Published:Updated:

கப் கேக் குக், பாப் கட், காட்டன், கண்டிப்பு! - பிரியங்கா காந்தியின் மறுபக்கம்

`அரசியல் என்னை ஈர்க்கவில்லை. அரசியலில் ஈடுபடாமலும் மக்களுக்கு உதவ முடியும்' என்று சொன்ன பிரியங்கா, வரும் நாடாளுமன்றத் தேர்தல் முதல் நேரடி அரசியலில் இறங்கப் போகிறார்.

கப் கேக் குக், பாப் கட், காட்டன், கண்டிப்பு! - பிரியங்கா காந்தியின் மறுபக்கம்
கப் கேக் குக், பாப் கட், காட்டன், கண்டிப்பு! - பிரியங்கா காந்தியின் மறுபக்கம்

ழுத்தளவு ஹேர் கட், மொடமொட காட்டன் புடவை, முகம் நிறைய சிரிப்பு, சின்னக் கன்னக்குழி, கூப்பியக் கரங்கள்...  தன் பாட்டியின் பிரதிபிம்பமாக அம்மாவுக்காகவும், அண்ணனுக்காகவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்கு வரும் பிரியங்கா காந்தி, இதுவரை நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. தற்போது, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேரடிப் பொது வாழ்வில் ஈடுபட ஆரம்பித்திருக்கிற பிரியங்காவின் பர்சனல் பயோடேட்டா இதோ...

* ஜனவரி 12, 1972-ம் வருடம் பிறந்த பிரியங்காவுக்குத் தற்போது 47 வயது ஆரம்பித்திருக்கிறது. 

* அரசியல் காரணங்களால் பல பள்ளிக்கூடங்களில் படித்தார். பாட்டி இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நிரந்தரமாகப் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டு, ஹோம் ஸ்கூலிங் முறையில் படிக்க வைக்கப்பட்டார். 

* டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை சைக்காலஜி படித்தவர், அதன் பிறகு புத்தமதத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டால் `புத்திஸத்'தில் மாஸ்டர் டிகிரி முடித்தார். மன அமைதிக்காகக் கடந்த 11 வருடங்களாக விபாசனா தியானப் பயிற்சியையும் செய்து வருகிறார் பிரியங்கா. 

* ராபர்ட் வதோதரா, பிரியங்காவின் விளையாட்டு வயதுத் தோழன். நட்பு காதலாகி பின்னாளில் திருமணத்தில் முடிந்தது. ரோஹன், மிரயா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ரோஹன், அமேதி தொகுதிக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்பது, நண்பர்களுடன் பாராளுமன்றக் கூட்டங்களைப் பார்க்கிற அளவுக்கு, தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையாகிவிட்டார். 

* நேரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் போர்டிங் ஸ்கூலில்தான் படிப்பார்கள் என்றிருந்த மரபை, தன் மகளை நார்மல் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்ததன் மூலம் பிரேக் செய்தார் பிரியங்கா. குழந்தை வளர்ப்பில் இவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

* பிரதமர்களின் வீட்டுப் பெண் என்றாலும், தன் பிள்ளைகளுக்கான தினசரி சமையலை தானே செய்வது,  தினமும் அவர்களை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வது, அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களையும் பிரசாரங்களுக்குத் தன்னுடன் அழைத்துச் சென்றது என்று, இந்திராவின் பேத்திக்கு சராசரி இந்திய அம்மாவின் முகமும் இருக்கிறது. 

* தந்தையைப் பறிகொடுத்தபோது, பிரியங்காவுக்கு 19 வயது. ராஜீவின் இறுதிக்காரியங்களின்போது ஒரு மகளாகத் தன் ரணங்களைத் தாண்டி, தன் அம்மா சோனியாவை நிமிஷ நேரம்கூட பிடிவிடாமல் அணைத்துக்கொண்டேயிருந்த பிரியங்கா அந்நாளில் தன் தாய்க்குத் தந்த அந்த அரவணைப்பு, காலம் கடந்தாலும் மக்களின் கண்கள் மறக்க முடியாத கோலம்.   

* அப்பா ராஜீவைப் போலவே போட்டோகிராபியில் ஆர்வம் கொண்டவர். அதற்கான ஒரு கோர்ஸையும் முடித்திருக்கிறார். மற்றபடி புத்தக வாசிப்பும் சமையலும் பிரியங்காவின் ஆல்டைம் ஃபேவரைட். குழந்தைகளுக்குப் பிடித்த கப் கேக் செய்வதில் எக்ஸ்பர்ட். `என் வாழ்க்கையை அவளுக்கு அர்ப்பணித்துவிட்டேன்' என்று கணவர் உருகும் அளவுக்கு அன்பில் இல்லறம் அமைக்கும் மனைவி. 

* பாட்டியின் உருவ ஒற்றுமை மட்டுமல்ல, விருப்ப ஒற்றுமையும் உண்டு பிரியங்காவுக்கு. ஒன்று, பாட்டியைப் போலவே மொடமொட காட்டன் புடவைகள்தான் இவருக்கும் அதிகம் பிடிக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போதெல்லாம் அமேதி தொகுதியில் வசிக்கும் மூத்த தலைமுறையினர், பிரியங்காவை இந்திராவாகவே நினைத்தற்கு இந்த ஆடைத் தேர்வும் ஒரு காரணம். அதே சமயம், பார்லிமென்ட் கூட்டங்களைப் பார்ப்பதற்காகச் செல்லும்போது, கறுப்பு வெள்ளை பேன்ட் ஷர்ட்டில் கம்பீரம் காட்டுவது பிரியங்காவின் ஸ்டைல். 

* அடுத்து, ஒரு கூட்டத்தைக் கட்டிப்போடுகிற மிகத் திறமையான பேச்சாளர் பிரியங்கா. பிரசாரங்களின்போது இவரும் தன் பாட்டியைப் போலவே ஓங்கிய குரலில் உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார். அவர் ஆளுமை பல மேடைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

* மூன்றாவதாக, இந்திராகாந்தியைப் போலவே தவறுகளைச் சகித்துக்கொள்ள முடியாத குணமும் இவரிடம் இருக்கிறது. இதன் காரணமாக, கடுமையானவர் என்ற விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கிறார் பிரியங்கா. 

* 'அரசியல் என்னை ஈர்க்கவில்லை. அரசியலில் ஈடுபடாமலும் மக்களுக்கு உதவ முடியும்' என்று சொன்ன பிரியங்கா, வரும் நாடாளுமன்றத் தேர்தல் முதல் நேரடி அரசியலில் இறங்கப் போகிறார். மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகிறார், மக்கள் அவருக்கு என்ன தரப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.