Published:Updated:

கட்சி மாறுகிறாரா மைத்ரேயன்? - தொடரும் அதிருப்தியால் `திடீர்' முடிவு

கட்சி மாறுகிறாரா மைத்ரேயன்? - தொடரும் அதிருப்தியால் `திடீர்' முடிவு
கட்சி மாறுகிறாரா மைத்ரேயன்? - தொடரும் அதிருப்தியால் `திடீர்' முடிவு
கட்சி மாறுகிறாரா மைத்ரேயன்? - தொடரும் அதிருப்தியால் `திடீர்' முடிவு

அ.தி.மு.க கூட்டணியில், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு, கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஏழு பேர் கொண்ட குழு, தேர்தல் பிரசாரம் நடத்த ஏழு பேர் கொண்ட குழு... என்று மூன்று பிரிவுகளாகக் கட்சியின் முன்னணி தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பவர்ஃபுல் குழு... டம்மி குழு... என்கிற பேனரில் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் கட்சியின் முக்கிய வி.ஐ.பி-க்கள் இடம்பெற்றுள்ளனர். இதைப் பவர்ஃபுல் குழு என்கிறார்கள். அதே சமயம், கட்சியில் சீனியர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களை ஓரங்கட்டி வைக்க நினைப்பார்கள். அவர்களைத் தவிர்க்கவும் முடியாது. அந்த மாதிரி பிரமுகர்களுக்கென்றே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசார வியூகம் நடத்த இன்னொரு குழு... இந்த இரண்டையும் டம்மி குழு என்றே அ.தி.முக-வில் வர்ணிக்கிறார்கள். 

கட்சியின் தலைமைக்குப் பிடிக்காத வேறு சிலர் குழுவில் இடம்பெறாமலே கழட்டிவிடப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பேனரில் வருகிறார் அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி-யான மைத்ரேயன். இவரைத் தவிர, ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஏதாவது ஒரு பதவி தந்துவந்தார். தம்பித்துரை, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர். அமைப்புச் செயலாளர்கூட. ஏனோ தம்பித்துரையை பவர்ஃபுல் குழுவில் சேர்க்கவில்லை என்பதோடு, பிரசார பணிகளை மேற்கொள்ளும் டம்மி குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக... அதாவது, பத்தோடு பதினொன்றாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

கட்சி மாறுகிறாரா மைத்ரேயன்? - தொடரும் அதிருப்தியால் `திடீர்' முடிவு

பி.ஜே.பி. எதிர்ப்பு கோஷம் போடுவதால் தம்பிதுரை ஓரங்கட்டப்பட்டாராம். கோவை மாவட்ட அ.தி.மு.க-வில் ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்கக் கூடாது என்று அமைச்சர் வேலுமணி கருதியதால், அதே மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எந்தக் குழுவிலும் இடம் இல்லை. ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்... இருவரும் பி.ஜே.பி-யுடன் கூட்டணியை விரும்பவில்லை என்று பிரதமர் மோடியிடம் கோள் மூட்டினார் மைத்ரேயன். டி.டி.வி.தினகரனை பி.ஜே.பி-யுடன் சேர்க்க வைக்க முயற்சி எடுக்கிறார் என்றெல்லாம் மைத்ரேயன் பற்றி புகார் பட்டியல் வாசிக்கப்பட அவரும் கழட்டிவிடப்பட்டார். எந்தக் குழுவிலும் அவர் பெயர் இல்லை. இதனால், கடும் கோபத்தில் இருக்கிறார் மைத்ரேயன். அடுத்த சில நாள்களில் தனது அதிருப்தியைக் காட்டும் வகையில் பி.ஜே.பி-க்குத் தாவப்போகிறார் என்று அவரின் ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 

கட்சி மாறுகிறாரா மைத்ரேயன்? - தொடரும் அதிருப்தியால் `திடீர்' முடிவு

பிரதமர் மோடியுடன் நேரிடையாக எந்த நேரமும் பேசக்கூடிய அளவுக்கு டெல்லியில் செல்வாக்கு மிகுந்தவர் மைத்ரேயன். ராஜ்யசபா எம்.பி-யாக இவரை ஜெயலலிதா நியமித்தார். அவரின் பதவிக் காலம் இந்த ஆண்டு ஜூலையுடன் முடிகிறது. மைத்ரேயன்தான் அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-யின் டெல்லி மேலிடத்துக்கும் இணைப்புப்பாலமாகச் செயல்பட்டவர். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசி. அவர் தர்மயுத்தம் நடந்த காலகட்டத்தில் பி.ஜே.பி-க்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் இடையே நல்லெண்ணத்தூதுவராகச் செயல்பட்டவர். வெறும் எம்.எல்.ஏ-வாக ஓ.பி.எஸ் இருந்தபோது, அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க வைத்தவர். 

