Published:Updated:

``திராவிடம் என்பது குடும்பத்துக்கோ, 2 கட்சிகளுக்கோ மட்டும் சொந்தமானதல்ல’’ - கமல் பேச்சு!

``திராவிடம் என்பது குடும்பத்துக்கோ, 2 கட்சிகளுக்கோ மட்டும் சொந்தமானதல்ல’’ - கமல் பேச்சு!
``திராவிடம் என்பது குடும்பத்துக்கோ, 2 கட்சிகளுக்கோ மட்டும் சொந்தமானதல்ல’’ - கமல் பேச்சு!

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கடலூரில் 2 சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், ``திராவிடம் என்பது ஒரு நாடு தழுவிய விஷயம். ஒரு குடும்பத்தாருக்கோ, 2 கட்சிகளுக்கோ சொந்தமானது அல்ல. திராவிடம் என்பது கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. தென் இந்தியாவில் மட்டும் திராவிடர்கள் வாழ்வதாக நினைக்க வேண்டாம். வட இந்தியாவிலும் திராவிடர்கள் வாழ்கிறார்கள். தமிழக அரசியலில் 40 வருடமாக ரவுடிகள் அதிகம் உள்ளனர். இதனால்தான் படித்தவர்கள் எல்லோரும்  கூப்பிட்டு நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எனக் கூறுகின்றனர். ஆனால், எல்லாரும் ரவுடிகளா என்று கேட்டால், இல்லை. அரசியல் தீண்டத் தகாத விஷயம் கிடையாது. அதைத் தீண்டி ஆக வேண்டும். சுத்தப்படுத்த வேண்டும். அது நமது கழிவாக இல்லாமல், அது நிறைவாக மாற வேண்டும். பெரிய மாண்புகளை உருவாக்கி வைத்துள்ளோம். அதை நாம் இழந்துவிட்டோம். அதை மீட்டெக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நாம் எந்த வித்தியாசமும் பார்க்காமல் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும், வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் தமிழ்நாட்டை இந்த அவல நிலையில் இருந்து மீட்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது அறிவிப்போம். அரசியலில் நல்லவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். கடை நிலையில் உள்ள ஏழைக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் நிலை.  

ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும் என எண்ணுகிறோம். அரசியல் காரணங்களுக்காக ஏழ்மையைப் பாதுகாத்து வைத்துள்ளோம் நாம். பெரிய நிலச் சுவான்தார்களிடம் உங்களிடம் நிறைய இடம், பணம் இருக்கு. ஏன் ரோடு போடலை என்று கேட்டால்- அவர்கள் ஐயா ரோடு போட்டா பள்ளிக்கூடம் வந்திடும், பள்ளிக்கூடம் வந்தால் படித்துவிடுவான். படித்துவிட்டால் யூனியன் வந்துவிடும், யூனியன் வந்துவிட்டால் சம்பளம் கூட்டிக் கேட்பான், வேலை செய்ய மாட்டான். அதனால் சிறிய பள்ளம், மேடு இருந்தாலும் சாலை இப்படியே இருக்கட்டும் என்கிறார். இது வல்ல இந்தியக் கனவு. பணக்காரன் மட்டும் இப்படி நினைக்கவில்லை ஏழையும் தன்னைவிட கீழே உள்ள ஏழையை அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறான். அவன்கூட இருக்கிறவனைப் பங்காளியாக நினைக்காமல், தனக்கு மேலே உள்ளவனைத்தான் நினைக்கிறான். மது விலக்கை அரசால் செய்ய முடியாது எல்லோரும் சேர்ந்துதான் செய்ய வேண்டும்'' என்றார்.

முன்னதாக, கடலூரில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சான்றோர் விருது வழங்கும் விழா சி.கே பள்ளி வளாகத்தில் நடந்தது. கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கி 9 நபர்களுக்கு விருதுகளை வழங்கினார்.