Published:Updated:

தூத்துக்குடி ஊராட்சி சபைக் கூட்டம் - பெண்ணின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய கனிமொழி!

தூத்துக்குடி ஊராட்சி சபைக் கூட்டம் - பெண்ணின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய கனிமொழி!
தூத்துக்குடி ஊராட்சி சபைக் கூட்டம் - பெண்ணின் பேச்சைக் கேட்டு கண் கலங்கிய கனிமொழி!

``நீயே பி.எஸ்சி வரைக்கும் படிச்சுட்டு 100 நாள் வேலைக்குப் போற, நான் படிச்சு என்ன செய்யப் போறேன்னு என் மகன் சொல்றான்” என தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் சொன்ன பெண்ணின் பேச்சைக் கேட்டு கண் கலங்கினார் கனிமொழி. 

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ”மக்களிடம் சொல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற தி.மு.க சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்திருந்தார்.  கடந்த 9-ம் தேதி, திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் முதல் ஊராட்சி சபைக் கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடல் நடத்திவருகின்றனர்.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி சபைக் கூட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18-ம் தேதி முதல் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிவருகிறார். சாலைவசதி, குடிநீர் வசதி, நூலகம், மேல்நிலைத் தேக்கத்தொட்டி, ரேஷன்கடை, சமுதாயக் கூடம் ஆகிய பல கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர். அத்துடன், கல்வி உதவி, விளையாட்டு உபகரணங்கள் உதவி, மருத்துவ உதவி ஆகியவை குறித்தும் தனித்தனியாக மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஊராட்சி சபைக் கூட்டத்தின் 6-வது நாளான நேற்று மாலை, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழபுரம், மஞ்சநாயக்கன்பட்டி, மேல ஈரால், உ.சண்முகபுரம் ஆகிய ஊராட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் பேசினார். மக்களும் அவரவர் பகுதி பிரச்னைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் பேசினார்கள். இதில், மேல ஈரால் ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய மகேஷ்வரி என்ற பெண், “ நான் பி.எஸ்சி இயற்பியல் முடிச்சிருக்கேன். ஆனாலும், எனக்கு சரியான வேலை கிடைக்கல. அதனால, சும்மா இருக்கக் கூடாதுன்னும் வயித்துப் பாட்டைக் கழிக்கவும், நூறு நாள் வேலைக்குப் போறேன்.

மூணாவது படிக்குற என் மகனிடம், “டேய்... ஒழுங்கா படிடா”ன்னு சொன்னா, “நீயே பி.எஸ்சி வரை படிச்சுட்டு நூறுநாள் வேலைக்குப் போயி, புல்லு வெட்டவும், மரத்துக்கு தண்ணி ஊத்தவும் செய்றே, நான் படிச்சு என்ன செய்யப் போறேன்? எனக்கும் வேலை கிடைக்காது. நானும் உங்கூட நூறு நாள் வேலைக்கு வந்துடட்டுமா..?”ன்னு பதில் கேள்வி கேட்குறான். இளைஞர்களுக்கும் படிச்ச பெண்களுக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரிச்சு ஆடுது” என்று சொன்னார்.

அந்தப் பெண்ணின் வருத்தமான  பேச்சைக் கேட்டு கண் கலங்கினார் கனிமொழி. இது அனைவரையும் உருக்கியது. நான்காவது ஊராட்சியான  உ.சண்முகபுரத்தில் கனிமொழி பேசும் போதுகூட, அந்தப் பெண்ணின் பேச்சை எடுத்துக்கூறிப் பேசினார். இறுதியில், “நான் பிரதமர் ஆனால், ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன். சுயமாக தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடனாக கொடுப்பேன். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரை வரவு வைப்பேன்” என மோடி வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால், இதில் எதையாவது நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தாரா? இல்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். தேர்தல் வரும்போது நமக்கு நல்லதைச் செய்யக்கூடிய ஆட்சி எது, யாருடைய ஆட்சி வந்தால் நல்லது நடக்கும்; நியாயம் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டு வாக்களியுங்கள்”என்றார்.