டெல்லியில் ஒருமுறை பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பி.எஸ்ஸுடன் போயிருந்தார் மைத்ரேயன். ஏதோ அவசர அலுவல் காரணமாக, யாரையும் சந்திக்காமல் காரை நோக்கி பிரதமர் வேகமாகப் போக, இவர் பின்னால் ஓடி காரின் முன்பக்கம் தட்ட காரை நிறுத்தச் சொல்ல, கீழே இறங்கினார் பிரதமர். ஓ.பி.எஸ்ஸை அருகில் நிறுத்த, இவரிடமிருந்து பொக்கேயை பெற்றுக்கொண்டு சில நிமிடங்கள் பேசிவிட்டு காரில் கிளம்பினார் பிரதமர் மோடி. 

கட்சி மாறுகிறாரா மைத்ரேயன்? - தொடரும் அதிருப்தியால் `திடீர்' முடிவு

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, மைத்திரேயனுக்கு டெல்லியில் இருக்கும் செல்வாக்கை ஒழித்துகட்ட அ.தி.மு.கவின் எம்.பி. ஒருவர் முயன்று, அதில் ஜெயித்தார். மைத்திரேயனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஜெயலலிதா, அத்துடன் நிறுத்திக்கொண்டார். இதற்கு காரணமானவர் இன்னார் என்று பிரதமர் மோடியிடம் மைத்ரேயன் அந்த எம்.பி. பற்றி புட்டுபுட்டு வைத்தார். அன்றைய தினம் முதல், இன்று வரை அந்த எம்.பியை பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை. ஒரங்கட்டி வைக்கும்படி பி.ஜே.பி-க்கும், டெல்லி உயர்மட்ட அதிகாரிகளுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்தது. அதையடுத்து, அந்த எம்.பி-யானவர் பி.ஜே.பியை கடுமையாக சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மைத்ரேயனும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி பேனரில் அ.தி.மு.க-வின் முக்கிய பிரமுர்களை இழுக்க வியூகம் வகுப்பார் என்று தெரிகிறது. 

இதுபற்றி அ.தி.மு.க அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்... ``மைத்ரேயன் டபுள் கேம் ஆடுகிறார். இங்கே எங்களிடம் சொல்வது ஒன்று. டெல்லியில் போய் சொல்வது வேறு. யாருடன் கூட்டணி என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. ஆனால், மைத்ரேயனோ... டி.டிவி. தினகரனை பி.ஜே.பி கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்கிறார். அதற்காக, கட்சித் தலைவர்களைப் பற்றி அவதூறான தகவல்களை பி.ஜே.பி தலைவர்களிடம் பரப்பி வந்தார். இதுதொடர்பாக நடந்த டெல்லி சந்திப்புகள், போன் தொடர்பு... இவையெல்லாம் ஆதாரத்துடன் எங்களுக்குத் தெரியவந்தது. கடுப்பான பி.ஜே.பி தலைமை... தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்க்க பிரதமர் மோடி வரவில்லை. தமிழக அரசுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தி வைத்து போக்குக் காட்டியது. இதற்கெல்லாம் காரணமான மைத்ரேயன் எப்படித் தேர்தல் கூட்டணி பங்கீடு செய்யும் குழுவில் சேர்க்க முடியும்?’’ என்கிறார்.

மைத்ரேயன் தரப்பில் விசாரித்தோம்... ``இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருக்கிறார் மைத்ரேயன். அவரின் எம்.பி பதவிக்காலம் முடிய ஆறு மாதங்களே இருக்கின்றன. எனவே, அவர் பி.ஜே.பி பக்கம் போக வாய்ப்புகள் அதிகம்'' என்கிறார்கள். 

-சூரஜ்