Published:Updated:

``முதல்வருக்கு எடப்பாடியைத் தவிர வேறு ஊர்கள் எதுவும் தெரியுமா?" - மு.க.ஸ்டாலின் கேள்வி!

``முதல்வருக்கு எடப்பாடியைத் தவிர வேறு ஊர்கள் எதுவும் தெரியுமா?" - மு.க.ஸ்டாலின் கேள்வி!
``முதல்வருக்கு எடப்பாடியைத் தவிர வேறு ஊர்கள் எதுவும் தெரியுமா?" - மு.க.ஸ்டாலின் கேள்வி!

``தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே கிடையாது. ஆனா, தமிழக முதல்வருக்கு எடப்பாடியைத் தவிர வேறு ஊர்கள் ஏதாவது தெரியுமா?" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுக்க அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஊராட்சி சபைக் கூட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின், அடுத்தடுத்து தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் இன்று மூன்று ஊராட்சிகளில் நடக்கும் ஊராட்சிசபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக, நேற்று இரவே அவர் கரூருக்கு வருகை தந்தார்.

கரூருக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தி.மு.க-வின் கரூர் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.பழனிசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் கே.என்.நேரு, கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட கட்சித் தொண்டர்கள் பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட ஈசநத்தம் ஊராட்சி, அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னதாராபுரம், கரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேட்டமங்கலம் ஊராட்சி ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மு.க.ஸ்டாலின் கரூருக்கு வருகை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலையில் முதல் ஊராட்சிசபைக் கூட்டமாக ஈசநத்தத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ``தி.மு.க நடத்தும் ஊராட்சி சபையின் நோக்கமே, கிராம மக்கள் பேசுவதை நாங்கள் கேட்பதற்காகதான். உங்களைச் சந்தித்து பேசும்போதுதான், இந்த ஆட்சியின்மீது நீங்கள் எவ்வளவு வெறுப்பை சுமந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. 'எப்போது அ.தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தி.மு.க ஆட்சிக்கு வரும்'ன்னு கேட்கிறீங்க. அதற்காகதான், நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். ஆளுங்கட்சியைச் சார்ந்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், இந்த ஊராட்சிசபைக் கூட்டத்தைப் பார்த்து அச்சத்தில் உள்ளனர். தி.மு.க-வுக்கு கிடைக்கும் அபரிதமான வரவேற்பை பார்த்து, உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே கிடையாது. ஆனால், தமிழக முதல்வருக்கு எடப்பாடியைத் தவிர வேறு ஊர்கள் ஏதாவது தெரியுமா" என்று கேள்வி எழுப்பினார்.