Published:Updated:

`மனசாட்சி உறுத்தியதால்தான் அரசியலுக்கு வந்தேன்' - கமல்ஹாசன் பேச்சு

`மனசாட்சி உறுத்தியதால்தான் அரசியலுக்கு வந்தேன்' - கமல்ஹாசன் பேச்சு
`மனசாட்சி உறுத்தியதால்தான் அரசியலுக்கு வந்தேன்' - கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன் கடலூர் தேவனாம்பட்டினம், நெய்வேலி மந்தாரக்குப்பம், விருத்தாசலம் ஆகிய ஊர்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசினார். அப்போது விருத்தாசலத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அவர் பேசியதாவது, ``என்னுடைய மனசாட்சி, என்னை உறுத்தியதால் தான், அரசியலுக்கு வந்தேன். அரசியல்வாதிகளை முதலாளிகளாக நினைத்துவிட்டீர்கள். அவர்கள் முதலாளி இல்லை; நீங்கள் தான் முதலாளி. உங்களுடைய அதிகாரத்தை நீங்கள் கைப்பற்றியாக வேண்டும். எனக்குக் கிடைத்த பணம், புகழ் அனைத்துக்கும் நீங்கள்தான் பங்காளிகள். கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவன முதலாளிகள் சரியாக வரி செலுத்துவதில்லை. அவர்கள் கஜானாவை காலி செய்வதும் அதை நீங்கள் நிரப்புவதுமாக உள்ளது. உங்களுக்கு இலவச சாப்பாடு போட்டு பிரயோஜனம் இல்லை. தடபுடலாக மீன் குழம்பு சாப்பாடு போட விரும்பவில்லை. தூண்டில் வாங்கித் தரவே விரும்புகிறேன். 

தமிழகத்தை சொர்க்க பாதையாக மாற்ற வேண்டும்; நான் சாவதற்குள் மாற்ற வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு வந்துள்ளேன். பதவியும் உயிரும் நிரந்தரம் அல்ல, அதை மறந்து ஆடுகின்றனர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். ஆனால் தண்ணியில்லாத ஊரில்? தாகமும், பஞ்சமும் பெருகக் கூடாது. அதை மாற்றவே வந்தேன். தயவு செய்து ஓட்டுக்குக் காசு வாங்காதீர்கள். அது உங்கள் பணம், உங்கள் பையில் இருந்து எடுத்து, அவர்களுக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு, சொற்ப பணத்தை உங்களுக்குத் தருகின்றனர்.

என் வாழ்க்கையை உங்களுக்குத் தருகிறேன். அதை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள். என் உழைப்பு, நேரம், உணர்வைத் தருகிறேன். நான், மனக்கோட்டை கட்டவில்லை; தேவைப்பட்டால் கோட்டையைப் புதிதாகவே கட்டுவோம். இந்த, கூர் ஆயுதத்தைச் சரியாக பயன்படுத்துங்கள். அது, ரத்தம் வர வைக்காது, சுத்தம் வர வைக்கும். ஊழல் நிறைந்த சூழலை சுத்தம் செய்வோம். அமெரிக்காவிலும் லஞ்சம் இருக்கிறது, ஆனால் குறைத்திருக்கிறார்கள். அதுபோல், நம்மாலும் முடியும். நெகிழியை தடுத்தது அரசு இல்லை; அது சட்டம் தான் நிறைவேற்றியது. 

ஆனால், செயல்படுத்தியது நீங்கள் தான். வடநாடுகளில் ஊழல் நிறைந்துவிட்டது எனக் கேலி செய்துள்ளோம். ஆனால், பீகாரில் இருந்து என்னிடம் போனில் கிண்டல் செய்கின்றனர். தமிழகம் தலைகீழாக மாறிவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். நம்மால் முடியும். என்னிடம், திட்டங்களை சொல்லுங்கள், சொல்லுங்கள் என அவசரப்படுத்துகின்றனர். ஏனென்றால், காப்பியடிக்கத் தான். அதை அப்படியே பிட், அடிக்கின்றனர். கிராம சபை என்ற திட்டத்தை தயவுசெய்து பயன்படுத்துங்கள் என துாது வந்தேன். ஆனால், என் வாலில் தீ வைக்கப் பார்க்கின்றனர். நான் தூதுவன் தான், என் வாலில் தீ வைத்தால், கோட்டை எரிந்துவிடும்; உருகிவிடும். என்னுடைய வாழ்க்கை, உணர்வு, நேர்மையை உங்களுக்குத் தருகிறேன். அதை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்’ என்றார்.

முன்னதாக அவர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் பேசும் போது, ``இங்குக் கூட்டம் அதிகமாக உள்ளது. ஓட்டுப் போடுவது உங்கள் கடைமை. ஒட்டுக்காகப் பணம் வாங்கினால் கேள்வி கேட்க முடியாது. ஒட்டுக்காகப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம், ரூ 10 ஆயிரம் அல்ல ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால்  அவ்வளவு நலத்திட்டங்களைச் செய்ய முடியும். அனைவரும் வாக்களியுங்கள், உங்களை வாக்குகளை நோட்டாவிற்கு போடாதீர்கள். இவ்வாறு பேசினார். 

பின்னர்  நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பேசும் போது, ``என்எல்சி நிறுவனத்தில் ஏற்கனவே இரண்டு சுரங்கங்கள் உள்ளது. மூன்றாவது சுரங்கம் அமைப்பதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் மக்கள் நீதி மையம் கலந்துகொள்ளும். என்எல்சியில் பணிபுரிய வெளி மாநில மக்களை வேலையில் சேர்ப்பதை தவித்து நெய்வேலியைச் சுற்றியுள்ள  கிராம மக்களை வேலைக்குச் சேர்க்க வேண்டும். மக்களாகிய நீங்கள் தான் தலைவன், யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏமாந்தது போதும். நான் உங்களுக்கு வேலை செய்ய வந்துள்ளேன். புதிய மாற்றத்தைக் கொண்டு வர நீங்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்" என்றார்.