இணை பொ.செ., துணை பொ.செ..? - ஓ.கே. சொல்வாரா தினகரன் | BJP's strategy to bring back TTV Dinakaran into ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (24/01/2019)

கடைசி தொடர்பு:08:34 (25/01/2019)

இணை பொ.செ., துணை பொ.செ..? - ஓ.கே. சொல்வாரா தினகரன்

இன்னும் ஒருமாதத்தில் தேர்தல் அறிவிப்பு வரவுள்ள நிலையில், இந்த இணைப்பு பேச்சுவார்த்தையை வேகப்படுத்தியுள்ளது பி.ஜே.பி. தினகரனை எப்படியும் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே குக்கர் சின்னத்தில் அவருக்கு செக் வைக்கப்பட்டதாகவும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்.

இணை பொ.செ., துணை பொ.செ..? - ஓ.கே. சொல்வாரா தினகரன்

``அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இல்லாமல் அ.தி.மு.க அணி கரைசேராது. அவரையும், அவரது கட்சியினரையும்  அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரும் வேலையைப் பாருங்கள். தினகரனுக்கும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என உறுதியை அளியுங்கள்” என்று டெல்லி உத்தரவைச் செயல்படுத்தும் முனைப்பில் கடந்த ஒருவாரமாக தினகரனைச் சந்தித்துப் பேசிவருகிறார்கள் முக்கியப் பிரமுகர்கள். 

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவில் பி.ஜே.பி. தரப்பு தீவிரமாக இருக்கிறது. அ.தி.மு.க-விலோ பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைப்பது இப்போது உகந்ததாக இருக்காது என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. மறுபுறம் தி.மு.க அணியோ காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க என வலுவான அணியாக இருக்கிறது. இதை எதிர்த்தது வலுவாகக் களம் இறங்கவேண்டிய அ.தி.மு.க கட்சி தினகரன் பிரிவினால் பிரிந்துகிடக்கிறது. அ.தி.மு.க-வின் வாக்குவங்கியில் கணிசமான அளவு, இப்போது தினகரன் வசம் உள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்குப் போட்டியாக வலுவான அமைப்பாகத் தினகரனின் அ.ம.மு.க. கட்சி உள்ளது.

தினகரன்

இந்நிலையில் அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைத்துத் தேர்தல் களத்தில் நின்றாலும் அ.தி.மு.க-வின் வாக்குவங்கி பிரிந்துகிடப்பதால், தி.மு.க-வுக்கு அது சாதகமாகப் போய்விடும் நிலை உள்ளது. சமீபத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகளிடம் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின், ``தினகரன் ஒவ்வொரு தொகுதியிலும் ஐம்பதாயிரம் வாக்குகளையாவது பிரித்துவிடுவார். அந்த வாக்குகளின் வித்தியாசமே நமக்குச் சாதகமாக அமைந்துவிடும்” என்று சொல்லியுள்ளார். இந்தத் தகவல் பி.ஜே.பி தரப்புக்குத் தெரிந்துள்ளது. தினகரன் பிரிக்கும் ஒவ்வொரு வாக்கும் தி.மு.க-வுக்குச் சாதகமாகச் செல்லும் என்பதை அ.தி.மு.க-வினரும் அறிந்தே வைத்துள்ளார்கள். 

தினகரன் கட்சியுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. ஏற்கெனவே பா.ம.க. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்பட்டது. ஆனால், பா.ம.க-வை தங்கள் அணிக்குள் கொண்டுவரும் திட்டத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது அ.தி.மு.க. ஒருவேளை, தினகரன் தரப்புடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்காதபட்சத்தில், அவர் தனித்தே தேர்தல் களத்தைச் சந்திக்கும் நிலை உள்ளது. இது அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவாகிவிடும். இதையெல்லாம் கணக்கில்கொண்ட பி.ஜே.பி. மேலிடம், தினகரனை எப்படியும் அ.தி.மு.க-வுக்குள் ஐக்கியப்படுத்திவிடவேண்டும் என்று முனைப்பு காட்டிவருகிறது. 

