Published:Updated:

`தம்பிதுரையின் திடீர் மனமாற்றம்!’ - கரூர் அரசியலில் புதிய பரபரப்பு

`தம்பிதுரையின் திடீர் மனமாற்றம்!’ - கரூர் அரசியலில் புதிய பரபரப்பு
`தம்பிதுரையின் திடீர் மனமாற்றம்!’ - கரூர் அரசியலில் புதிய பரபரப்பு

`கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தமுறை நின்றால், தோல்வியைச் சந்தித்து விடுவோமோ’ என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அ.தி.மு.க தலைமையிடம்.''ராஜ்யசபா எம்.பி ஆகிக்கிறேன்' என்று கேட்பதாக கிளம்பும் தகவல்களால் கரூர் அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் நாடாளுமன்ற தொகுதில் மொத்தம் 4 முறை எம்.பியாகவும்,அதிலும் கடைசி இரண்டு முறை தொடர்ச்சியாக எம்.பியாகவும் இருக்கிறார். அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கிறார். 'அ.தி.மு.க தலைமை மத்திய பா.ஜ.க அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறது' என்று சொல்லப்படுகிறது. ஆனால்,தம்பிதுரையோ நாடாளுமன்றத்திலும், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளிலும்,பா.ஜ.கவுக்கு எதிராக கச்சைக் கட்டி வருகிறார். இது பா.ஜ.க - அ.தி.மு.க கட்சி மேல்மட்ட புள்ளிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில்,வரும் 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதே கரூர் தொகுதியில் களம் காணுவதற்காக ஆயத்தமானார் தம்பிதுரை. கடந்த சில மாதங்களாக தொகுதி முழுக்க மக்களைச் சந்த்து,கோரிக்கை மனுக்களைப் பெற்று,அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து,உடனடியாக நடவடிக்கை எடுக்க வைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு போகும் இடங்களில் எல்லாம் மக்கள் கடும் எதிர்ப்பையே பதிவு செய்தனர். இருந்தாலும், அசராமல் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஒருமாதகாலமாக தொகுதிக்கு விசிட் அடிக்காமல்,ஆப்சென்ட் ஆனார். காரணம் விசாரித்தபோதுதான், 'இந்தமுறை தம்பிதுரை கரூர் தொகுதியில் நின்று எம்.பியாக விரும்பவில்லை. ராஜ்யசபா எம்.பியாகி நாடாளுமன்றத்திற்குச் செல்ல பிரியபடுகிறார்' என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 

இதுபற்றி,நம்மிடம் பேசிய கரூர் அரசியலை உற்றுக் கவனிக்கும் விபர பார்ட்டிகள் சிலர், ``தம்பிதுரையின் இந்த திடீர் பல்டிக்கு, தொகுதிக்குள் அவருக்கு இருக்கும் கடுமையான எதிர்ப்பு ஒரு காரணம் என்றாலும் ,முக்கியக் காரணம் தி.மு.கவுக்கு தாவிய செந்தில்பாலாஜிதான். அ.தி.மு.கவில் இருவரும் இருந்தபோது, கடந்த 2011 ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் செந்தில்பாலாஜி மாவட்டச் செயலாளராகவும்,போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது கரூர் எம்.பியாக இருந்த தம்பிதுரையை செந்தில்பாலாஜி மதிக்காமல்,ஓரங்கட்டினார். அந்த ஆட்யின் இறுதியில் செந்தில்பாலாஜியின் பதவிகளை ஜெயலலிதா மூலமாக லாபி செய்து பறிக்க வைத்தார். செந்தில்பாலாஜிக்கு மாற்றாக இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு சீட் வாங்கி கொடுத்து, ஜெயிக்க வைத்தார். அதன்பிறகு,செந்தில்பாலாஜி அ.தி.மு.கவில் இருந்தவரையில் இருவரும் அவரை அடக்கியே வைத்திருந்தனர். அதோடு, செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் எல்லாம் ரெய்டு அடிக்க வைத்தார்கள். 

அந்த கோபத்தை நெஞ்சில் தாங்கி கொண்டிருக்கும் செந்தில்பாலாஜி, தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைக்க தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு வாகாக தி.மு.கவுக்குப்போன அவருக்கு ஸ்டாலின் 41 நாள்களிலேயே மாவட்டப் பொறுப்பாளர் பதவியை வழங்கி இருக்கிறார். ஸ்டாலினிடம், 'அதற்கு பரிசாக கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.கவை ஜெயிக்க வைப்பது என் பாடு' என்று உறுதி கொடுத்திருக்கிறார் அவர். அதற்காக, பக்காவாக பிளான் பண்ணி, இப்போதே பூத் கமிட்டி அமைப்பது, வாக்காளர்களைக் கவர்வது என்று செந்தில்பாலாஜி துல்லியமான வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டார். அதனால், ஏற்கெனவே கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இருக்கும் கடும் எதிர்ப்பு, செந்தில்பாலாஜியின் அசுர வேகம் உள்ளிட்ட விசயங்களெல்லாம் சேர்ந்து தன்னை வெற்றிபெற வைக்க விடாமல் செய்துவிடுமோ' என்று நினைக்கிறார் தம்பிதுரை. இந்தமுறை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தோற்றால், தனது அரசியல் வாழ்க்கை முடிவுவுக்கு வந்துவிடும் என்றும் அவர் எண்ணுகிறார். போதாக்குறைக்கு பா.ஜ.க, தன்னை குப்புறத்தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருப்பதையும் அவர் கவனத்தில் கொள்ளாமலில்லை. அதனால்,'பேசாமல் இந்தமுறை ராஜ்யசபா எம்.பியாகிவிடுவோம்' என்று இப்போதே அ.தி.மு.க தலைமையிடம் நச்சரிப்பை தொடங்கிவிட்டார்" என்றார்கள். 

இதுகுறித்து தம்பிதுரை தரப்பினரிடம் விசாரித்தோம். ``தம்பிதுரை ராஜ்யசபா எம்.பி பதவி கேட்பதாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றதால் அவர் சென்றுவிட்டார். அதனால்தான் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்வுகள் நடைபெறவில்லை. மற்றபடி அவர் எங்கயும் போகமாட்டார். இதே கரூர் தொகுதியில்தான் களமிறங்குவார். மற்றபடி இதுபோன்ற வெளிவரும்  தகவல்களில் உண்மையில்லை’' என்றதோடு முடித்துக் கொண்டனர்.