Published:Updated:

`பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்வரை எழுவர் விடுதலை சாத்தியமில்லை' - சுப்ரமணியன் சுவாமி ஓபன் டாக்!

`பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்வரை எழுவர் விடுதலை சாத்தியமில்லை' -  சுப்ரமணியன் சுவாமி ஓபன் டாக்!
`பா.ஜ.க ஆட்சியில் இருக்கும்வரை எழுவர் விடுதலை சாத்தியமில்லை' - சுப்ரமணியன் சுவாமி ஓபன் டாக்!

சங்கர மடத்தில் உள்ள மடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெறுவதற்காக இன்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காஞ்சிபுரம் வந்திருந்தார். விஜயேந்திரரை சந்தித்துப் பேசியதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சுப்பிரமணிய சுவாமி. அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

“39 தொகுதியிலும் திமுக வெற்றியடையும் என்று சொல்கிறார்களே?”

“அப்படிச் சொல்வதற்கு தி.மு.கவிற்கு அதிகாரம் உண்டு. தமிழகத்தில் நீண்ட வருடமாக அரசியலில் இருந்தவர்கள் அவர்கள். தேர்தல் வரும் என்பதால் இப்படிச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.கவின் கூட்டணிக்கு எதிர்காலம் கிடையாது. சினிமா டயலாக் மாதிரி ஸ்டாலின் பேசிக் கொண்டு வருகிறார்.“

“பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

பிரியங்கா காந்தி எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார் என்று சொன்னால் ஒரு பெரிய விழா நடத்தி அறிவிக்கட்டும்.

“பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி முடிவாகிவிட்டதா?“

தமிழ்நாட்டில் பா.ஜ.க யாருடன் கூட்டணி வைக்கும் என இன்னும் முடிவு செய்யவில்லை.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ளவர்கள் விடுவிக்க வாய்ப்பு உண்டா?”

ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் வெளியே வரமுடியாது. பிரதமரைக் கொள்வது என்பது சாதாரண விஷயமா? வெளிநாட்டு பயங்கரவாதத்துடன் சேர்ந்து கொண்டு பிரதமரைக் கொலை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது. பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் வரை அவர்கள் விடுதலையாக முடியாது.

“துணை முதல்வர் தலைமைச் செயலகத்தில் யாகம் செய்திருக்கிறாரே?”

அதை எப்படி நிறுத்த முடியும். அவருக்கு அதிகாரம் இருக்கிறது யாகம் செய்கிறார்.

“சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறதா?”

நான்கு வருடம் தண்டனை பெற்று சிறைக்கு சென்றிருக்கிறார் சசிகலா. இன்னும் இரண்டரை வருடம்தான் தண்டனை பாக்கி இருக்கிறது. அங்கிருந்து கொண்டே அவரால் கட்சி நடத்த முடியும். அந்த திறமை அவருக்கு உண்டு.

“தி.மு.கவினர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்கிறீர்களே?”

அவர்கள் நிறைய ஊழல் செய்திருக்கிறார்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன். ப. சிதம்பத்தை முதலில் சிறைக்கு அனுப்ப வேண்டும். ராகுல் காந்தி இந்த நாட்டின் குடிமகனே கிடையாது. அதை இன்னும் இரண்டு வாரத்தில் நான் நிரூபிப்பேன்" என்றார்.