Published:Updated:

`பிரவாசி பாரதிய திவாஸ்’ எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

வாரணாசியில் மூன்று நாள்கள் அரசு சார்பிலான விழாவும், அடுத்த இரண்டு நாள்கள் கும்பமேளா கொண்டாட்டங்களில் பங்கேற்பதும், கடைசி நாளன்று டெல்லியில் குடியரசு தின விழாவைக் கண்டுகளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

`பிரவாசி பாரதிய திவாஸ்’ எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
`பிரவாசி பாரதிய திவாஸ்’ எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

வாரணாசியில் கடந்த ஒரு வாரமாகவே மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. `விமானங்களை நிறுத்துவதற்கு இடமில்லை’ என்னும் அளவுக்கு பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கூட்டம், கூட்டமாக வாரணாசியில் வந்து குவிந்தனர். வீதிகளில் வாகனங்கள் செல்வதற்குக்கூட சிரமப்படும் அளவுக்கு மக்கள் கூட்டம். ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கி, அதை விழா மேடையாக மாற்றியிருந்தனர். ‘என்னடா நடக்குது இங்கே? எங்கே இருந்துடா இவ்வளவு மக்கள் வந்தீர்கள் திடீரென்று?’ என்று பார்க்கும்போதுதான், வரவேற்புப் பதாகைகள் மூலம் தெரிந்துகொண்டது, 15-வது பிரவாசி பாரதிய திவாஸ் (Pravasi Bharatiya Divas) வாரணாசியில் நடைபெறுகிறது என்று! அதாவது, 'வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாடு' என்பதால்தான் இந்தக் கூட்டம் கூடியிருக்கிறது என்று புரிந்தது.

தேசப்பிதா மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தபோது, கறுப்பர்களுக்காக, நிற பேதத்தை எதிர்த்துப் போராடி, 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அன்று தாயகம் திரும்பினார். வெளிநாட்டில் போய் ஓர் இந்தியர், அந்த நாட்டு மக்களுக்காகப் போராடி, அவர்களுக்குச் சேவை செய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துத் திரும்பிய அந்நாளை நினைவுகூர்வதற்காகவே, ஆண்டுதோறும் `பிரவாசி பாரதிய திவாஸ்' நடத்தப்படுகிறதாம். 

பல தேசங்களுக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் இந்தியர்கள், நீண்டகாலம் கழித்துத் திரும்பி வருவர். ஒரு சிலர் அங்கேயே குடியுரிமை வாங்கித் தங்கிவிடுவர். அப்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சந்ததியினர், அங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்க்கையை வாழத்தொடங்கிவிடுவர். அவர்களுக்கு `தாங்கள் இந்தியர்’ என்ற நினைப்பே மறந்துகூடப் போய்விடலாம். உள்ளுக்குள் இந்திய வம்சாவளி என்ற பெருமிதமும் அவ்வப்போது துளிர்க்கும். அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் இந்த விழாவையொட்டி, வெளிநாடுவாழ் இந்திய மக்களைத் தங்களின் பூர்வீக நாட்டுக்கு மீண்டும் அழைத்து, வரவேற்று, உபசரிப்பதுடன் அவர்களால் கடைப்பிடிக்க முடியாமல் போகும் நம் பாரம்பர்யங்களை நம்முடன் சேர்ந்து, கொண்டாடச் செய்வதே இந்த விழாவின் சிறப்பம்சம். தவிர, இந்தியாவில் அதிக முதலீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

