Published:Updated:

`சட்டமன்றத் தேர்தலில் ச.ம.க தனித்துப் போட்டியிடும்'! - தூத்துக்குடியில் சரத்குமார் அறிவிப்பு

`சட்டமன்றத் தேர்தலில் ச.ம.க தனித்துப் போட்டியிடும்'! - தூத்துக்குடியில் சரத்குமார் அறிவிப்பு
`சட்டமன்றத் தேர்தலில் ச.ம.க தனித்துப் போட்டியிடும்'! - தூத்துக்குடியில் சரத்குமார் அறிவிப்பு

``20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது. ஆனால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்” என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மாநில மகளிர் செயலாளர் ராதிகா சரத்குமார், ``பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். சமூக சேவையின் தொடர்ச்சிதான் அரசியல். வீட்டில் நிர்வாகம் செய்யும் நீங்கள், நாட்டிலும் நிர்வாகம் செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ச.ம.க, போட்டியிடுவது குறித்து தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்” எனப் பேசினார்.

இறுதியாகப் பேசிய சரத்குமார், ``பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய காலகட்டத்திலேயே கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது ச.ம.க, பெண்களுக்கு ஆண்கள் சம உரிமை அளிக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு, தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கான தளத்தை உருவாக்குகிறார் கனிமொழி. அதற்காகவே தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கிறார். அதே தேர்தலை நோக்கி தமிழகம் முழுவதும் தி.மு.க செய்யும் ஸ்டன்ட்தான் ஊராட்சி சபைக் கூட்டங்கள். இதற்கு முன்பு கிராமம் கிராமமாகச் சென்று ஊராட்சி சபைக் கூட்டம் என்ற பெயரில் ஏன் மக்களை சந்திக்கவில்லை?

கடந்த 11 ஆண்டுகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்ததால் ச.ம.க-வின் வாக்கு வங்கி என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. கூட்டணியில் இருந்ததால் எங்களது பலம் என்னவென்றே தெரியாமலே போய்விட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் சமத்துவ மக்கள் போட்டியிடாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நெல்லை தொகுதியில் ச.ம.க சார்பில் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா போட்டியிட வேண்டும் என மகளிரணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானத்திலும் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை செய்து அறிவிப்போம்.

நேற்று, இன்று கட்சி ஆரம்பித்தவர்கள் நான்தான் அடுத்த முதலமைச்சர் எனச் சொல்லும்போது, பல கட்சிகள் மூலம்  22 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள நான் முதலமைச்சர் ஆவேன் எனச் சொல்வதில் என்ன தவறு உள்ளது. நான் முதலமைச்சர் ஆவேன் என நம்பிக்கை உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில், பெண் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், வன்முறைக் குற்றங்களைத் தனி விரைவு நீதிமன்றங்கள் அமைத்து தண்டனைகள் வழங்கி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்திட அரசு பரிசீலிக்க வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை அல்லது தூத்துக்குடி தொகுதியில் ச.ம.க மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.