Published:Updated:

`நாங்களே டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம்!’ - கொதிக்கும் நன்னியூர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள்

துரை.வேம்பையன்
`நாங்களே டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம்!’ - கொதிக்கும் நன்னியூர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள்
`நாங்களே டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டோம்!’ - கொதிக்கும் நன்னியூர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள்

 அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவிய 41 நாள்களில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது கரூர் மாவட்ட தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. `கடைசி நேரம் வரையில் எனது பதவியைப் பறிக்கப் போறதை கட்சித் தலைமை எங்களுக்குச் சொல்லவே இல்லை' என்று புலம்பிக்கொண்டிருக்கிறது கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தரப்பு.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அ.ம.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பல்வேறு பிணக்குகள் காரணமாக, கடந்த மாதம் 14-ம் தேதி தி.மு.க-வில் ஐக்கியமானார். அதோடு, கடந்த மாதம் 27-ம் தேதியே ஸ்டாலினை கரூருக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி 30,425 பேரை தன்னோடு தி.மு.க-வில் இணைத்து, ஸ்டாலினை திக்குமுக்காட வைத்தார் செந்தில்பாலாஜி. தொடர்ந்து, ஸ்டாலினை வைத்து ஊராட்சி சபைக் கூட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் பூத் ஏஜென்ட்கள் கூட்டம் என்று நேர்த்தியாகக் கூட்டங்களை நடத்தி, மிரள வைத்தார். அதன் பலனாக, செந்தில்பாலாஜி தரப்பே எதிர்பார்க்காத அளவுக்கு கட்சி மாறிய 41 நாள்களிலேயே செந்தில்பாலாஜிக்கு கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுத்து, தி.மு.க-வினர் மத்தியில் சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் வித்திட்டிருக்கிறார். கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரனுக்கே தனது பதவி பறிக்கப்பட்டு, செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட தகவல் டிவியில் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பை பார்த்துதான் தெரிந்ததாம். நன்னியூர் ராஜேந்திரனுக்கு தி.மு.க நெசவாளர் அணியின் மாநிலச் செயலாளர் பதவியைக் கொடுத்திருக்கிறது தி.மு.க தலைமை. 

இதுபற்றி, நம்மிடம் பேசிய முன்னாள் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் சிலர், ``செந்தில்பாலாஜிக்குப் பதவி கொடுத்தது, எங்கண்ணனுக்கு பதவி கொடுத்ததைப் பற்றியெல்லாம்கூட எங்கண்ணன் கவலைப்படவில்லை. ஆனா, தனது பதவி பறிக்கப்பட்டதை டிவியில் பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டோமேங்கிற கொடுமைதான் அவரை வாட்டுது. ஜனநாயகக் கட்சின்னு சொல்லப்படுற தி.மு.க-வில் இப்படி செஞ்சிருப்பது வேதனை. செந்தில்பாலாஜிக்குக் கட்சித் தலைமை பதவி கொடுத்தது 24-ம் தேதி இரவு 9 மணி. ஆனால், அன்னைக்கு மதியம் 2 மணிபோல் எங்கண்ணன் கரூர் மாவட்ட தி.மு.க ஃபேஸ்புக் பக்கத்தில், மறுநாள் கரூர் மாவட்டக் கழகம் சார்பில் நடக்க இருந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் பற்றி தகவல் போட்டார்.

மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். ஆனா, தலைமை எங்கண்ணனை ஒரு வார்த்தைகூட கேட்காம, அன்னைக்கு இரவு திடுதிப்புன்னு க.அன்பழகன் மூலமா பதவியைப் பறித்து, செந்தில்பாலாஜிக்கு தூக்கிக் கொடுத்துட்டு. ஃபேஸ்புக் பக்கத்துல அண்ணன் போட்ட அந்தத் தகவலையும் டெலிட் பண்ணிட்டாங்க. அவ்வளவு அவசரமா, இரவு நேரத்துல பதவியைப் பறித்து, அவருக்குக் கொடுத்ததின் அவசியம் என்ன? இதுபற்றி தலைவரை சந்தித்து அண்ணன் முறையிட இருக்கிறார். செந்தில்பாலாஜியால் கரூர் மாவட்டத்தில் தி.மு.க அழியப்போவுது" என்றார்கள் ஆக்ரோஷமாக.

செந்தில்பாலாஜி தரப்பில் பேசினால், ``உண்மையில் கட்சி மாறிய 41 நாள்களில் எங்கண்ணனுக்கு தி.மு.க தலைமை மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்ததைப் பார்த்து, கரூர் மாவட்ட தி.மு.க-வினர் கோபப்பட வேண்டும்தானே? ஆனா, நன்னியூர் ராஜேந்திரனைத் தவிர வேறு யாரும் கோபப்படவில்லை. காரணம், 'செந்தில்பாலாஜி அந்தப் பதவிக்குத் தகுதியானவர்தான்'னு நினைப்பதுதான். அதேநேரம், நன்னியூர் ராஜேந்திரனால், சரிந்த கரூர் மாவட்டத் தி.மு.க-வின் இமேஜை செந்தில்பாலாஜியால் மட்டுமே தூக்கிநிறுத்த முடியும். அதைத் தி.மு.க தலைமையும் உணர்ந்திருக்கு. கரூர் மாவட்டத் தி.மு.க-வினரும் உணர்ந்திருக்கிறார்கள்" என்றார்கள்.
 

நன்னியூர் ராஜேந்திரனிடம் பேச முயன்றோம். போனை அட்டன்ட் செய்த அவரது உதவியாளர் `கோழி’ செந்தில், ``அண்ணன் தலைவரைப் பார்த்து பேசிகிட்டு இருக்கார். வெளியே வந்ததும், உங்ககிட்ட பேசச் சொல்றேன்’’ என்றார். இதுகுறித்து அவரது தரப்பு விளக்கத்தைக் கொடுக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.