வடமொழியில் ‘பிரவேசம்’ என்றால் உள்நுழைவது என்று அர்த்தம். இந்தியாவுக்குள் `மீண்டும் நுழையும் விழா’ என்பதையே `பிரவாசி பாரதிய திவாஸ்' என்று கொண்டாடுகிறோம். இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் இந்தாண்டு மூன்று நாள்கள் இந்த விழா நடைபெற்றது. கடந்த 2005-ல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9-ம் தேதியோ, ஓரிரு தினங்கள் முன் பின்னோ, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். விழா என்றால் ஏதோ பேசிவிட்டுப் போவதல்ல. ஒவ்வொரு நாளும் கோலாகலம்தான். அதுமட்டுமல்லாது, பொதுச்சேவை, கலை, அறிவியல், கல்வி, மருத்துவம், தொழில்துறை, அரசியல், சங்கச்சேவை என்று எல்லாத் துறையிலும் சாதித்தவர்கள், உலக அளவில் பிரபலமானவர்கள் என 30 பேரைத் தேர்ந்தெடுத்து, விழா நிறைவு நாளில் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி என்று ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். 2009-ல் சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ‘பிராந்திய பிரவாசி பாரதிய திவாஸ்’ என்று இந்தியர்கள் அதிகம் குடியேறும் இடங்களில்கூட விழாக்கள் எடுக்கப்படுகின்றன. 2007-ல் தொடங்கி 10 நிகழ்ச்சிகள் இதுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

`எப்போதும்போல் இந்த ஆண்டும் இருந்துவிடக் கூடாது’ என்று முடிவு செய்த மத்திய பி.ஜே.பி அரசு, இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, இந்த விழாவை ஏற்பாடு செய்தது. ஆறு நாள்கள் அடங்கிய திட்டம் ஒன்றை உருவாக்கியது. ஜனவரி 21-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை திட்டமிடப்பட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான பயணத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இதையடுத்தே உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரம்விழாக்கோலம் பூண்டது. வாரணாசியில் மூன்று நாள்கள் அரசு சார்பிலான விழாவும், அடுத்த இரண்டு நாள்கள் கும்பமேளா கொண்டாட்டங்களில் பங்கேற்பதும், கடைசி நாளன்று டெல்லியில் குடியரசு தின விழாவைக் கண்டுகளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

விழாவில் தொடக்க நாளில் வரவேற்புரையைத் தொடர்ந்து, ‘இளைஞர்கள் பிரவாசி பாரதிய திவாஸ்’ என்ற இன்னொரு திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதை முன்மொழிந்தார். அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, முறைப்படி இந்த விழாவைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக மொரிசியஸ் பிரதமர் பிரவீந்த் குமார் ஜக்னாத் பங்கேற்றார். இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சென்ற ஆண்டு நடைபெற்ற நிகழ்வில், வெளிநாடுவாழ் இந்தியர்களில் சிறந்த 30 பேர்களுக்கான பதக்கம் பெற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் மூன்றாம் நாளில் தலைசிறந்த வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். பன்னாட்டு உறவில் உயர் பொறுப்புகளை வகித்த மற்றும் தற்போது வகித்துவருவோர், கல்வி, தொழில்நுட்பத்தில் சிறப்பிடம் வகிப்போர், தொழில்துறையில் முன்னிலை வகிப்போருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை வாங்கிய கையோடு, கும்பமேளா கொண்டாட்டங்களில் பங்கேற்று கங்கை நதியில் ஒரு புனித நீராடலை நடத்திய கையோடு, குடியரசு தின விழா கொண்டாட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழா அணிவகுப்பைப் பார்த்து, ராணுவத்தினருக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு அப்படியே தாங்கள் வசிக்கும் நாடுகளுக்குக் கிளம்ப இருக்கின்றனர். இந்தியாவைவிட்டு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் வசித்தாலும் பூர்வீகத்தை மறக்காமல், தங்களின் வம்சாவளி பாரம்பர்யத்தைக் கடைப்பிடிப்பதற்காவது ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வரவேண்டியது அவசியமாகிறது. 

அப்படி வரும் இந்தியர்களின் மன ஓட்டம், ‘சொர்க்கமே என்றாலும், அது நம்மூரு போல வருமா’ என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துவதாகத்தான் இருக்கும். தாய் நாடு, எப்போதுமே தாய்நாடுதான்...