Published:Updated:

`தமிழ் மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையும் செய்யவில்லை' - தம்பிதுரை குற்றச்சாட்டு!

`தமிழ் மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையும் செய்யவில்லை' - தம்பிதுரை குற்றச்சாட்டு!
`தமிழ் மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையும் செய்யவில்லை' - தம்பிதுரை குற்றச்சாட்டு!

"இதுவரை பா.ஜ.கவோடு அ.தி.மு.க கூட்டணி வைக்கவில்லை. ஒருவேளை கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமானால்,தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் அது தெரியவரும்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியுள்ளார்.

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம்,கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில், பூமி பூஜை மற்றும் அம்மா பார்க் திறப்பு விழா நிகழ்ச்சிகள் என்று 13 திட்டங்களுக்காக பூமி பூஜை,ஒரு கோடியே 78 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கலந்து கொண்டு, துவக்கி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் ஆங்காங்கே ஆசிரியர்கள் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டம் குறித்து தற்போது உயர்நீதிமன்றமே விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நான், மாநில அரசின் போராட்டம் குறித்து பேசுவது சரியாக இருக்காது. அதுகுறித்து, அந்தந்த அமைச்சர்கள் கூறினால்தான் நல்லது. ஒரு சில இடங்களில் கைதும், கைதிற்கு பின்னர் விடுதலை என்றும் இருக்கின்றது. இந்நிலையில், அதற்காக தான் தற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக அரசு அறிவித்துள்ளது. இது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தினை போல உடனடியாக சரியாகிவிடும். மாணவர்களுக்காகதான் ஆசிரியர்களே தவிர, ஆசிரியர்களுக்காக மாணவர்கள் கிடையாது. ஆகவே, ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தினை பார்க்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றமே கூறியுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அது ஒரு தற்காலிக ஏற்பாடு தானே தவிர, நிரந்தர ஏற்பாடு இல்லை. பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணியில் இருக்குமா என்று கேட்கிறார்கள். அப்படி பா.ஜ.கவோடு இன்று வரை கூட்டணி இல்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'எந்த கட்சி தமிழகத்திற்கு நல்லது செய்கின்றதோ, அந்த கட்சியுடன் தான், கூட்டணி' என்று சொல்லியுள்ளார். பா.ஜ.கவின் மத்திய அரசு, தமிழக மக்களுக்கும், சரி, தமிழர்களுக்கும் எந்த வித நல்லதும் செய்ய வில்லை. ஒருவேளை கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமேயானால், தேர்தல் அறிவித்த பிறகே தவிர, இதுவரை கூட்டணி கிடையாது. தமிழக அரசின் கோரிக்கைகள் நிறையவற்றை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி ஆகியவற்றைகளை எதிர்த்தோம். ஆனால், அதை செவிசாய்க்கவில்லை.

ஜி.எஸ்.டியில் ரூ 5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. பா.ஜ.க கூட்டணி குறித்து மேலிடம் ஆலோசிக்கும். பா.ஜ.க கூட்டணி குறித்து பேசினாலே பிரச்னை வரும். தமிழர்களையும் ,தமிழ்நாட்டினையும் காக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க இயக்கம்தான். 'தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்து வருகின்றதா?' என்று என்னிடம் கேட்கிறீர்கள். அந்த கட்சி பற்றி நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். திட்டங்கள் தீட்டுவதில் மட்டுமே பா.ஜ.க முயற்சிக்கிறதே தவிர, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அக்கறை கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் செயல்பாடு, இடஒதுக்கீட்டு கொள்கை என்று அனைத்து விதத்திலும் பா.ஜ.கவுடன் ஒத்துவராது. இப்படி இருந்ததால்தான், காங்கிரஸ் கட்சியே காணாமல் போய் விட்டது. 'நாளை நமதே;40-ம் நமதே' என்பதுதான் அ.தி.மு.கவின் தாரக மந்திரம்!" என்றார்.