' நடத்துவதால் கட்சிக்கோ, நாட்டுக்கோ ஏதாவது பயன் இருக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பிய அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, இப்படியே போனால், வரும் தேர்தலில் அ.தி.மு.க அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும்" என்று கூறினார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில், ஆண்டுக்கு குறைந்தது மூன்று முறையாவது கட்சி கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெறும். கிளைக் கழகத்தில் தொடங்கி, மாவட்ட, தலைமைக்கழகம் வரை கொடியேற்று விழாவைப் பிரமாண்டமாக நடத்துவார்கள். அமைச்சர்கள், கட்சி வி.ஐ.பி-க்களை அழைத்துவந்து கொடியேற்ற, கடும் போட்டா போட்டி இருக்கும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்தக் கொடியேற்று நிகழ்ச்சிகள் முற்றிலுமாக நின்றுபோனதாக, அ.தி.மு.க-வினரிடையே குமுறல் எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, "தலைநகர் முதல் குக்கிராமங்கள் வரை, அ.தி.மு.க கொடிக் கம்பங்கள் புயலில் சிக்கிய மரம் போல காட்சியளிக்கின்றன. ஜெயலலிதா இருந்தவரையில், மற்ற கட்சியைவிட நமது கட்சியின் கொடி உயரப் பறக்க வேண்டுமென்ற துடிப்பு, ஒவ்வொரு தொண்டனிடமும் இருக்கும். இப்போது, கிழிந்த கொடியை மாற்றக்கூட ஆள் இல்லை. கிளைக்கழகத்தின் செயல்பாடுகள்தான், கோட்டையில் கொடியேற்றுவதைத் தீர்மானிக்கும். அந்த கிளைக்கழகத்தைக் கவனிக்க இப்போதிருக்கும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் தவறிவிட்டனர். கட்சி நிறுவன நாள், எம்.ஜி.ஆர். பிறந்தநாளுக்காவது கொடியேற்று விழா நடத்தியிருக்க வேண்டும். கட்சி கொடியேற்று நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

மாவட்டங்களுக்குச் செல்லும் அமைச்சர்களும், எந்த கொடியேற்று நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. தொண்டர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. கோடிகளைக் கொட்டி 'கின்னஸ் ஜல்லிக்கட்டு' நடத்துவதால் கட்சிக்கோ, நாட்டுக்கோ ஏதாவது பயன் இருக்கப் போகிறதா?  இப்படியே போனால், வரும் தேர்தலில் அ.தி.மு.க அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும்!" என்றார்.