அ.தி.மு.க-விலோ, ``தினகரனைத் தவிர, அவர் கட்சியில் உள்ளவர்கள் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார்“ என்று சொல்லியிருக்கிறார்கள். தினகரனோ, ``நான் சொல்லும் கண்டிஷனுக்கு அ.தி.மு.க தரப்பு ஒத்துவந்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம்” என்று சொல்லியுள்ளார். அதாவது, அ.தி.மு.க-வில் இணைப்பு என்றால், தனக்கு முக்கியப் பொறுப்போடு கூடிய இணைப்பாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அ.தி.மு.க தரப்பில் தினகரனுக்குப் பொறுப்பு அளித்தால் கட்சியை அவர் கைப்பற்றிவிடுவார் என்று அச்சம் உள்ளது. அதனால்தான், ``தினகரனுக்கு எந்தப் பொறுப்பும் வழங்க முடியாது. சசிகலாவுக்குக்கூடப் பதவி வழங்கலாம். தினகரனுக்குப் பதவி வழங்கக் கட்சி விதிமுறைகளில் இடம் இல்லை” என்று சொல்கிறார்கள். இந்த இடர்ப்பாடுகள்தான் தினகரன் தரப்புடன் அ.தி.மு.க இணைந்துபோவதில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி மேலிடம் விரும்பியுள்ளது.

அ.தி.மு.க.

சமீபத்தில் முக்கிய ஆடிட்டர் (குருமூர்த்தி அல்ல) ஒருவர் மூலம் தினகரன் தரப்பிடம் பேசியுள்ளார்கள். அந்த ஆடிட்டர் அமித் ஷாவின் தூதுவராகவே தினகரனைச் சந்தித்துள்ளார். அப்போது, ``பி.ஜே.பி. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க விரும்பினாலும், நீங்கள் இல்லாமல் அந்தக் கூட்டணி வெற்றிபெற முடியாது. தமிழகத்தில் தி.மு.க-வுக்கு எதிராக வலுவான கட்சியாக அ.தி.மு.க இருக்க வேண்டுமென்றால் நீங்கள் அ.தி.மு.க-வுடன் ஒத்துப்போவது மட்டுமே ஒரே வழி. உங்களுக்கு அ.தி.மு.க-வில் பொறுப்பு வழக்கும் வேலையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் திட்டப்படி பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா இருக்கட்டும். இணைப் பொதுச்செயலாளர் பதவியை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்ஸுக்கு வழங்கலாம். நீங்கள் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராகத் தொடருங்கள்” என்று சொல்லியுள்ளார். இதற்குத் தினகரன் தரப்பிலிருந்து “பார்க்கலாம்” என்று பதில் வந்துள்ளது. இப்போது தினகரன் தரப்பு நிதிநெருக்கடியிலும் இருந்துவருகிறது. அந்தத் தகவலும் பி.ஜே.பி. தரப்புக்குத் தெரியும். 

அதன்தொடர்ச்சியாக வேறு ஒரு வி.ஐ.பி. மூலம் மீண்டும் தினகரனைத் தொடர்புகொண்ட பி.ஜே.பி. தரப்பு, ``நீங்கள் இணைந்துவிட்டால் பவருக்கு சசிகலா வந்துவிடுவார். உங்கள் கரன்சிகள் எங்கெல்லாம் இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரியும். அதை வெளியே கொண்டுவர அப்போது வாய்ப்பாக அமைந்துவிடும்” என்று தூண்டில் போட்டுள்ளார்கள். இதை, தினகரனும் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார். இந்தத் தகவல் வேறு ஒரு நபர் மூலம் சசிகலாவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தினகரன் முடிவைத் தெரிந்துகொண்ட பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். 

இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வரவுள்ள நிலையில், இந்த இணைப்பு பேச்சுவார்த்தையை வேகப்படுத்தியுள்ளது பி.ஜே.பி. தினகரனை எப்படியும் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே குக்கர் சின்னத்தில் அவருக்கு செக் வைக்கப்பட்டதாகவும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள். தினகரன் தரப்பில் கேட்டால், ``இணைப்பு குறித்து எந்த விஷயத்தையும் இதுவரை தினகரன் பேசவில்லை. ஆனால், இணைப்பு என்று நடந்தால் தினகரனுக்கு கட்சிப் பொறுப்பு இல்லாமல் அது சாத்தியப்படாது. அதற்கு அ.தி.மு.க தரப்பு ஒத்துக்கொள்வதும் கடினம்” என்கிறார்கள். 

இணைப்பை நடத்தித் தங்கள் வேட்பாளர்களுக்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நினைக்கிறது பி.ஜே.பி.! 


டிரெண்டிங் @ விகடன்