Published:Updated:

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம்- 5

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம்- 5
முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம்- 5

- கே.கே.மகேஷ்

படங்கள்: 
எஸ்.கிருஷ்ணமூர்த்தி & பா. காளிமுத்து


கிரானைட் குவாரிகளில் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் ரெய்டு நடத்திய அதிகாரிகள் குழு, பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரானைட் கற்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தார்கள். பிறகு, 175 குவாரிகளையும் 7 மண்டலங்களாகப் பிரித்து அங்கே வெட்டி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரானைட் கற்களை கணக்கெடுக்க ஆரம்பித்தார்கள்.

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம்- 5

இந்த கணக்கெடுப்பில் கீழவளவு பகுதியில் 55,732 கற்கள், கீழையூரில் 21,829 கற்கள், மலம்பட்டியில் 20,985 கற்கள், திருவாதவூரில் 26,997 கற்கள், இடையபட்டியில் 18,862 கற்கள், புதுதாமரைப்பட்டியில் 24,952 கற்கள், நாவினிப்பட்டியில் 2,382 கற்கள் என மொத்தம் மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 739 கற்கள் கணக்கிடப்பட்டுள்ளது. கன அளவில் சொல்வதென்றால் மொத்தம் 11 லட்சம் கியூபிக் மீட்டர்!

அவற்றை எல்லாம் கொண்டு வந்து வைக்கும் அளவுக்கு இடவசதியோ, வாகன வசதியோ அரசிடம் இல்லாததால் அந்தந்த இடத்திலேயே அடையாளக் குறியிடப்பட்டு, அங்கேயே சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகளின் கணக்கீட்டின் படி, புறம்போக்கு நிலத்தில் 12 ஆயிரம் கற்களும், பட்டா நிலத்தில் 1.5 லட்சம் கற்களும் இருக்கின்றன. கடைசி நேரத்தில், மீண்டும் குவாரிக்குள்ளேயே அடுக்கி வைக்கப்பட்டு மணல் போட்டு மூடப்பட்ட கற்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை. அவை எல்லாம் மண்ணுக்குள் 'பத்திரமாக' இருக்கின்றன என்பது வேறு விஷயம்.

பறி-முதல் செய்யப்பட்ட கற்களை ஏலம் விட முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம், புறம்போக்கு நிலத்தில் உள்ள கற்களைத் தனியாகவும், பட்டா நிலத்தில் இருக்கும் கற்களைத் தனியாகவும் அளவை செய்ய ஆரம்பித்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்தப் பணிகள் தொடங்கின. ஏ.சி.யிலும், ஃபேன் காற்றிலுமே வாழ்ந்து பழகிவிட்ட அரசு ஊழியர்கள் கோடை வெயிலில் கற்குவியலுக்கு இடையே எப்படி பணியாற்றுவார்கள்? ஆக, மந்தமாக நடந்தது அளவைப் பணி.

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம்- 5

ஒவ்வொரு கல்-லும் சுமார் 5 அடி உயரம், 5 அடி நீளம், 5 அடி அகலம் கொண்டவை. பெரும்பாலான இடங்களில் கற்கள் அனைத்தும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், துல்லியமாக அளப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. வெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தங்கும் வசதி செய்யப்படவில்லை. அவர்கள் சென்ற வாகனத்திற்கான டீசல் அலவென்ஸ் கூட சரியாகக் கொடுக்கப்படவில்லை. தங்கள் கைக்காசைப் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். 10 லட்ச ரூபாய்க்கு அவர்கள் அனுப்பிய டி.ஏ. பில் இன்னமும் பென்டிங்கில் இருக்கிறது. வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒட்டுமொத்தமாக 1 மாதம் லீவு கேட்டார்கள் அரசு ஊழியர்கள். ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை தர முடியாது என்று மறுத்துவிட்டார் கலெக்டர். அளவைப் பணி தாமதமாகிவிடக் கூடாதே?

ஒரு வழியாக புறம்போக்கு நிலத்தில் இருக்கிற 12 ஆயிரம் கற்களையும் அளந்து சீல் வைத்துவிட்டார்கள். அடுத்து பட்டா நிலத்தில் இருக்கிற கற்களை அளக்கும் பணி நடந்து வருகிறது. அதிலும் பாதிக்கும் மேற்பட்ட கற்களை அளந்துவிட்டார்கள். இந்தப் பணிகளை கலெக்டரே நேரடியாகக் கண்காணித்து வருகிறார். கற்களை அளப்பது, சீல் வைப்பது அனைத்தையும் செய்தித்துறை புகைப்படக் கலைஞரைக் கொண்டு போட்டோ எடுத்து ஆவணப்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் 'பிரைவேட்' போட்டோகிராபரை வைத்து படம் எடுத்ததாகவும், அந்த ஆள் பி.ஆர்.பி. தரப்பிற்கு ரகசிய உளவாளியாக மாறியதால், அரசு புகைப்படக் கலைஞரையே நியமித்து விட்டதாகவும் சொல்கிறார்கள். தவறு நடந்துவிடக் கூடாது என்பதால் இன்னும் பல கெடுபிடிகள்.

முடிந்து போனதா கிரானைட் நாடகம்? - மினி தொடர்: பாகம்- 5

இதுதவிர பி.ஆர்.பி.யின் பேக்டரியில் இருந்து விற்பனைக்கு அனுப்பத் தயாராக இருந்த பாலீஸ் செய்யப்பட்ட 46,008 கிரானைட் கற்களைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதில், பெ-ரும்பாலானவை காஷ்மீர் ஒயிட், ஐவரி ஃபேன்டஸி, கொழும்பு ஜபரனா, மதுரா கோல்ட், காஷ்மீர் கோல்டு, ராயல் ஐவரி, ரோஸ் வுட், அப்சலுட் பிளாக், லேடி ட்ரீம், ராஜா எல்லோ போன்றவைதான். பாலீஸ் செய்யப்பட்ட கற்களில் மொத்தம் 102 ரகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இப்போது இவற்றுக்கு மதிப்பிடும் பணியைச் செய்வதற்காக ஜான் -லூயிஸ் என்ற தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கீ-ழ் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கனிம வளத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஒவ்வொரு கல்லையும் ஆராய்ந்து அது என்ன ரகம் என்று கண்டறிந்து அதற்கேற்ப மதிப்பிட்டு வருகிறார்கள். மதிப்பிடும் பணி முடிந்துவிட்டதாகவும், ஏல அறிவிப்பு தொழில்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

உண்மையில் மதிப்பிடும் பணி முடிந்துவிட்டதா? எப்போது ஏலம் நடைபெறும் என்று கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டோம். "கற்களை அளக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்போது அவற்றை மதிப்பிடும் பணிகள் நடக்கின்றன. பறிமு-தல் செய்யப்பட்ட கற்களில் பெரும்பாலானவை காஷ்மீர் ஒயிட் கற்கள் தான். இந்தக் கற்களின் மொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடி இருக்கும். மதிப்பு இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதத்திற்குள் ஏல அறிவிப்பு வெளியிடப்படும். இதனை இணையம் மூலம் விளம்பரப்படுத்தி, உலகலாவிய அளவில் ஏலம் விடத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

பி.ஆர்.பி. முறைகேடு செய்தார். அரசு தரப்பில் அவரைக் கைது செய்தார்கள். கற்களைப் பறிமுதல் செய்தார்கள். எல்லாம் ஓ.கே.! விவசாய நிலத்தை இழந்தவர்களுக்கு அந்த இடம் திரும்பப் கிடைத்ததா? நீர்நிலைகள் மீட்கப்பட்டதா?

நாளை பார்க்கலாம்...